அன்னி பெசண்ட் அவர்கள் இந்திய நாட்டின் விடுதலைக்கும், இந்திய பெண்களின் வீட்டு விடுதலைக்கும் போராடிய போராளி. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர். ஒரு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.
தோற்றம்
அன்னி வூட் பெசண்ட் அவர்கள் 1847 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் பைஜ்வூட், தாயார் எமிலி. அன்னி பெசண்டிற்கு ஐந்து வயது இருக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு பல கஷ்டங்களுக்கு இடையில் தான் அன்னி பெசண்ட் வளர்ந்தார்.

குடும்ப வாழ்க்கை
1867 ஆம் ஆண்டு பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். அப்போது அன்னி பெசண்டிற்கு வயது வெறும் 19. அவர்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை எவ்வளவு முயன்றும் குணப்படுத்த முடியவில்லை. குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பில் மனமுடைந்த அன்னி பெசண்டிற்கு கடவுள் மீதே சந்தேகம் ஏற்பட்டது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போனது. கணவர் மதகுரு என்பதால் அவர் கடவுள் பற்றி பேசியவைகளை அன்னி பெசண்டால் ஏற்க முடியவில்லை. 1873 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார்.
அன்னி பெசண்ட், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து “இந்திய மாதர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்!!
கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காக பேசினார். அன்னி பெசண்டின் அரசியல் சிந்தனை அவரது கணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. இறுதியாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார்.
முற்போக்கு சிந்தனை
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த அன்னி பெசண்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார். இவரது முற்போக்கு சிந்தனையால் “யூமால் தூசியன் அமைப்பு” என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியாக நியமனம் ஆனார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று இவர் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை அந்த காலத்திலேயே வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பிரும்மஞான சங்கம்
1889 ஆம் ஆண்டு “தி சீக்ரெட் டாக்ரைன்” என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி என்பவரை பாரிசில் சந்திக்கும் வாய்ப்பு அன்னி பெசண்டிற்கு கிடைத்தது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. கடவுள் இல்லை என்று கூறி வந்தவர் மீண்டும் ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினராகவும் சேர்ந்தார். 1891 ஆம் ஆண்டு பிளேவட்ஸ்கி இறந்த பிறகு பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார் அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.
1893 ஆம் ஆண்டு பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதல் முறை இந்தியா வந்த அன்னி பெசண்ட் சென்னை அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து நூல்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இந்திய சுதந்திர போராட்டம்
அந்த சமயத்தில் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசின் அடக்கு முறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. 1907 ஆம் ஆண்டு சூரத் நகரில் நடந்த இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அன்னி பெசண்ட், மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிரிவை தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார்.
அன்னி பெசண்ட் 1913 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக “காமன் வீல்” என்ற வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து “நியூ இந்தியா” என்ற பெயரில் நாளேடு ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார். நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, 1914 ஆம் ஆண்டு “இந்திய இளைஞர்கள் சங்கம்” (YMIA) என்ற அமைப்பை துவங்கினார்.
ஹோம் ரூல் இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதிலும் அதன் கிளைகளையும் உருவாக்கினார். மேலும் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.
இவற்றை எல்லாம் கவனித்த ஆங்கிலேய அரசு, அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி சில காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக அறிவித்தது. இதனால் ஆங்கில அரசு வேறு வழியின்றி செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
இந்திய காங்கிரஸ்
1917 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார். மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கிய போது, அவர்களுடன் ஏற்பட்ட சில கொள்கை முரண்பாடுகளால் 1929 ஆம் ஆண்டு முதல் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன் போலவே ஈடுபாடு காட்டி வந்தார்.
ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டும் போதாது, வயிற்றுக்கு உணவும் வழங்க வேண்டும் – அன்னி பெசண்ட்
பெண் விடுதலை
பெண் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கல்வி வழங்க வேண்டும், பெண்களுக்கு 21 வயது வரை திருமணம் செய்து வைக்கக் கூடாது, விதவை மறுமணத்தை ஆதரிக்க வேண்டும் என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் 1913 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து “இந்திய மாதர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.
கல்விக்கு முக்கியத்துவம்
படிப்பின் முக்கியத்துவம் உணர்ந்த அன்னி பெசண்ட் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது மட்டும் போதாது வயிற்றுக்கு உணவும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர் இறந்த சில ஆண்டுக்கு பிறகு தான் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இவர் 1904 ஆம் ஆண்டு ஒரு பெண்கள் பள்ளியை துவங்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.

மறைவு
அன்னி பெசண்ட் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை அடையாறில் உடல் நலக் குறைவால் அவரது 85 ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் ஒரு பள்ளியை நிறுவினார்கள். அது தற்போது அன்னி பெசண்டின் நினைவாக “பெசண்ட் ஹில் ஸ்கூல்” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்திய நாட்டிற்கு இவர் ஆற்றிய தொண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய தபால் துறை, 1963 ஆம் ஆண்டு அவரது பிறந்தநாளன்று இவரது படம் பதித்த அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
அக்டோபர் 1 – பிறப்பால் இந்தியர் இல்லை என்றாலும் அடிமைத்தனத்தை கண்டு வெகுண்டு, இந்திய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அன்னி பெசண்ட் அம்மையாரின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!