எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பாடல் எழுதிய ‘வாலிபக் கவிஞர்’ வாலி வாழ்க்கை வரலாறு!

Date:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மொத்தம் மூன்று ரங்கராஜன்கள் மிகப்பிரபலம். முதலாவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள். அடுத்து ரங்கராஜன் என்கிற சுஜாதா. குறும்பும், அறிவியலும், ஆன்மிகமுமாக எழுதித் தனியிடம் பிடித்தவர். மூன்றாவதாக, ரங்கராஜன் என்கிற கவிஞர் வாலி. வாலிபக் கவிஞர் வாலி!

பிறப்பு 

‘டி. எஸ் ரங்கராஜன்’ என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் வாலி அவர்கள். இவர் 1931 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 – ஆம் நாள், திருச்சி மாவட்டத்திலுள்ள “ஸ்ரீரங்கம்” என்ற இடத்தில் ஸ்ரீனிவாசன் ஐயங்காருக்கும், பொன்னம்மாள் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுடைய சொந்த ஊர் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறை ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதிலேயே ஒரு சிறந்த ஓவியனாகவும், கவிஞனாகவும் தன்னை வெளிப்படுத்திய வாலி அவர்கள், வெற்றிகரமாகத் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு ஓவியக்கலை பயின்றார்.

அதன் பிறகு, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை தொடங்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி. பின்னர், திருச்சி வானொலிக்கு ‘கதைகள்’, ‘நாடகங்கள்’ எழுதிக் கொடுக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

பாடலாசிரியர் வாய்ப்பு

ஸ்ரீரங்கத்தில் பத்திரிக்கைப் பணி, கவிதைகள் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது என நகர்ந்து கொண்டிருந்தது கவிஞர் வாலி அவர்களின் ஆரம்ப வாழ்க்கை. அதன் பிறகு, தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய டி. எம். சௌந்தரராஜன் அவர்களால், சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 1958 – ஆம் ஆண்டு “அழகர் மலைக் கள்ளன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார்.

அன்று முதல் சுமார் 15000 – ற்கும் மேலான திரைப்பட பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அன்று ‘எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு’ எழுதினார், பிறகு ‘கமல் – ரஜினிக்கு’ எழுதினார், அதன் பிறகு ‘விஜய் – அஜித்துக்கு’ எழுதினார். கடைசியில் ‘தனுஷ் – சிம்பு’ என நான்கு தலைமுறையையும் கடந்து பாடல்களை எழுதியவர்.

பிற படைப்புகள்

  • திரையிசைப் பாடல்கள் மட்டுமல்லாது, ‘அவதார புருஷன்’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘ராமானுஜ காவியம்’, ‘நிஜ கோவிந்தம்’, ‘கலைஞர் காவியம்’, ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
  • மேலும். ‘கலியுகக் கண்ணன்’, ‘காரோட்டிக் கண்ணன்’, ‘ஒரு செடியில் இரு மலர்கள்’ என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார்.
  • அதுமட்டுமல்லாமல், ‘பொய்க்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாலிபக் கவிஞர்

கவிஞர் வாலி மீதான மிகப்பெரிய மாற்றுக் கருத்து, அவரது பாடல்களின் தரத்தை வைத்து சொல்லப்படுவதுண்டு. தரம் என்பது இங்கு எதைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்த்தால் கவித்துவமும், அழகியலும் தான். அதற்கான கவிஞர்கள் தமிழ் சினிமாவில் கொட்டிக் கிடக்க பாமரனுக்குப் புரியும் துள்ளலான பாடல்களை எழுதினார் வாலி. “நான் மாஸுக்கும் காசுக்கும் தான்யா பாட்டெழுதுறேன்” என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்.

கதைக்களமும், இயக்குனரின் எண்ணமும் ஒரு பாடலுக்கான விதை. அதை விருட்சமாக்குவது கவிஞனின் கவிதை. வாலியின் கற்பனைத் தமிழுக்கு ஒரு கூட்டம் என்றால் அவரது விற்பனைத் தமிழுக்கு இன்னொரு ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்த இரண்டையுமே இறுதி வரை சமமாகக்  கையாண்டார் வாலி. அதனால் தான் கடைசிக் காலத்திலும் கூட “நேற்று அவள் இருந்தாள்” என்றும் “சோனாப்பரியா” என்றும் ஒரே படத்தில் பாடல் எழுத முடிந்தது.

வாலியின் கற்பனைத்தமிழையும், அழகியல் சார்ந்த கவித்துவத்தையும் விட்டுவிட்டு தமிழிசைப்பாடல்களின் அழகை எழுதி விட முடியாது. திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து, எழுத்துலகில் ‘மார்கண்டேயக் கவிஞர்’ என அனைவராலும் புகழப்பட்டார்.

கவிஞர் வாலி அவர்கள், தன்னுடைய பாடல் வரிகளால் கவிஞர்களை மட்டுமல்லாமல், பாமர மக்களையும் தலையசைக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால், இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இவர் நடையைப் பின்பற்றியே பாட்டெழுதிக் கொண்டிருக்கின்றனர். கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இவரின் காலங்களில்தான் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.

வாலியின் பிறந்தநாளான இன்று (அக்டோபர் மாதம் 29) அந்த வாலிபக் கவிஞரை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!