ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள் தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து, முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர்.
அவர்கள் மறைந்த பிறகு, பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர முடியவில்லை. கேமரா மற்றும் புகைப்படங்களின் வரவு வேறு ஓவியக்கலையை சற்று பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தது. ஓவியர்கள் எவ்வுளவு தான் தத்ரூபமாக வரைந்தாலும் அந்தப் படைப்புகளால் ஒரு புகைப்படத்தின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓவியக்கலை கிட்டதட்ட மரணித்துப் போகுமோ? என்று அச்சம் முளைவிடத் தொடங்கிய அந்தத் தருணத்தில் உதித்தார் ஓர் அற்புத ஓவியர். அவர் தான் ‘கியூபிசம்’ (cubism) என்ற புதிய ஓவிய பாணியை உலகுக்குத் தந்ததன் மூலம் ‘நவீன ஓவியங்களின் பிரம்மா‘ என்ற புகழைப் பெற்றிருக்கும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso).
தோற்றம்
பாப்லோ பிக்காஸோ 1881 – ஆம் ஆண்டு, அக்டோபர் 25 – ஆம் நாள் ஸ்பெயினில் பிறந்தார். இவர் சரியாகப் பேசத் தொடங்கும் முன்பே கையில் பென்சிலை வைத்துக் கொண்டு வட்டம் வட்டமாக கிறுக்கிக் கொண்டிருப்பாராம். பிக்காஸோவின் தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அருங்காட்சியகம் ஒன்றின் ஓவியப் பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார். பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையை நன்கு கற்றுக் கொண்டார் பிக்காஸோ.
பல்துறை வித்தகர்
1904 – ஆம் ஆண்டு தனது 23 – ஆவது வயதில் ‘கலைகளின் தலைநகரம்’ என்றழைக்கப்படும் பாரிஸூக்குச் சென்றார் பிக்காஸோ. அன்றிலிருந்து மரணம் வரை அவர் பிரான்சில் தான் வாழ்ந்தார்.
பாரிஸூக்குச் சென்ற மூன்று ஆண்டுகளில் அவர் வரைந்த ‘Les Demoiselles d’Avignon‘ என்ற ஓவியம் உலகை பிரமிக்க வைத்தது. அதில் ஐந்து பெண்களை அவர் வரைந்திருந்த வித்தியாசமான பாணி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நவீன ஓவியத்துறைக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளைவுகள் அதிகமின்றி நேர்க்கோடுகளும், முக்கோண வடிவங்களும் கொண்டு அது வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம் தான் ‘கியூபிசம்’ என்ற ஓவிய பாணியைத் தொடங்கி வைத்தது.

ஓவியம் மட்டுமின்றி ஆடை வடிவமைப்பு, சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராகத் திகழ்ந்தார் பிக்காஸோ. அவர் புனைந்த சில கவிதைகள் கூட மிகச் சிறந்தவை என்று சமகாலக் கவிஞர்களால் பாராட்டப்பட்டன. 78 ஆண்டுகளில் அவர் சுமார் 13,500 ஓவியங்கள், சுமார் 34,000 illustration எனப்படும் விளக்கப்படங்கள், சுமார் 400 சிற்பங்கள் உள்ளிட்ட படைப்புகளை உலகிற்கு வழங்கியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற பிக்காஸோ
1936-ஆம் ஆண்டு பிக்காஸோவின் தாய்நாடான ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் மூண்டது. அப்போது ஹிட்லரின் நாசிப் படைகள் ‘Guernica’ என்ற நகரின் மீது கடுமையான ஆகாயத் தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலில் Guernica நகர் சின்னாபின்னமாகச் சிதைந்தது. மரண ஓலம் ஒலித்த அந்த நகரின் மீதான தனது உணர்வுகளை அவர் கேன்வாஸ் துணியில் ஓவியமாகத் தீட்டி அதற்கு ‘Guernica’ என்று பெயர் சூட்டினார்.
தனது நாட்டில் இறந்து போனவர்களுக்காக அவர் தீட்டிய அந்த அதீத ஓவியம் இறவாப்புகழ் பெற்றது. ஹிட்லரின் நாசி ஆட்சியை எதிர்க்கும் சின்னமாக அந்த ஓவியம் கருதப்பட்டது. அந்தச் சின்னத்தை மட்டுமல்ல உலகிற்கு இன்னும் ஓர் அற்புதச் சின்னத்தையும் வழங்கினார் பிக்காஸோ.

கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்ட அவர், பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதி தொடர்பாக அந்தக் கட்சி ஏற்பாடு செய்த பல அனைத்துலகக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவ்வாறு 1950-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதி மாநாட்டுக்காக அவர் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தில் அவர் அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப்படுத்தி வரைந்திருந்தார் . அற்புதமாக அமைந்திருந்த அந்த ஓவியத்தையே அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது உலகம்.
ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஓவியக்கலைக்கு ஓர் புது உற்சாகத்தைக் கொடுத்த அந்த அற்புத ஓவியர் 1973 – ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 – ஆம் தேதி தமது 92 ஆவது வயதில் பிரான்சில் காலமானார்.
‘வித்தியாசமான கோணத்தில் சிந்தித்தால் விண்ணைத் தொடலாம்’ என்று உலகிற்கு உரக்கச் சொல்லி மறைந்த, உலகின் தலை சிறந்த ஓவியர் பிக்காஸோவை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.