இந்த வார ஆளுமை – சர்.சி.வி.ராமன் – நவம்பர் 5, 2018

0
143
இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன். இவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவர்  1930 – இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்றவர் சர். சி. வி. ராமன்.

பிறப்பும் கல்வியும் 

சந்திரசேகர வேங்கட ராமன் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில், நவம்பர் 7, 1888 – ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோரான சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோருக்கு ராமன் இரண்டாவது குழந்தை ஆவார் .

சி.வி. ராமன் அவர்களின் தந்தை, கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்ததால், அவர் வீட்டில் இயல்பாகவே கல்வி கற்பதற்குச் சாதகமான சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 – ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904 – ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாகத் திகழ்ந்த இவர், இயற்பியலில் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். பின் 1907 – ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.

சி.வி. ராமனின் ஆராய்ச்சிகள்

இந்தியாவில் அந்தக் காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அதனால், 1907 – ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். கல்கத்தாவில் பணியாற்றிய போது, அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அங்கிருந்த அறிவியல் அபிவிருத்திக்கான இந்தியச் சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

1917 – இல் கல்கத்தா பல்கலைக்கழகம், சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளிச் சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது. 1929 – ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930 – ல், தனது இயற்பியலுக்கான ஒளிச் சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு,  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்தக் கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

Credit : The Hans india

பிற பணிகள்

1930 – ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராகச் சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார்.  1947 – ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 – ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ என்ற ஒன்றை நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.

சர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இயற்கை எய்தினார். உலகப் புகழ் பெற்ற இந்திய இயற்பியல் விஞ்ஞானி சி.வி ராமன் அவர்களை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.