இந்த வார ஆளுமை – விஞ்ஞானி ஜி.என். ராமச்சந்திரன் – 8, அக்டோபர் 2018

0
85

கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்ற ஜி.என். ராமச்சந்திரன், 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் ஆவார். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. அதுமட்டுமல்லாமல், உயிரியலிலும் இயற்பியலிலும் பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

பிறப்பு: அக்டோபர்  8, 1922

பிறப்பிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 2001

பணி: விஞ்ஞானி

பிறப்பு

கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் அவர்கள்,  கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில்  ஜி. ஆர். நாராயணன் மற்றும் லட்சுமி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக அக்டோபர்  8, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது முன்னோர்கள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் 1942 – ஆம் ஆண்டு, தனது மின் பொறியியல் படிப்பைத் தொடங்கினார். ஆனால், அவருக்குப் பொறியியல் துறையை விட இயற்பியல் பயில மிகுந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்த அவர் பிறகு இயற்பியல் துறைக்கு மாறினார். 1942-ல் இயற்பியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சிவி. ராமன் வழிகாட்டுதலின் கீழ் ஐ.ஐ.எஸ்.சி-யில் ஒரு ஆய்வு மாணவராகவும் சேர்ந்தார்.

1947 – ஆம் ஆண்டு ஜி.என். ராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் (1947 முதல் 1949 வரை) தனது ஆய்வை மேற்கொண்டார். பின்னர் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் எக்ஸ்ரே (X-Ray) நுண்ணோக்கிக்கான ஒரு ஆய்வை மேற்கொண்டார். இது எக்ஸ்ரே (X-Ray) துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜி.என். ராமச்சந்திரனின் அறிவியல் ஆராய்ச்சிகள்

1949 – ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் உதவிப்  பேராசிரியராகவும் மற்றும் 1952 – இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத்  தலைவராகவும் பணியாற்றினார். 1954 – இல்  சவ்வு என்ற மூன்று வடிவ அமைப்பைப் பற்றி ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பிறகு மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

1963 – ஆம் ஆண்டு “மூலக்கூறு உயிரியல்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், இந்த ஆய்வு இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது மட்டுமல்லாமல் அவருடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் இது ஒரு முக்கியத் தருணமாகவும் அமைந்தது. X-கதிர் படிகவியல், பெப்டைட் தொகுப்பு, பிசியோ ரசாயன பரிசோதனை, என்.எம்.ஆர் மற்றும் கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

1971 – இல் ராமச்சந்திரனின் அவருடைய சக விஞ்ஞானி ஏ. வி. லக்ஷ்மிநாராயணனுடன் சேர்ந்து எக்ஸ்ரே வெட்டுவரைவுத் துறையில் சுழற்சி – கணிப்பு வழிமுறைகளுக்கான ஆய்வை மேற்கொண்டனர். வெற்றிகரமாக முடிந்த இவர்களின் ஆய்வு அதே ஆண்டில் ஒரு பதிப்பாகவும் வெளியிடப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

ஜி.என். ராமச்சந்திரன் அனைவராலும் விரும்பப்படும் ஒரு மரியாதைக்குரிய விஞ்ஞானி ஆவார். அவருடைய அறிவியல் ஆய்விற்காகக் கிடைக்கப் பெற்ற விருதுகள் சில

  • 1961 – இல் இந்திய இயற்பியல் துறையில் இவருடைய பங்களிப்பைப் பாராட்டி “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது” வழங்கப்பட்டது.
  • லண்டன் ராயல் சொசைட்டி ஆஃப்  ஃபெல்லோஷிப் விருது.
  • 1999 – இல் படிகவியல் துறையில் அவருடைய சிறந்த பங்களிப்பிற்காக படிகவியல் சர்வதேச ஒன்றியம் இவருக்கு இவால்ட் (Ewald) பரிசை வழங்கியது.

மறைவு 

1998-ல் ஜி.என். ராமச்சந்திரனின் மனைவி ராஜலட்சுமியின் இறப்பிற்குப் பின், தனிமையில் தவித்த அவர் ஜூலை 4, 2001 ஆம் ஆண்டு தன்னுடைய 79 – ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்தியாவின் புகழ் மிக்க விஞ்ஞானியான ஜி.என். ராமச்சந்திரன் அவர்களை, அவரது பிறந்த நாளான இன்று, இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.