22 முறை ஆஸ்கர் விருதை வென்ற மிக்கி மவுஸ் நாயகன் வால்ட் டிஸ்னி வரலாறு!

Date:

வால்ட் டிஸ்னி உலக புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற உலக புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர். உலகின் முதல் பேசும் மற்றும் முதல் வண்ண அனிமேஷன் படத்தை தயாரித்தவர். டிஸ்னிலேண்ட், டிஸ்னி வேர்ல்டு  என்னும் பொழுதுபோக்கு உலகங்களை உருவாக்கியவர்.

உங்களால் ஒன்றை கனவு காண முடிமானால், அதை உங்களால் செய்யவும் முடியும் – வால்ட் டிஸ்னி

தோற்றம்

வால்ட் எலியாஸ் டிஸ்னி 1901 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தார். இயல்பிலேயே படம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நான்காவது வயதில் குடும்பத்துடன் மிஸ்ஸோரிக்கு சென்ற பின் இவருடன் இவரது படம் வரையும் திறனும் வளர்ந்தது. அப்போது அவர் வரைந்த ஒரு குதிரை படத்திற்கு சன்மானம் கிடைக்க அவருக்கு படம் வரையும் ஆர்வம் இன்னும் அதிகமானது.

ஆஸ்வால்டுக்கு மாற்றாக டிஸ்னி வரைந்ததே  உலக புகழ் பெற்ற  மிக்கி மவுஸ் கார்ட்டூன்

Snow white and the seven Dwarfs
Snow white and the seven Dwarfs | Credit: D23

இளமைப் பருவம்

குடும்ப வறுமையின் காரணமாக தினமும் காலையில் வீடு வீடாக சென்று செய்தித்தாள் போட ஆரம்பித்தார். இதனால் சரியாக படிக்க முடியாமல் போன போதும் வார இறுதி நாட்களில் படம் வரைவதற்கான சிறப்பு வகுப்புகளுக்கு சென்றார். உயர்நிலைப் பள்ளியில் படித்த போது இவரது திறமையால் பள்ளியின் செய்தித்தாளில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். முதல் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் சேர இவர் அனுப்பிய விண்ணப்பம் இவரது இளம்  வயதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட போதும் தனது பிறந்த நாளை மாற்றி எப்படியோ அமெரிக்க ராணுவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். ஒய்வு நேரங்களில் அவர் ஆம்புலன்ஸின் மேல் கார்ட்டூன்களை வரைய ஆரம்பித்தார். மேலும் அவற்றில் சில ராணுவ செய்திதாள்களில் வெளியிடப்பட்டது.

தொழில் முயற்சிகள்

1920 ஆம் ஆண்டு டிஸ்னி ஐவெர்க்ஸ் என்பவருடன் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க, அது தோல்வியிலேயே முடிந்தது.அதனால் வேறு ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு “cutout animation” முறையில் விளம்பரப் படங்கள் எடுத்தனர். அப்போது தான்  டிஸ்னிக்கு அனிமேஷனில் ஆர்வம் வந்தது. அதன் விளைவாக அனிமேஷனில் சில கார்ட்டூன்களை வரைய தொடங்கினார். ஆனால் இந்த முறையை அவர் பணி புரிந்த  நிறுவனம் விரும்பாததால் டிஸ்னி தனது  சக பணியாளருடன் இணைந்து புது நிறுவனம் தொடங்கினார். அதன் மூலம் அவரது கார்ட்டூன்கள் விற்கப்பட்டன. அதன் விளைவாக 1921 ல் ஒரு ஓவிய அறையை (Laugh-O-Gram Studio ) வாங்கினார். ஆனால் பிறகு இதுவும் எதிர்பார்த்த வருவாயை தரவில்லை. மனம் தளராத டிஸ்னி 1923 ஆம் ஆண்டு ஹாலிவுட் சென்று தான் தயாரித்த “Alice’s comedies” ஐ மார்கரெட் வின்க்லெர் மூலம் வெளியிட்டார். அந்த வருவாயில் டிஸ்னியும் அவரது சகோதரரும் இணைந்து The Walt Disney Company” ஐ நிறுவி அதன் மூலம் பல கார்ட்டூன் படங்களை தயாரித்தார்கள். அதில் ஆஸ்வால்டு மிகவும் பிரபலமானது.

1937 ஆம் ஆண்டு வெளியான “Snow white and the seven Dwarfs” தான் உலகின் முதல் முழு பேசும் வண்ண அனிமேஷன் திரைப்படம்

Micky Mouse and Walt disney (வால்ட் டிஸ்னி வரலாறு)
Micky Mouse and Walt disney

மிக்கி மவுஸ்

ஆஸ்வால்டுவின் உரிமம் சிலரது ஏமாற்று வேலைகளால் அதை உருவாக்கிய டிஸ்னிக்கு  கிடைக்காமல் போனது . அதனால் ஆஸ்வால்டுக்கு மாற்றாக டிஸ்னி வரைந்ததே  உலக புகழ் பெற்ற  மிக்கி மவுஸ் கார்ட்டூன். முதலில் மிக்கி மவுஸ்க்கு  மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. அதன் பிறகு சினிஃபோன்(Cinephone) தொழில்நுட்பம் மூலம் மிக்கிக்கு டிஸ்னி  தானே குரல் கொடுத்தார். விளைவு  நல்ல வரவேற்பு கிடைத்தது.அதன் பிறகு எடுத்த எல்லா மிக்கி மவுஸ் படங்களும் வெற்றி பெற்றன. மேலும் மிக்கி மவுஸ் உருவாக்கியதற்காக டிஸ்னிக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. அதன் பிறகு கருப்பு வெள்ளை மட்டுமின்றி வண்ண படங்களும் எடுத்தார்.

1937 ஆம் ஆண்டு வெளியான “Snow white and the seven Dwarfs” தான் உலகின் முதல் முழு பேசும் வண்ண அனிமேஷன் திரைப்படம். அந்த படத்தின் யதார்த்தமான அனிமேஷனுக்காக டிஸ்னி பல புது முயற்சிகள்  செய்து வெற்றியும் பெற்றார். அதன் பிறகு இரண்டாம் உலகப் போரினால் சில தோல்விகள் கண்டாலும் தொடர்ந்து முயன்று பல படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல வெற்றிகள் பெற்றார்.

உலகில் ஆஸ்கருக்காக அதிக முறை பரிந்துரைக்கபட்டவரும் அதிக முறை வென்றவரும் வால்ட் டிஸ்னியே!

டிஸ்னிலேண்ட்

திரைப்படங்களுக்குப் பிறகு டிஸ்னியின் ஆர்வம் தீம் பார்க் பக்கம் சென்றது. பல முயற்சிகளுக்குப் பின் 1955 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பிரம்மாண்டமான குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம்  இருந்த “Disneyland” ஐ திறந்தார். நாளுக்கு நாள் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விளைவு! நாள் ஒன்றுக்கு சுமார் 20,000 பார்வையாளர்கள் வந்தனர்.

டிஸ்னி 1964 ஆம் ஆண்டு டிஸ்னிலேண்டை  விட பெரிய பொழுதுபோக்கு உலகம் கட்ட முடிவெடுத்து புளோரிடாவில் நிலம் வாங்கினார். ஆனால் அதனை கட்டி முடிக்கும் முன்பே அதாவது 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் டிஸ்னி நுரையீரல் புற்று நோயால் காலமானார். அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு சுமார் 25,000 ஏக்கரில்  “The Disney World” திறக்கப்பட்டு உலக புகழ் பெற்றது.இப்போதும் அங்கு வருடத்திற்கு சுமார் 52 மில்லியன் பார்வையாளர்கள்  வருகிறார்கள்.

விருதுகள்

வால்ட் டிஸ்னி இதுவரை 59 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 22 முறை அதை வென்றும் உள்ளார்.  மேலும் 4 முறை கவுரவ ஆஸ்கர் விருதுகள் பெற்று மொத்தம் 26 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார். இதுவரை உலகில் ஆஸ்கருக்காக அதிக முறை பரிந்துரைக்கபட்டவரும் அதிக முறை வென்றவரும் இவரே. மூன்று முறை  கோல்டன் குளோப்  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றோடு இன்னும்  பல விருதுகளையும் வென்றுள்ளார் வால்ட் டிஸ்னி.

இந்த வாரம் டிசம்பர் 5 ஆம் தேதி டிஸ்னியின் பிறந்த நாள். அதையொட்டி வால்ட் டிஸ்னியை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!