28.5 C
Chennai
Monday, July 4, 2022
Homeஇந்த வார ஆளுமைபெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை...

பெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை புரிந்த எம். எஸ். சுப்புலட்சுமி வரலாறு!

NeoTamil on Google News

எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஒரு கர்நாடக இசை பாடகி. தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இசை அரசி. இந்தியாவின் தொன்மையான கர்நாடக இசையை உலகமெங்கும் உணரச் செய்தவர். பெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற அன்றைய கட்டுப்பாடுகளை தாண்டி சாதனை புரிந்து பாரத ரத்னா விருது பெற்றவர் எம். எஸ். சுப்புலட்சுமி!!

எம். எஸ். சுப்புலட்சுமி வரலாறு
Credit: Highonscore

எம். எஸ். சுப்புலட்சுமி பிறப்பு

எம்.எஸ். சுப்புலட்சுமி ( மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ) அவர்கள், 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக மதுரையில் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பம். இவருடைய பாட்டி வயலின் கலைஞராகவும், தாய் சண்முகவடிவு வீணை மீட்டுவதிலும், பாடுவதிலும் புகழ்பெற்று விளங்கியவர்கள். இதனால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமி அவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.

இவரது நூறாவது பிறந்தநாளை சிறப்பிக்க  ஐ.நா சபை இவரது உருவம் இடம் பெற்ற ஒரு தபால் தலையை வெளியிட்டது!!

எம். எஸ். சுப்புலட்சுமி இசைப் பயணம்

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக கல்வி கற்ற எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள், கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் கர்நாடக சங்கீததையும், பண்டிட் நாராயணராவ் வியாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசையையும் கற்றார். அதே சமயம் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கும் போன்ற மொழிகளையும் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்று அடிக்கடி இசைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.

1926 ஆம் ஆண்டு எம். எஸ். சுப்புலட்சுமி அவரது தாயாரின் வீணை இசையில் பாடிய “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” என்ற பாடலின் முதல் இசைத்தட்டு வெளிவந்தது. அதாவது அவருடைய பத்தாவது வயதிலேயே! பின்னர், 1929 ஆம் ஆண்டு இவருடைய முதல் கச்சேரி சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேறியது. மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவில் பாடிய போது எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறன் பலராலும் அறியப்பட்டு புகழப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற பல கச்சேரிகளில் தன்னுடைய இனிமையான மற்றும் தெய்வீக குரலால் அனைவரையும் கவர்ந்தார் எம். எஸ். சுப்புலட்சுமி. இவர் இசையுலகில் நுழைந்த காலத்தில் கிராமபோன், வானொலி ஆகியவை பரவலாக ஆரம்பித்து இருந்ததால் அவரது குரல் எளிதாக பலரை சென்றடைந்தது.

எம். எஸ். சுப்புலட்சுமி திரைப்படங்கள்

1938 ஆம் ஆண்டு, கே. சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள், அப்படத்தில் பாடியதோடு நடிக்கவும் செய்தார். 1940 ஆம் ஆண்டு ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த “சகுந்தலை” என்ற திரைப்படம், எம். எஸ். சுப்புலட்சுமிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை தயாரித்த சதாசிவம் என்பவரை அதே ஆண்டு எம். எஸ். சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

m s s as meera
Credit: caravan magazine

கல்கியும் சதாசிவமும் சேர்ந்து கல்கி பத்திரிக்கையை தொடங்க விரும்பினார். 1941 ஆம் ஆண்டு வெளிவந்த “சாவித்திரி” படத்தில் சுப்புலட்சுமி நாரதராக நடித்து, அதில் பெற்ற சம்பளத்தை அவர்களுக்கு கொடுத்து பத்திரிக்கை தொடங்க உதவினார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே ஒரு ஆண் வேடமிட்டு நடித்து புகழ் பெற்றார்.

மீரா

எல்லியஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம் எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் கேட்பவர்களை மெய்மறக்க வைத்தது எனலாம். இந்தப் படம் பெற்ற வரவேற்பால் பின்னர் இந்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை சரோஜினி நாயுடு அவர்கள் பார்த்து விட்டு, “இந்தியாவின் இசைக்குயில்” என்ற பட்டத்தை எம். எஸ். சுப்புலட்சுமிக்கு வழங்கினார்.

எம். எஸ். சுப்புலட்சுமி பக்தி பாடல்கள்

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, வங்காளம் என பல மொழிகளில் பாடியுள்ளார். வெங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், ரங்கபுர விஹாரா, குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே போன்றவையும் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய சிறந்த பாடல்கள் ஆகும். பாரதியாரின் பாடல்களான, நெஞ்சுக்கு நீதியும், ஒளி படைத்த கண்ணினாய் வா வா போன்ற பாடல்களையும் பாடி மக்கள் மனதில் இசைவழியே தேசபக்தியை ஏற்படுத்தினார்.

m s s stamp
Credit: stampdigest

உலகப்புகழ்

1966 ஆம் ஆண்டு, ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கில பாடலை எம்.எஸ் சுப்புலட்சுமி பாடி உலக அளவில் பாராட்டை பெற்றார். உலகின் பல நாடுகளுக்கு கலாச்சாரத் தூதராகச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி இந்திய இசையை உலகில் பரவச் செய்த எம்.எஸ். சுப்புலட்சுமி பல கச்சேரிகளில் பாடி தான் சம்பாதித்தவற்றை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்தார். 1944 ஆம் ஆண்டு நான்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடி நிதி திரட்டி காந்தியடிகளிடம் கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு அளித்தார்.

இந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே!! – ஜவகர்லால் நேரு

1997 ஆம் ஆண்டு, சதாசிவம் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள், 1997 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடெமியில் பாடியதே அவருடைய கடைசி கச்சேரியாக அமைந்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அவருடைய 88 ஆவது வயதில் எம். எஸ். சுப்புலட்சுமி மரணம் அடைந்தார்.

எம். எஸ். சுப்புலட்சுமி விருதுகள்

எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் வாங்கிய விருதுகள் ஏராளம்.

  • 1954 ஆம் ஆண்டு பத்மபூஷன்
  • 1956 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது,
  • 1968 ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி
  • 1970 ஆம் ஆண்டு இசைப் பேரறிஞர் விருது
  • 1974 ஆம் ஆண்டு ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது
  • 1975 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது
  • 1975 ஆம் ஆண்டு சங்கீத கலாசிகாமணி
  • 1990 ஆம் ஆண்டு நாட்டு ஒருமைப்பாட்டிற்கானஇந்திராகாந்தி விருது
  • 1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதுதான பாரத ரத்னா
  • 2002 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருது

2005 ஆம் ஆண்டு இந்திய தபால் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது. 2006 ஆம் ஆண்டு இவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் திருப்பதியில் தம்புராவுடன் கூடிய எம்.எஸ் சுப்புலட்சுமியின் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இவரது நூறாவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இவரது உருவம் இடம்பெற்ற ஒரு தபால் தலையை வெளியிட்டது.

செப்டம்பர் 16 – தன் இனிய காந்த குரலால் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!!

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is DMCA copyright protected!