தமிழ் நாடு கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேல், “அறிஞர் அண்ணா” என்று அன்புடன் அழைக்கும், காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை), போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் சிறந்த தமிழ் அறிஞராக விளங்கினார்.
திராவிடக்கொள்கையுடன் தனித்தலைவராகவும் இருந்து தமிழருக்குச் சரியான இலக்கையும் வழித்தடத்தையும் காட்டியவர் அண்ணா.
அறிஞர் அண்ணா 15.09.1909 – ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கற்பதில் பெரும் ஆர்வம் கொண்ட அண்ணா அரசியல், பொருளியல் என இரு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தம்முடைய தமிழ் அறிவினாலும், பேச்சு ஆற்றலினாலும் இளைஞர்களைக் கட்டிப் போட்டவர். ஆங்கிலத்திலும் அண்ணா பெரும் புலமை பெற்று விளங்கினார்.
நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

1967 – இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் ஆறாவது முதல்வராக அரியணையில் அமர்ந்தார் அண்ணா. தம்முடைய நேர்மைத் திறத்தாலும், கொள்கை உரத்தாலும் ‘தென்னாட்டு காந்தி’ என்ற பெரும் சிறப்பினையும் பெற்றார். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப் போட்டார். அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக் காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்படுத்திய ஆட்சியை வழங்கினார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய அண்ணா தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலமே முதன்முதலாகப் பரப்பினார்.
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவைப் பரிகசிப்பதற்காக அவரிடம், ஏனென்றால் (Because) என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
“No sentence can begin with because because, because is a conjunction.”
” எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையைக் கொண்டு துவங்காது. அவ்வார்த்தை ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்.” என்று உடனே பதிலளித்தார்.
தமிழ்நாடு – பெயர் மாற்றம்
1967 – இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியைத் தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழிச் சட்டத்தினை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார். மேலும், மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
கடமை
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலக் கட்டத்தில், அரிசியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர் ஓட்டுனரிடம் கார் டிக்கியைத் திறந்து காட்டு என்றார். அவரும் கார் டிக்கியைத் திறந்து காட்டினார். டிக்கி முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வண்டியில் வந்தது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, ” தெரியாமல் நடந்து விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் ” என்றார் .
ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம் ” இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப் போகிறது என பயந்து அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே,அண்ணா நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அதிகாரியின் கையில் தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள் தான் உயர் பதவிக்கு வரவேண்டும். அதற்காகத் தான் உங்கள் பெயரைக் கேட்டேன் என்றார். அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது…
இப்போது உள்ள காலமாய் இருந்தால் என்ன நடக்கும்…??
அறிஞர் அண்ணா வாழ்ந்தது அறுபது ஆண்டுகள் தாம் என்றாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தலைவராக விளங்கினார். 03.02.1969 – ஆம் நாளன்று அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தார். தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்யவியலாத மாபெரும் இழப்பாகும். அவரின் இழப்பை எண்ணி தமிழகமே அழுதது. இன்றும் கூட சிறந்த முதல்வருக்கு, சிறந்த அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாக அறிஞர் அண்ணா தான் இருக்கிறார்.
மாபெரும் மேதை, பேரறிஞர் அண்ணாவை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்.