தத்தித் தவழும் பிஞ்சுக்கைகள் வெற்றியை எட்டிப் பிடிக்கும் நிலைக்கு உயர்த்துவதில் பெற்றோருக்குப் பின் ஆசிரியர்களே அடுத்த இடம் பெறுகின்றனர். அப்படி ஆசிரியராய்த் தன் வாழ்வைத் தொடங்கி புகழின் உச்சிக்குச் சென்ற சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைத்தான் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்னும் இடத்தில் 1888 – ஆம் ஆண்டு செப்டம்பர், 5 – ஆம் தேதி இராதாகிருஷ்ணன் பிறந்தார்.

ஆசிரியராக…
தாய் தான் குழந்தையின் முதல் ஆசிரியர், அதுபோல ஆசிரியர் குழந்தைகளின் இரண்டாம் தாய் எனப் பழமொழி ஒன்று உண்டு. ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டில் உள்ள மாணவர்களின் கையில் உள்ளது. அதைத் திறம்பட வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்ல ஆசிரியரின் பணி இன்றியமையாததாகிறது. சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரியில் சேர்ந்த இராதாகிருஷ்ணன் தத்துவத்தை முதல் பாடமாக எடுத்து அதில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.
1909 – ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகப் பணியேற்றார் இராதாகிருஷ்ணன். தன் கல்லூரிக் காலத்தில் விரும்பிக் கற்ற உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா போன்ற இந்துமதத் தத்துவங்களை ஆசிரியர் ஆன பின்னர் மாணவர்களுக்குக் கற்பித்தார். மடை திறந்த வெள்ளம் போல் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசும் வல்லவர். அவரின் விருப்பத்திற்கிணங்க அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1923-ஆம் ஆண்டு இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “இந்தியத் தத்துவம்” என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தத்துவார்த்த இலக்கியப் படைப்புகளில் உன்னதமான நூல் இதுவெனப் பல அறிஞர்களும் பாராட்டியுள்ளனர்.
- ஆந்திரப் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.
- அவருடைய நிகரில்லா தத்துவ அறிவு, அரசியல் ஆளுமை போன்றவற்றிக்காக உலகமெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்திருக்கின்றன.
- சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மொத்தம் 133 டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.
அரசியல் வாழ்க்கை

பல்துறை அறிவைப் பெற்றிருந்த இராதாகிருஷ்ணன் அவர்களை 1949 – ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமித்தது அப்போதைய ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான அரசு. பின்னாளில் இதுவே சோவியத் யூனியனுக்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான உறவுப் பாலம் அமைக்க அடித்தளமாய் இருந்தது. 1952 – ல், இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 – ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962 – ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1997 முதல் வருடந்தோறும் சிறந்த ஆசிரியருக்கான விருதினை டாக்டர் ராதாகிருஷ்ணன் என்னும் பெயரில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
- ராதா கிருஷ்ணன் 18 நூல்களை இயற்றியுள்ளார்.
எளிமையே வலிமை!!

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து தன் அயராத முயற்சிகள் மூலம் பல வெற்றிகளை ஈட்டிய ராதாகிருஷ்ணன் அவர்கள் அடிப்படையில் ஒரு எளிமை விரும்பி. பல உயரிய பதவிகளை வகித்தாலும் எளிமையாகவே இருந்த மாமேதை அவர். ஆசிரியர் பதவியிலிருந்து விலகி ஊர் திரும்பிய இராதாகிருஷ்ணன் அவர்களை லட்சக்கணக்கான மாணவர்கள் இரயில் நிலையம் வரை நடந்துவந்து வழியனுப்பினர். துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர், இந்திய அரசின் தூதுவர் எனப் பல பொறுப்புகளை வகித்தாலும் “நான் ஆசிரியராய் இருப்பதிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார். அப்பேர்ப்பட்ட மகத்தானவர் திரு. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக நியோதமிழ் கொண்டாடுகிறது.