இந்த வார ஆளுமை – ‘பொருளாதார மேதை’ டாக்டர் மன்மோகன் சிங் – செப்டம்பர் 24, 2018

0
58

இந்தியாவின் 14-வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங், சிறந்த சிந்தனையாளராகவும், அறிஞராகவும் கருதப்படுகிறார். பணிகளில் மிகச் சிரத்தையாகவும், தன்னுடைய கல்வியறிவைப் பயன்படுத்துபவராகவும் விளங்கினார்.

பிறப்பும் கல்வியும்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932-ல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1948-ல் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார். அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரைப் பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் 1957-ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 1962-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில்(D.Phill) பட்டத்தைப் பெற்றார்.

வகித்த பதவிகள்

டாக்டர் சிங்கின் சிறந்த கல்வி அறிவு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பெருமை மிக்க டெல்லி பொருளாதாரப் பள்ளி ஆகியவற்றில் கல்வி நிபுணராக இருக்க உதவியது. அந்தக் காலகட்டத்தில் அவர் யூஎன்சிடிஏடி (UNCTAD) செயலகத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். இதனால் 1987 மற்றும் 1990 -ஆம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சவுத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

1971-ல், டாக்டர் சிங் இந்திய அரசில் இணைந்தார். வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மிக விரைவிலேயே, 1972-ல் அவர் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசில், மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அறிந்து தெளிக !
‘‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்கு மற்றும் தன்னிறைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள்’’ என்ற அவருடைய புத்தகம், இந்தியாவின் உள்நோக்கு அடிப்படையிலான வர்த்தகக் கொள்கை பற்றி அலசுகிறது.

பொருளதாரச் சீர்திருத்தம்

சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை, 1991 முதல் 1996 வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியில் டாக்டர் மன்மோகன் சிங் இருந்தது தான். அப்போது அவர் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. மன்மோகன் சிங் என்ற தனிநபர் செய்த சாதனைகள் இன்றளவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன.

டாக்டர் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் (1987) ஆகும். மேலும்,

  • இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995),
  • சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசியச் செலாவணி விருது (1993 மற்றும் 1994),
  • சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993),
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956),
  • கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் மிகச்சிறப்பான மாணவராக இருந்ததற்காக ரைட்ஸ் பரிசு(1955) ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2004-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22-ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் 22 மே, 2009-ல் இரண்டாவது முறையாக பிரதமராக அவர் பதவியேற்றார்.

அவரது வெற்றியைப் பற்றி கேட்டபோது டாக்டர் சிங் “என்னுடைய கல்வியே நான் இப்பொழுது என்னவாக இருக்கிறேனோ அதற்குக் காரணம்” என்று கூறினார்.  அந்தக் கல்வியின் அறிவைப் பற்றிக் கொண்டே இன்றும் கூட மிகத் தகுதி வாய்ந்த தலைவராக இருக்கிறார். மன்மோகன் சிங், அவரது சொந்தத் தகுதி, கடின உழைப்பு, நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான முயற்சி மூலம் பெரும் சாதனை படைத்த சிலரில் ஒருவராக அறியப்படுகிறார்.

நாட்டின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவரான முன்னாள் பிரதமர்  ‘பொருளாதார மேதை’  டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.