ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் நடிப்பின் ‘என்சைக்ளோபீடியா’ என்று சிவாஜியைக் கூறினால் அது அதிகப்படியான புகழ்ச்சியல்ல. தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், முக பாவனை மற்றும் மாறும் உடல் மொழியாலும் தமிழக மக்களைக் கட்டிப்போட்டவர் சிவாஜி கணேசன். இன்றும் கூட யாரேனும் நம்மிடம் நடித்துக்காட்டினால், கேலி கிண்டலுக்காக ‘பெரிய சிவாஜி இவரு’ என்று கூறுவதுண்டு. அந்த அளவுக்கு நடிப்பின் இலக்கணமாக இருந்தவர் சிவாஜியாகத் தான் இருக்க முடியும்.
பிறப்பும் குடும்பமும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அக்டோபர் 1, 1918 – ஆம் ஆண்டு சின்னையா – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன். இவரது மனைவி பெயர் கமலா, மகன்கள் இராம்குமார், பிரபு (திரைப்பட நடிகர்) மற்றும் மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைத்துறையில் சிவாஜி
சிவாஜி பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘சக்ஸஸ்’ என்ற ஒற்றை வசனத்தில் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்‘ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார் கணேசன் என்ற பெயருடைய இளைஞர். கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய ‘தந்தை பெரியார்’ , அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்தப் பெயரே நிலைத்தது.
சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எண்ணிக்கை!
சிவாஜி கணேசன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வந்தார்.
- 300 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- 9 தெலுங்குத் திரைப்படங்கள்
- 2 ஹிந்தித் திரைப்படங்கள்
- 1 மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
- நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பல்வேறு ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, சிவாஜி கணேசனின் நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. அக்கால மேடை நாடகங்களில் சினிமா அளவிற்கான தொழில்நுட்பங்கள் இல்லாததால் உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களின், தேசத் தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தவர் சிவாஜி. பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிற்காகப் பேசப்பட்டவை.
Also Read: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த 10 படங்கள்!
அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றைத் தொடங்கினார். எனினும், நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணை வரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

பெற்ற பெருமைகள்
அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற முதல் இந்தியக் கலைஞர் சிவாஜி கணேசன். 1962 – ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் இந்திய கலாச்சாரத் தூதராக அங்கு சென்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஜான்.F. கென்னடியைச் சந்தித்தார். அப்போது அவரை கௌரவப்படுத்தும் விதமாக அவரை நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ ஒரு நாள் மேயராக நியமித்தனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது. பின்னர் சென்னை அடையாறில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு சிலை அங்கு இடம் மாற்றப்பட்டது.
நடிகர் திலகம் பெற்ற விருதுகள்
- ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது, 1960
- கலைமாமணி விருது, 1962 – 1963
- பத்ம ஸ்ரீ விருது, 1966
- பத்ம பூஷன் விருது, 1984
- செவாலியர் விருது, 1995
- தாதாசாகெப் பால்கே விருது, 1996
இந்தியத் திரையுலகின் மிகப்பெரும் ஆளுமையான, நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.