குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலின் இசையில் பல புதுமைகளைச் செய்தவர். கர்நாடக இசை பற்றி தெரியாதவர்கள் கூட அதை ரசிக்கும் வகையில் இனிமையாக, எளிமையாக வயலின் இசையை வழங்கியவர்.
தோற்றம்
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் 1935 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி, இராமசாமி சாஸ்திரி – மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
குன்னக்குடி வைத்தியநாதன், அவரது 12-வது வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஆரம்ப வாழ்க்கை
சண்முகநாதபுரம் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தந்தை ஒரு கர்நாடக இசைக் கலைஞர். புல்லாங்குழல், கிதார், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்டவர். தந்தையிடம் தென்னிந்திய பாரம்பரிய இசையைக் கற்ற வைத்தியநாதன் அவர்கள், அவரது 12-வது வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.

Credit: discogs
இசை பயணம்
ஆரம்ப காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். மேலும் 1976ல் இருந்து, அவரே தனியாகவும் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவர்களின் இசைக் கச்சேரி காரைக்குடியில் நடந்தபோது பக்க வாத்தியமாக குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலின் வாசித்ததே, அவரின் முதல் வயலின் அரங்கேற்றமாகும். வலையப்பட்டி சுப்பிரமணியம் என்ற தவில் வித்வானுடன் இணைந்து, பல வயலின் கச்சேரிகளை அரங்கேற்றியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை அரங்கேற்றியுள்ளனர்.
திரையுலகம்
தமிழில் பக்திப் பாடல்களுக்காக அவரது சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த வைத்தியநாதன் அவர்கள் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களில் பின்னணி பாடிய இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார்.
இவரது சிறப்பு என்னவென்றால் கர்நாடக இசை, திரைப்பட இசை போன்றவையோடு நிறுத்திக் கொள்ளாமல், பறவைகள் மற்றும் மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும், சிறிதளவு கூட மாற்றமில்லாமல், அப்படியே வயலினில் வாசித்துள்ளார். மேலும் தோடி ராகம் வாசிப்பதில் நிகரற்றவர்.
பிற பணிகள்
வைத்தியநாதன் அவர்கள் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். தஞ்சாவூரிலுள்ள திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலாளராக 28 ஆண்டுகளாக செயல்பட்ட இவர் பல ஆண்டுகளாக தியாகராஜ ஆராதனைகளையும் நடத்தி வந்தார். மேலும் ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி, இசை மூலமாக, சில நோய்களுக்குத் தீர்வு காண முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

Credit: Dattapeetham
குன்னக்குடி வைத்தியநாதன் விருதுகள்
1970 ஆம் ஆண்டு வெளியான “திருமலை தென்குமரி” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். இந்திய அரசால் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு இசைப்பேரறிஞர் விருது பெற்ற இவர், சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத நாடக அகாடமி விருது, கர்நாடக இசைஞானி விருது மற்றும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
மறைவு
வயலின் சக்கரவர்த்தி என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மார்ச் மாதம் 2 ஆம் தேதி குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்.