“நவீன அறுவை சிகிச்சையின் தந்தை” என அழைக்கப்படும் ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட இறப்புகளை குறைக்க ஆன்டிசெப்டிக் முறைகளைக் கண்டுபிடித்தவர். கார்பாலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய் தொற்றுக்களை அழிக்க முடியும் என விளக்கி சாதித்தவர்.

தோற்றம்
ஜோசப் லிஸ்டர் அவர்கள் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள அப்டன் என்னும் கிராமத்தில் பிறந்தார். மது விற்பனையாளராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் தான் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர். பள்ளியில் லிஸ்டர் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் சிறந்தவராக விளங்கினார்.
கல்வி
லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ஜோசப் லிஸ்டர் 1847 ஆம் ஆண்டு தாவரவியலில் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1852 ஆம் ஆண்டு மருத்துவத்திலும் பட்டம் பெற்றார். கூடவே அறுவை சிகிச்சைக்கான பயிற்சியையும் மேற்கொண்டு அறுவை சிகிச்சை நிபுணரான ஜேம்ஸ் சிமியிடம் உதவியாளராக சேர்ந்தார். கிளாஸ்கோ தேசிய மருத்துவமனையில் 8 ஆண்டுகள் அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்தார்.

நுண்ணுயிரிகள்
அந்த காலங்களில் அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் பலர் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் காயங்களில் உருவாகும் நோய் தொற்று. அதே போல அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கும் நோயாளியை பரிசோதிக்கும் முன்பு தங்கள் கைகளை கழுவ வேண்டும் என்பது கூட தெரியாமலேயே இருந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த நிலைமையைக் கண்டு மனம்வருந்திக் கொண்டிருந்த லிஸ்டர் 1865 ஆம் ஆண்டு நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் குறித்து லூயி பாஸ்டர் வெளியிட்ட கட்டுரையைப் படித்தார். அப்போது தான் நுண்ணுயிரிகளை பற்றி லிஸ்டருக்கு தெரிய வந்தது.
ஆன்டிசெப்டிக்
திறந்த காயங்களின் மூலம் நோய் கிருமிகள் உடலினுள் நுழைவதற்கு முன்பாக அவற்றை அழித்து விடுவது தான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு ஒரே வழி என லிஸ்டர் கருதினார். ஏற்கனவே பாஸ்டர் நுண்ணுயிரிகளை அழிக்க “வடிகட்டுதல், வெப்படுத்துதல் மற்றும் இரசாயனங்களை பயன்படுத்துதல்” என மூன்று வழிமுறைகளை கூறி இருந்தார். இவை எல்லாவற்றையும் சோதித்து உறுதிப்படுத்திய லிஸ்டர் மனித திசுக்களுக்கு வடிகட்டுதல் மற்றும் வெப்படுத்துதல் போன்றவை ஆபத்து என்பதால் இரசாயனங்களை மட்டும் பயன்படுத்த முடிவெடுத்தார். மேலும் பினாயில் (Phenol) என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். இதன் மூலம் ‘ஆன்டிசெப்டிக்’ அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.

தடுப்பு முறைகள்
ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் லிஸ்டர் தனது கைகளையும் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளையும் துணிகளையும் தூய்மையாக வைத்துக் கொண்டார். அறுவை சிகிச்சை அறையில் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இதற்காக கார்பாலிக் அமிலம் தெளிக்கும் கருவியை உபயோகப்படுத்தினார். அதே போல அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் காயத்திற்கு கார்பாலிக் அமிலத்தில் நனைத்த பஞ்சை வைத்து சோதித்தார். அதன் பிறகு அவனுக்கு எந்த நோய் தொற்றும் ஏற்படவில்லை என்று கண்டறிந்தார். சுத்தமான கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரும் அவரது கைகளை கார்பாலிக் அமிலத்தில் கழுவ வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
பணிகள்
இது குறித்த இவரது முதல் ஆய்வுக் கட்டுரையை 1867 ஆம் ஆண்டு வெளியிட்டர். இவரது மகத்தான இந்த கண்டுபிடிப்பு வழக்கம் போல முதலில் பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் லிஸ்டர் மனம் தளராமல் தான் கண்டறிந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினார். 1869 ஆம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய ஏழு ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. இவர் கூறிய முறைகளினால், ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் 1861-1865 ஆம் ஆண்டுகளில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45% இருந்த இறப்போர் அளவு, 1869 ஆம் ஆண்டு 15% என்ற அளவுக்குக் குறைந்தது. பின்பு உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இவரது நடைமுறையை ஏற்றுக்கொண்டனர். அவரது புகழும் பரவியது.

மேலும் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவரது கொள்கைகள் குறித்தும்,நோய் தடுப்பு முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். 1877 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் இந்த பதவியில் இருந்த 15 ஆண்டுகளும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பல செயல் விளக்கங்கள் கொடுத்தார். மேலும் முழங்கால் மூட்டை உலோக கம்பி கொண்டு சரி செய்யும் மருத்துவ முறையை கண்டுபிடித்து அதை மேம்படுத்தவும் செய்தார்.
மறைவு
தனது மகத்தான கண்டுபிடிப்பால் பலரது இறப்பைத் தடுத்த ஜோசப் லிஸ்டர் அவர்கள் 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அவருடைய 84 ஆவது வயதில் காலமானார்.
சிறப்புகள்
ஜோசப் லிஸ்டர் புகழ் பரவியதால் 1883 ஆம் ஆண்டு முதல் விக்டோரியா மகாராணியின் சொந்த மருத்துவராக பணி புரிந்தார். 1895 ஆம் ஆண்டு முதல் 1900 ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் லண்டன் ராயல் சொசைட்டி தலைவராக பணிபுரிந்தார். மருத்துவ உலகிலேயே முதன் முதலாக இவருக்கு “ஆர்டர் ஆஃப் தி மெரிட்” விருது வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.
மனித குலத்தின் பாதுகாப்பிற்கு அளப்பரிய பங்காற்றிய ஜோசப் லிஸ்டரின் பிறந்த நாளான ஏப்ரல் 5 ஆம் தேதியை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறது எழுத்தாணி.