சர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்பதையும் கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினையும் கண்டறிந்தவர். மேலும் கணினி அறிவியல், மின்னோட்ட மற்றும் மின்னியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.
பிறப்பும் கல்வியும்
சர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் இந்தியாவின் கிழக்கு வங்காளத்தில் (தற்போது வங்க தேசம்) உள்ள பிக்ரம்பூரில் 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். பட்டப் படிப்பை முடித்தவுடன் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். 1885 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போதைய பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம் வழங்க மறுத்ததால் சம்பளம் வாங்காமல் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அவரது சிறப்பான பணியின் காரணமாக பிரிட்டிஷ் அரசு நிலுவைத் தொகையுடன் முழு சம்பளமும் அளித்தது. அந்த பணத்தின் மூலமாக ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்தார். ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்தார்.

ஆராய்ச்சிகள்
சர் ஜெகதீஷ் சந்திர போஸ் தனது முப்பத்து ஐந்தாம் வயதில் ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்தார்.
- முதலில் மின்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்தார். பின்பு மின் அலைகள் கம்பிகளின் உதவி இன்றியும் செல்லும் என்று கண்டறிந்தார்.
- 22 மி.மீ முதல் 5 மி.மீ அலைநீளம் கொண்ட மின் காந்த அலைகளை உருவாக்கவும், மின் காந்த அலைகளின் பகுதி ஒளித் தன்மையை (Quasi-Optical) கண்டறியும் கருவியையும் முதன் முதலில் கண்டுபிடித்தார்.
- மூலக்கூறுகளின் பண்புகளை ஆராய்ந்ததன் மூலம் புதிய ஒளிப்படக் கோட்பாட்டை உருவாக்கினார்.
விண்ணலை ஆராய்ச்சிகள்
சர் ஜெகதீஷ் சந்திர போஸ் மார்கோனிக்கு முன்பே கம்பியில்லா ஒளிபரப்பு அமைப்பை கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அது அறியலாளர்களால் அறியப்படாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் மார்கோனி வானொலியை கண்டுபிடித்துள்ளார். இதனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகு IEEE சர் ஜெகதீஷ் சந்திர போஸ் தான் வானொலி அறிவியலின் முன்னோடி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சர் ஜெகதீஷ் சந்திர போஸ் தான் வானொலி அறிவியலின் முன்னோடி!
தாவரவியல் ஆராய்ச்சி
இயற்பியல் ஆராய்ச்சிகளுக்கு பிறகு போஸின் கவனம் தாவரங்களின் மேல் சென்றது. அதன் விளைவாக தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்றும் குளிர், வெப்பம், ஒளி, ஒலி போன்ற புறக் காரணிகளை மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் போலவே தாவரங்களும் உணர்கின்றன என்றும் விளக்கினார். ஆனால் முதலில் இதனை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொட்டா சுருங்கி செடி மிக மெல்லிய மின்னோட்டத்திற்கு எதிர் வினை ஆற்றியதைக் கொண்டு இதனை நிரூபித்தார். இவர் எழுதிய ‘Response in the Living and Non-living’ மற்றும் ‘The Nervous mechanism of Plants’ போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
[boombox_download_button file_url=”https://neotamil.com/wp-content/uploads/2018/11/Nervous-mechanism-of-plants.pdf” external_url=””]Download[/boombox_download_button]
தாவரங்களுக்கும் உயிர் உள்ளது. குளிர், வெப்பம், ஒளி, ஒலி போன்ற புறக் காரணிகளை மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் போலவே தாவரங்களும் உணர்கின்றன.
– ஜெகதீஷ் சந்திர போஸ்
பட்டங்கள்
பாரிசில் நடந்த உலக விஞ்ஞான மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இவரது அறிவியல் சேவையை பாராட்டி அப்போதைய பிரிட்டிஷ் அரசு இவருக்கு “சர்” பட்டம் அளித்தது. மேலும் லண்டன் பல்கலைக்கழகம் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் வழங்கியது.
மறைவு
விடாமுயற்சியுடன் இயற்பியல் மற்றும் தாவரவியலில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய போஸ் தனது 79ஆம் வயதில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
இந்த வாரம் நவம்பர் 30-ம் தேதி இவரது பிறந்த தினம். அதையொட்டி, ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.