ரவி வர்மா ஒரு புகழ்பெற்ற இந்திய ஓவியர். மேற்கத்திய பாணியின் தொழில் நுணுக்கங்களுடன் இந்தியப் பண்பாடு தொடர்பான கதாபாத்திரங்களை புதிய முறையில் வரைந்து சாதனை படைத்தவர். நவீன இந்திய ஓவியத்திற்கு வித்திட்டவர். இவரது உயிரோட்டம் நிறைந்த ஓவியங்கள்அச்சுப்பிரதிகளாகவும் அச்சிடப்பட்டதால், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர்ந்து புகழ் பெற்றது.

Credit: The Famous People
ராஜா ரவி வர்மா – பிறப்பு
ராஜா ரவி வர்மா அவர்கள், 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் திருவனந்தபுரத்திலில் உள்ள கிளிமனூர் என்ற ஊரில் நீலகண்டன் பட்டாதிரிபாதி, உமாம்பா தம்புராட்டி என்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு சமஸ்கிருத அறிஞர் மற்றும் ஆயுர்வேத நிபுணராக இருந்தார்.
2002 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் ரவி வர்மாவின் “யசோதையும் கிருஷ்ணனும்” ஓவியம் 56 லட்சதிற்கு ஏலம் போனது!
ரவி வர்மாவின் சிறுவயது ஓவிய ஆர்வம்!
சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் போன்ற மொழிகளை கற்றதோடு ஓவியம் வரைவதிலும் அதிக ஆர்வம் காட்டினார் ரவி வர்மா. அவரது ஓவியத் திறமையை கவனித்த அவரது மாமா ராஜா ராஜாவர்மா, அவருக்கு ஓவியம் வரைவதற்கான ஆரம்ப பாடங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். 1862 ஆம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா அவர்கள் உதவியால், அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ரவி வர்மா தண்ணீர் ஓவிய நுணுக்கங்களை (வாட்டர் பெய்ண்டிங்) கற்றார். தஞ்சாவூர் அரண்மனை ஓவியர் அழகிரி நாயுடுவிடம் தைலவண்ண ஓவியங்களைப் பற்றி தெரிந்து கொண்டார்.
அந்த காலத்தில் மரம், இலை, பூக்கள், கற்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வண்ணங்கள் தான் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டன. இதனால் ஓவியங்கள் காலப்போக்கில் மங்க ஆரம்பித்தது. இந்த பிரச்சனைகள் இல்லாத ஆயில் பெய்ண்டிங் பற்றி கேள்விப்பட்ட ரவி வர்மாவுக்கு அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 1868 ஆம் ஆண்டு டச்சு ஓவியரான, தியோடர் ஜென்சன் அரண்மனை வந்திருந்த போது அவரிடம் ஆயில் பெய்ண்டிங் முறையைக் கற்றுக் கொண்டார். 1870 – 1880 ஆம் ஆண்டுகளில் கிளிமானுரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.

Credit: Etsy
ராஜா ரவி வர்மா ஓவியங்கள்
இப்படி ஓவியக் கலையில் பல நுணுக்கங்களை கற்ற ரவி வர்மா இந்தியாவின் இதிகாசங்களை தன்னுடைய ஓவியத்தில் புதிய பாணியில் காட்ட ஆரம்பித்தார். தமயந்தி, துஷ்யந்தன், தூது சென்ற கிருஷ்ணர், ரிஷிகன்யா என பல புராண கதாபாத்திரங்களை அவர் ஓவியமாக்கினார். அழகான இயற்கை சூழலில் இந்திய தெய்வங்களை வரைந்தார். அதுவும் தெய்வங்களை கோயில்களில் இருக்கும் சிலைகளைப் போல வரையாமல் புடவை அணிந்த தென்னிந்திய பெண்களை மாதிரியாக கொண்டு வரைந்தார்.
ஐரோப்பிய ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட ரவி வர்மா, இந்திய கலைநுட்பத்தை நவீனமயமாக்க முயற்சி செய்தார். அவரது ஓவியங்களில் இந்திய மரபுகளோடு, ஐரோப்பிய கலை நுட்பத்தையும் காண முடியும். ரவிவர்மா இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பல ஸ்தலங்களை பார்வையிட்டு பின்னர் தான் கண்டவற்றை வண்ண ஓவியங்களாக வடித்தார். ஆரம்பத்தில் சம்ஸ்கிருதம் மலையாளம் மட்டுமே அறிந்திருந்த இவர் பின்பு இந்தி, குஜராத்தி,ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றார்.
ராஜா ரவி வர்மா – அச்சுக்கூடம்
1894 ஆம் ஆண்டு மும்பையில் காட்கோபர் எனும் இடத்தில் அச்சுக்கூடம் ஒன்றைத் துவங்கினார். அதன் பிறகு 1899 ல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் லோனாவாலாவுக்கு அருகில் உள்ள மாலவ்லி (Malavli) என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு தான் இந்து கடவுள்களின் ஓவியங்கள் மற்றும் இராமாயண, மகாபாரத மற்றும் பிற புராணங்களில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் ஓலியோகிராப் (Oleograph) எனும் முறையில் வண்ண அச்சில் உருவாக்கப்பட்டது. அவை இந்தியா முழுக்க பரவி ரவி வர்மாவின் ஓவிய முறைக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. அதில் அன்னப்பட்சியுடன் பேசும் தமயந்தி ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றது.

Credit: Wovensouls
ரவி வர்மா பெற்ற விருதுகள்
திருவாங்கூர் மகாராஜா அவர்களின் உருவத்தை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக “வீரஸ்ருங்கலா” என்னும் உயரிய விருதை அவரிடம் இருந்து ரவிவர்மா பெற்றார். 1873 ஆம் ஆண்டு சென்னை ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசை வென்றார். அதே ஆண்டு வியன்னாவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில் ரவி வர்மாவின் ஓவியங்களும் இடம்பெற்றன. அங்கு அவருக்கு சிறந்த ஓவியருக்கான விருது வழங்கப்பட்டது. அது போல 1893 ஆம் ஆண்டு இவரது ஓவியங்கள் சிகாகோவில் நடைபெற்ற உலக கொலம்பியன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட போது அங்கு அவருக்கு மூன்று தங்க பதக்கங்கள் பரிசளிக்கப்பட்டன. 1904 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசரின் சார்பில் வைஸ்ராயர் லார்ட் கர்சன், ரவிவர்மாவுக்கு கெய்ஸர்-இ-ஹிந்த் எனும் தங்க பதக்கம் வழங்கினார்.
ரவி வர்மாவின் பிற அங்கீகாரங்கள்
கேரளாவில் மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி ரவி வர்மாவின் நினைவாக அமைக்கப்பட்டது. கிளிமானூரிலுள்ள ஒரு பள்ளிக்கு ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி என அவரது பெயரை வைத்துள்ளனர். மேலும் அவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன. இந்திய கலைக்காக ரவிவர்மரின் பரந்த பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, கேரளா அரசு, “ராஜா ரவி வர்மா புரஸ்காரம்” என்ற விருதை, கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்குபவர்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.

Credit: Webneel
ரவி வர்மாவின் ஓவியங்களைக் கேட்டு வந்த கடிதங்களை பெறுவதற்காகவே கிளிமனூரில் ஒரு தனி அஞ்சல் நிலையம் திறக்கும் சூழ்நிலைக்கு ஆளானது அப்போதைய ஆங்கிலேய அரசு. 2002 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது “யசோதையும் கிருஷ்ணனும்” ஓவியம் 56 லட்சதிற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஓவியங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும், மைசூர் ஜெகன்மோகன் அரண்மனையிலும், பரோடா லட்சுமி விலாஸ் அரண்மனையிலும் அதிகம் உள்ளன.
ரவி வர்மா – இறப்பு
ஒரு புகழ்பெற்ற ஓவியராக வெற்றிகரமாகத் தன் வாழ்நாளில் திகழ்ந்த ராஜா ரவி வர்மா 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அவர் பிறந்த ஊரான கிளிமனூரில் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 58.
தான் வரைந்த ஓவியங்கள் மூலமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரவி வர்மாவின் பிறந்தநாளான ஏப்ரல் 29 ஆம் தேதியை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.