மார்க்கோனி வாழ்க்கை வரலாறு: வானொலியை கண்டுபிடித்து, நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் கதை!

Date:

மார்க்கோனி வானொலி மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.  நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை என போற்றப்படுபவர். மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவினார். இவர் கண்டுபிடித்த கம்பியில்லாத் தொடர்பு தான் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொடர்பு என தொலை தொடர்பு வளர்ச்சிகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது.

மார்க்கோனி வரலாறு
credit: Bologna welcome

மார்க்கோனி – பிறப்பும் கல்வியும்

குலீல்மோ மார்க்கோனி 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி இத்தாலிய நாட்டில் உள்ள பொலொனா என்னும் நகரில் கைசப் மார்க்கோனி மற்றும் ஆனி ஜேம்சன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் வசதியான குடும்பம் என்பதால் மார்க்கோனிக்கு இளமையிலேயே வசதியான வாழ்க்கை கிடைத்தது. சிறு வயதில் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த மார்க்கோனி அவருடைய வீட்டில் இருந்த நூல் நிலையத்தில் இருந்து பல அறிவியல் நூல்களை எடுத்துப் படித்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக்கழகதிற்கு செல்லவில்லை. இவருடைய வீட்டிற்கே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் அதிலும் குறிப்பாக மின்சார ரயிலில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

மார்க்கோனி ஆராய்ச்சிகள்

மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் இவருடைய காலத்தில் வெளியிட்டிருந்தார். கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றி தெளிவாக விலக்கியிருந்த ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சி புத்தகம் மார்க்கோனியை அதிகம் கவர்ந்தது. மார்க்கோனி தன் வீட்டிலேயே தனியாக இது குறித்து பல ஆய்வுகளைச் செய்தார். அவருடைய பக்கத்து வீட்டில் வசித்த இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ரிகி மூலம் பல ஆலோசனைகளை பெற்றார். ஆராய்ச்சிகள் மூலமாக “எந்த பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்” என்ற கருத்தை கண்டுபிடித்துக் கூறினார். 1894 ஆம் ஆண்டு மின் அலைகள் மூலமாக சைகைகளை அனுப்புவதில் வெற்றியும் கண்டார். அதன் பிறகு வானொலி அலைகளைக் கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்க முழு முயற்சி செய்தார். இது போன்ற முறைகளை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்திருந்தாலும் அதற்கான சரியான முடிவுகள் கிடைக்கவில்லை.

1909 ஆம் ஆண்டு  “கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்” என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடித்த மார்க்கோனி!

மார்க்கோனி 1895 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய “திசை திரும்பும் மின்கம்பம்” (Directional Antenna) என்ற கருவியைக் கொண்டு தொடர்பு ஏற்படுத்தி சாதனை படைத்தார். ஆனால் அவர் பிறந்த நாடான இத்தாலி அரசு இவர் கண்டுபிடிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே  மார்க்கோனி லண்டன் சென்று அங்கு தன்னுடைய ஆய்வினை விளக்கினார். அங்கு ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளராக இருந்த வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை (Morse code signals) 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் ஒரு ட்ரான்ஸ்மிட்டரை உருவாக்கினார். அதே ஆண்டு நீரின் வழியாக சுமார் 14 கி.மீ தூரத்திற்கு செலுத்தும் ஒலிபரப்பியையும் உருவாக்கினார். ஃப்ரீஸ் உதவியால் கம்பியில்லாத் தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் பொது மக்களிடம் சொற்பொழிவாற்றி விளக்கம் கொடுத்தார். 1897 ஆம் ஆண்டு “மார்க்கோனி நிறுவனம்” இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு கரையிலிருந்து கப்பலுக்கு சுமார் 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் எல்லா கால நிலையிலும் தடையில்லாமல் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கி மகத்தான சாதனை புரிந்தார்.

Marconi Short Distance Wireless Telephone Transmitter and Receiver
Credit: Mhs Blogs

இதற்கு பின்பு தான் மார்க்கோனி மீது இத்தாலி கவனத்தைச் செலுத்தியது. அதனால் இவர் பிறந்த மண்ணில் லாஸ்பீசியா என்ற இடத்தில் அவருடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். இத்தாலி அரசின் உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றையும் உருவாக்கினார்.

மார்க்கோனி கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்

1898 ஆம் ஆண்டு கிழக்கு காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்தார். அது பயணம் செய்த போது அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியதால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்களுக்கு கப்பல் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார். கப்பலில் இருந்தவர்களும் படகுகள் மூலம் தப்பித்தனர்.அதன் பிறகு மார்க்கோனி கண்டுபிடித்த பல அரிய சாதனங்கள் இத்தாலி மற்றும் இங்கிலாந்து கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.

1935 ஆம் ஆண்டு ரேடாரை உருவாக்கும் கொள்கைகளை முன் வைத்தவர் மார்கோனி!

1899 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு படகு போட்டியில் மார்க்கோனி கப்பலில் அவர் கண்டறிந்த கருவிகளைப் பொருத்தி போட்டியின் முடிவுகளை செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்தார். இதன் மூலம் வானொலியின் அவசியத்தை அமெரிக்கா உணர்ந்தது. ஆனால் கணிதவியலாளர்கள் பலர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகம் உருண்டை வடிவமானது என்பதால் வானொலி பரப்பும் செய்தியும் நேராக நூறு மைல் வரைதான் செல்ல முடியும் என்றனர்.

மார்க்கோனி வானொலி சேவை

விமர்சனங்களை கேட்டு கவலைப்படாத மார்க்கோனி தொடந்து ஆராய்ச்சி செய்து 1900 ஆம் ஆண்டு நெடுந்தூர செய்தி அனுப்பும் வானொலி நிலையத்தை அமைத்தார். 200 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் வான் கம்பியை இணைத்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட சூறாவளியால் கம்பம் செய்தது. மனம் தளராத மார்க்கோனி உயரத்தைச் சற்று குறைத்து மற்றொரு கம்பத்தை நட்டு அட்லாண்டிக் பரப்பு முழுவதையும் தன் வானொலியால் இணைத்து முடியாது என்று நினைத்ததை முடித்துக் காட்டினார். 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி 2100 மைல்களுக்கு அட்லாண்டிக்கின் குறுக்கே கடந்து செய்தியை அனுப்பி உலகம் முழுவது புகழ் பெற்றார். மேலும் பல ஆய்வுகள் செய்த மார்க்கோனி தொடர் அலைகள் உற்பத்திச் செய்யும் கருவியையும் கண்டுபிடித்து அதனையும் பயன்படுத்தினார். இதனால் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்ப முடியும் என்பதை சந்தேகமின்றி நிரூபித்தார்.

Marconi stands next to his invention
Credit: Italo americano

1912 ஆம் ஆண்டு ஒரு மோட்டார் விபத்தில் மார்க்கோனி அவருடைய  வலது கண்ணை இழந்த போதும் ஆய்வுகளை மட்டும் விடாமல் தொடர்ந்து செய்து வந்தார். 1935 ஆம் ஆண்டு ரேடாரை உருவாக்கும் கொள்கைகளையும் மார்கோனி முன் வைத்தார்.

இறப்பு

மார்க்கோனி 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாள் ரோம் நகரில் மாரடைப்பால் காலமானார். அன்று அவருக்கு மரியாதை செலுத்து வகையில் உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

மார்க்கோனி பெற்ற சிறப்புகள்

மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, 1909 ஆம் ஆண்டு  “கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்” என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு இவருக்கு இத்தாலி அரசின் மார்க்விஸ் (Marquis) என்ற வழிவழியாக வரக்கூடிய பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு இத்தாலி ராயல் அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

International Conference on Nuclear Physics in Rome, Italy
Credit: Aip

தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு, வருடந்தோறும் மார்க்கோனி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மார்க்கோனியின் நினைவாக, அவரது மகள் கியோயா மார்க்கோனி பிராகா தொடங்கிய அறக்கட்டளையின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.

வானொலியின் தந்தை என போடறப்படும் மார்கோனியின் பிறந்தநாளான ஏப்ரல் 25 ஆம் தேதியை  இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!