28.5 C
Chennai
Monday, March 4, 2024

சமூக அக்கறை மிகுந்த பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு!

Date:

எளிய சொற்கள், ஆழமான பொருள், பாடல்களில் பொதுவுடைமை, சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை என மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்களை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்!!

தோற்றம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். இவரது தந்தை நாட்டுப் புற பாடல்களை பாடுவதில் வல்லவராக இருந்தார். குடும்ப வறுமை காரணமாக கல்யாணசுந்தரம் அவர்கள் உள்ளூரில் இருந்த திண்ணை பள்ளியில் மூன்று ஆண்டுகள் அடிப்படை கல்வி மட்டுமே கற்க முடிந்தது. இவருக்கு இருந்த கவி பாடும் ஆர்வம் அவரை பத்தொன்பதாவது வயதிலேயே கவிதைகள் இயற்ற வைத்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறுCredit: pattukkottai info

தொழில்கள்

புலமையும் வறுமையும் பிரியாதது என்பதால் இவரும் ஏழ்மையால் அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளராத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குடும்பத் தொழில் விவசாயம் என்றாலும் உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், ஓட்டுநர், இட்லி கடை என பல தொழில்களில் ஈடுபட்டார். விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சியிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். இந்த சக்தி நாடக சபாவில் தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய் திரைப்படமாக, அதன் நடிகர்களும் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களோ நடிக்காமல் 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார். பின்னர் அவர் நடத்திய “குயில்” பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

“என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான்” – எம்.ஜி.ஆர்

திரையுலகம்

பாடல் எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம், “வாழ்க பாரதிதாசன்” என்ற தலைப்பில் எழுதி விட்டுத் தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தி பத்திரிகையில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். இவர் இயற்றி வந்த சாதாரண மக்களுக்கும் புரியும் படி இருந்த, கருத்து மிக்க பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது. இதனால் நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார்.

pattukottaikalyanasundaramCrredit: penmai

1955 ஆம் ஆண்டு முதன்முதலாக “படித்த பெண்” என்ற திரைப்படத்துக்காக பாடல் எழுதினார். இதன் மூலம் திரையுலகில் கால் பதித்தார். மகாகவி பாரதியாருக்குப் பிறகு சமூக அக்கறை மிகுந்த பல பாடல்களை கொடுத்தவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய பாடல்கள் அனைத்தும் கிராமிய மணம் கொண்டவையாக இருந்தன என்பதால் மக்களை எளிதாக சென்றடைந்தன. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரைப்படப் பாடல்களை நேர்த்தியாக பயன்படுத்தினார். புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு என பலவற்றை அவருடைய பாடல்களில் புகுத்தினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன், அரசிளங்குமரி, கலை அரசி, சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி, விக்கிரமாதித்தன், திருடாதே போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி, இரும்புத்திரை, உத்தமபுத்திரன், பதிபக்தி, தங்கப்பதுமை, பாகப்பிரிவினை, புனர் ஜென்மம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.

திருடாதே பாப்பா திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, எல்லோரும் இந்நாட்டு மன்னரே, செய்யும் தொழிலே தெய்வம் ஆகியவை மிகவும் பிரபலமான பாடல்கள். 1959 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் நடித்த ஏழு திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்களுள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அவரது குறுகிய வாழ்நாளில் சுமார் 187 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார் என்றாலும் அவை அனைத்துமே என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை தான்.

திருமணம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கௌரவாம்பாள் என்பவருடன் திருமணம் நடந்தது . 1959 ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது.

மறைவு

1959ஆம் ஆண்டு கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டியால் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் மீண்டும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் மீண்டும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலமானர். அப்போது அவருக்கு வயது 29. மிக குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்த வேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார் என்பதே உண்மை.

pattukottaikalyana sundaram memorial structureCredit: tndipr

சிறப்புகள்

1959 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “மக்கள் கவிஞர்” என்ற பொருத்தமான பட்டத்தை அளித்தது. 1965 ஆம் ஆண்டு இவரது பாடல்கள் தொகுப்பு வெளிவந்தது. 1981 ஆம் ஆண்டு இவருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பாவேந்தர் விருது வழங்கப்பட அதனை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி பெற்றுக்கொண்டார். 1993 ஆம் ஆண்டு இவரது பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவரது சிறப்பைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டு தமிழக அரசால் பட்டுக்கோட்டையில் இவரது மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான கையெழுத்து, புகைப்படங்கள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

“என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழக் காரணம் இவரது பகுத்தறிவு மிக்க பாடல்களே!!

ஏப்ரல் 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது எழுத்தாணி.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!