28.5 C
Chennai
Wednesday, September 30, 2020
Home இந்த வார ஆளுமை 1500+ படங்களிலும், 5000+ நாடகங்களிலும் நடித்த பழம் பெரும் நடிகை மனோரமா கதை

1500+ படங்களிலும், 5000+ நாடகங்களிலும் நடித்த பழம் பெரும் நடிகை மனோரமா கதை

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

மனோரமா அவர்கள், சினிமா உலகில் நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர். காமெடி மட்டுமில்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்த இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என சொல்லலாம். 1500க்கும் மேற்பட்ட படங்களிலும், 5000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற சாதனையாளர்.

Aachi ManoramaCredit: Manorama online

தோற்றம்

கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட மனோரமா அவர்கள், 1937ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காசி கிளக்குடையார்-ராமாமிர்தம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். மனோரமா அவர்களின் தந்தை காசி கிளக்குடையார், இவருடைய தாயின் தங்கையையே இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். நாளடைவில் காசி கிளக்குடையாரால் புறக்கணிக்கப்பட்டதால் ஊரை விட்டு வெளியேறி காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்துக்கு குடி புகுந்தனர்.

1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக முதன் முதலாக அறிமுகமானார் மனோரமா!!

இளமை வாழ்க்கை

தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய மனோரமா, சிறு வயதில் இருந்தே பாட்டின் மீது ஆர்வமாகவும், நன்றாகப் பாடும் திறன் கொண்டவராகவும் திகழ்ந்தார். ஒரு காலகட்டத்தில் அவரது தாய்க்கு உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போனதால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்தார்.

நாடக உலகின் ராணி

ஒரு நாள் அவருடைய ஊரில் நடத்தப்பட்ட  “அந்தமான் காதலி” என்ற நடக்க கதாநாயகிக்கு சரியாக பாடவரவில்லை என்பதால் அந்த வாய்ப்பு மனோரமாவைத் தேடி வந்தது. அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் வளத்தையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், அந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை “மனோரமா” என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பிற்காலத்தில் புகழின் உச்சத்தை எட்டினார்.

திரையுலக பயணம்

மனோரமா அவர்கள் வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் அவர் தயாரிக்க இருந்த  “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தில் மனோரமாவை நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் “ஊமையன்கோட்டை” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விட்டது. மிகவும் மனமுடைந்து போனார் மனோரமா. அதன் பிறகு கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.

Manorama in thillana mohanambalCredit: The News Minute

அதன் பிறகு களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, தில்லானா மோகனாம்பாள், எதிர் நீச்சல், பட்டிக்காடா பட்டணமா, பாலும் பழமும், திருவிளையாடல், கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் மனோரமா. தமிழ் மொழி சினிமாக்களில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என பல மொழிப் படங்களிலும் நடித்த பெருமையும் கொண்டவர் இவர். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மனோரமா, நாளடைவில் குணச்சித்திர வேடங்களிலும் கால் பதிக்கத் தொடங்கினார். அனைத்து வேடங்களிலும் மிக சிறப்பாக நடித்து புகழின் உச்சத்தை அடைந்தார்.

1985 ஆம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என கின்னஸ் புத்தகத்தில் மனோரமா பெயர் இடம் பெற்றது!!

பழம் பெரும் நடிகை

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஆகியோருடன் நாடகங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் திரைப்படங்களிலும், என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர்.

திருமணம்

நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் மேனேஜராக இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அவருடைய காதலை மனோரமாவும் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு 1964 ஆம் ஆண்டு திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். ஆனால் 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் விவாகரத்து பெற்று அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தார்.

சிறப்புகளும் விருதுகளும்

1985 ஆம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இவர், இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலக சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி 5000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புலகில் 50 ஆண்டுகளை கடந்து பொன் விழா கண்ட இவர் நடிப்பு மட்டுமில்லாது 100க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

AachiCredit: FrontLine

மனோரமா அவர்கள், தமிழ்நாடு அரசின் “கலைமாமணி'” விருது, 1989 ஆம் ஆண்டு “புதிய பாதை” படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 2002 ஆம் ஆண்டு  “பத்மஶ்ரீ”விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது எனப் பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் கேரளா அரசின் “கலா சாகர் விருது”, மலேசிய அரசிடம் இருந்து “டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி” விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

மறைவு

முதுமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட மனோரமா அவர்கள், 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது அவருக்கு வயது 78.

மே 26, இளமையில் வறுமையில் வாடி இருந்தாலும் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டும் புகழ் பெற்ற ஆச்சி மனோரமா அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்க்கிறது எழுத்தாணி.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -