எஸ். பி. பாலசுப்ரமணியம் (எஸ். பி. பாலசுப்பிரமணியம்) அவர்கள் ஒரு இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றவர். SPB என சுருக்கமாக அழைக்கப்படும் இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். பின்னணி குரல், நடிப்பு, இசையமைப்பாளர் என பல திறமைகள் கொண்டவர் SPB.
SPB பிறப்பும் இளமையும்
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போது ஆந்திரப் பிரதேசம்) உள்ள நெல்லூர் மாவட்டத்தில் எஸ். பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். இவருடைய தந்தை எஸ். பி. சம்பமூர்த்தி ஒரு ஹரிஹத கலைஞர். இவருக்கு உடன் பிறந்தவர்கள் என இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர்.

இளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எஸ்.பி.பி தனது தந்தையிடம் பல இசை கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டார். பாடகனாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த இவர், தந்தையின் ஆசைப்படி ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிக்க ஆரம்பித்தார். டைபாயிடு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட எஸ்.பி.பி சிறிது காலம் வீட்டில் இருந்து விட்டு பின்னர், சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் எஸ்.பி.பி!!!
இசை ஆர்வம்
கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்ற எஸ். பி. பாலசுப்பிரமணியம், 1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றார். இது அவரின் பாடல் ஆர்வத்தை மேலும் தூண்டி பின்னணிப் பாடகராக வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. மேலும் கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற ஒரு பாட்டுப்போட்டியில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.பி.பி. அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்தித்து பாட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த எஸ்.பி.பி அவர்கள் 1966 ஆம் ஆண்டு எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு பாடல்கள் பாடிய எஸ்.பி.பி தமிழில் முதன் முதலில் பாடியது 1969 ஆம் ஆண்டு ஜெமினிகணேசனின் “சாந்தி நிலையம்” படத்தில் “இயற்கையென்னும் இளையகன்னி ” என்ற பாடல் தான். ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற பாடல் அதற்கு முன்பே வெளிவந்துவிட்டது.
பாடும் நிலா
எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மற்றும் ஜெய் சங்கர் படங்களில் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். 1970களின் இறுதியில் தான் இளையராஜா, எஸ்.பி.பி மற்றும் ஜானகி ஆகிய மூவரும் இணைந்த வெற்றிக் கூட்டணியானது உருவானது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “சங்கராபரணம்” என்ற திரைப்படம். 1980 ஆம் ஆண்டு வெளியான முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக கொண்ட இந்த தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்.பி.பி தான் பாடினார். கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்காத போதும் மிக சிறப்பாக இவர் இந்த படத்தில் பாடியிருந்தது இவருக்கு புகழைச் சேர்த்தது. விளைவு, இந்த படத்திற்காக எஸ்.பி.பி க்கு சிறந்த பாடகருக்கான முதல் தேசிய விருது கிடைத்தது.

1989 ஆம் ஆண்டில் எஸ்.பி.பி பாலிவுட்டுக்கு சென்று இந்தி பாடல்களை பாட ஆரம்பித்தார். குறிப்பாக நடிகர் சல்மான்கானுக்கு பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதோடு “தில் தீவானா” என்ற பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார்,ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா, ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் என பல தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார். அதே போல எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்.
இதுவரை சுமார் 42,000 பாடங்களுக்கு மேல் பாடியுள்ள இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என பல மொழிகளில் எந்த தவறும் இல்லாமல் பாடல்கள் பாடும் திறன் கொண்டவர்.
பிற திறமைகள்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடகர் மட்டுமின்றி பின்னணி குரல், நடிப்பு, இசையமைப்பாளர் ஆகிய துறைகளிலும் கால் பதித்துள்ளார். பல்வேறு மொழிப்படங்களில், பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை, “அன்னமயா” மற்றும் “ஸ்ரீ சாய் மகிமா” போன்ற திரைப்படங்களுக்காக பெற்றுள்ளார்.

அதே போல் இவர் மதங்களை கடந்து பல பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். நடிப்பை பொறுத்தவரை எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.
சாதனைகள்
ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் ஒரேநாளில் 19 பாடல்களையும் , இந்தி மொழியில் 6மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆறு முறை தேசிய விருது வென்றுள்ளார்!!!
விருதுகள்
- 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம், 1988 ஆம் ஆண்டு வெளிவந்த “ருத்ரவீணா” போன்ற படங்களில் பாடியதற்காக எஸ்.பி.பிக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது.
- 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.
- 1996 ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “தங்கத் தாமரை மகளே” பாடலுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.
- இந்திய அரசு எஸ்.பி.பி அவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கியது.
- ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்ற எஸ்.பி.பி 2015 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருதையும் பெற்றுள்ளார்.
- இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்ப வாழ்க்கை
எஸ். பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சாவித்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல்லவி என்ற மகளும், எஸ்.பி.பி சரண் என்ற மகனும் உள்ளனர். எஸ்.பி.பி சரண் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமில்லாமல், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது சகோதரி எஸ். பி. சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
ஜூன் 4 – அரை நூற்றாண்டுகள், ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள், உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் இசைப்பயணம் என சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.