தொடக்கக் கல்வி மட்டுமே படித்து பின்னாளில் பல துறைகளில் புதுப்புது கண்டுபிடிப்புகளை தந்த ஜி.டி. நாயுடு வரலாறு!

Date:

தொழில்நுட்ப முன்னேற்றம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்திலேயே தனி மனிதனாக பிளேடு,ரேஸர், கால்குலேட்டர், பயணச்சீட்டு மெஷின், பழச்சாறு பிழியும் கருவி என எத்தனையோ கருவிகளை தயாரித்தவர் ஜி.டி.நாயுடு. தொடக்கக் கல்வி மட்டுமே படித்து, தொழில்துறை, மின்சாரம், விவசாயம், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் என எல்லா துறைகளிலும் கண்டுபிடிப்புகளை தந்து அசத்திய பல்துறை வித்தகர் ஜி.டி நாயுடு. 
ஜி.டி. நாயுடு வரலாறு
credit: Medbucks

ஜி.டி. நாயுடு பிறப்பு 

ஜி.டி.நாயுடு அவர்கள் 1893 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்தார். பாடப் புத்தகங்களை வெறுத்த இவர் தொடக்கக் கல்வி மட்டுமே படித்தார். ஆனால் எழுதப் படிக்க கற்றுக்கொண்ட பின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள ஏராளமான நூல்களை வாங்கிப் படித்தார். வாலிப வயதில் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் ஏழ்மையில் சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்து உதவினார்.
 

தொழில் திறன் 

ஜி.டி.நாயுடு, அவருடைய 18 வயதிலேயே வலி நிவாரணி மருந்து ஒன்றை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து தமிழகத்தில் விற்று லாபம் சம்பாதித்தார். கூடவே ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, பணம் சேமித்தார். ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி அதை நன்கு ஆராய்ந்து மெக்கானிக் வேலையையும்  கற்றார்.
கோவையிலிருந்த ஒரு  மோட்டார் தொழிற்சாலையில் கொஞ்ச காலம் வேலை பார்த்த ஜி.டி.நாயுடு அதன்பிறகு, நண்பர்களிடம் கடன் வாங்கி திருப்பூருக்குச் சென்று பருத்தித் தொழில் செய்தார். அவருடைய வர்த்தகத் திறமையால் நல்ல லாபம் கிட்டியது.  தான் சம்பாதித்த பணத்தை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு பெரிய அளவில் பருத்தி வியாபாரம் தொடங்கினார். ஆனால் அங்கிருந்த பருத்தித் தரகர்களுடன் போட்டி போட முடியாமல் மொத்த முதலையும்  இழந்து விட்டு ஊர் திரும்பினார். இப்படிப்பட்ட படு தோல்வியிலும் மனந்தளராத ஜி.டி.நாயுடு, அப்போது லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரை என்ற ஆங்கிலேயரிடம் வேலைக்குச் சேர்ந்தார். 
G. D. Naidu
credit Peepal Prodigy School

கோவை பீளமேட்டில் உள்ள அவரது “நேஷனல் எலெக்ட்ரிக் ஒர்க்ஸ்” என்ற தொழிற்சாலை தான் இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்தது.

மோட்டார் துறை 

ஜி.டி.நாயுடுவின் திறமையையும், உழைப்பையும் பார்த்து வியந்த ஸ்டேன்ஸ் துரை அவருக்கு ஒரு பேருந்தைக் கடனாகக் கொடுத்து  கடனைத் திருப்பி தரும் வரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளித்தால் போதும் என்றார். தானே முதலாளியாகவும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் ஜி.டி.நாயுடு. 
அதன் பிறகு சில ஆண்டுகளில் “யுனைடெட் மோட்டார் சர்வீஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். பல முன்னேற்றங்களை அவருடைய பேருந்துகளில் புகுத்தினார். அந்த காலத்திலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டினார் ஜி.டி.நாயுடு  .  

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வரும் மற்றும் புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அதை பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். அவருடைய தொழிற்சாலையிலேயே பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு ஒரு இயந்திரத்தையும் தயாரித்து பயன்படுத்தினார்.
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் அவருடைய பேருந்துகளுக்கு ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இருந்ததில்லை.
எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா எனக் கண்டுபிடிக்க அதிர்வு சோதிப்பான் (Vibrator Tester) என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அசத்தினார்  ஜி.டி.நாயுடு.
கோவை பீளமேட்டில் உள்ள அவரது “நேஷனல் எலெக்ட்ரிக் ஒர்க்ஸ்” என்ற தொழிற்சாலை தான் இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்தது.
G. D. Naidu
credit SimpliCity News

ஜி.டி. நாயுடுவின் பிற கண்டுபிடிப்புகள் 

புகைப்படக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க உதவும் ஒரு கருவி, ஓட்டுப்பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் மின்விசிறி, இரும்புச் சட்டத்தில் உள்ள வெடிப்புகளைக் கண்டறியும் கருவி  (Magno flux testing unit) , விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்கள், நுணுக்கமாக அளவிடும் கருவி, காசைப் போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (Slot singing machine) என ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர்.1952 ஆம் ஆண்டிலேயே வெறும் 70 ரூபாய் விலையில் ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோவையும் கண்டுபிடித்தார்.அதே போல எந்த வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்ய உலகத் தரம் வாய்ந்த முதல் மின்சவரக் கத்தியையும், ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடையும் உருவாக்கினார். இதை கொண்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்கு  முகச்சவரம் செய்து கொள்ளலாம். 

நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தும் தயாரித்தார். அந்த காலத்திலேயே நானோ கார் ரகங்கள் (டாட்டா நானோ), அதிக மைல் ஓடக்கூடிய டயர்கள். மெசின் டூல்கள் என அவரது கண்டுபிடிப்புகள் வளர்ந்து கொண்டே சென்றன.

விவசாயத் துறை 

ஜி.டி.நாயுடு தொழில் மேதை மட்டுமல்ல. விவசாயத் துறையிலும் பல ஆராய்ச்சிகள் செய்தவர். போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வுப் பண்ணை ஒன்றை அமைத்தார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், பொறியியல் மாமேதை  விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் அங்கு வந்திருந்தனர். பூசணிக்காய் அளவுக்குப் பெரிதாகக் காய்க்கும் பப்பாளி, 1,000 காய்கள் கொண்ட வாழைத்தார், விதைகளில்லா நார்த்தங்காய், விதைகளில்லா ஆரஞ்சுப் பழம் என பலவற்றை  உருவாக்கினார். சோளச்செடிகளுக்கு ஊசிமூலம் மருந்து செலுத்தி, நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடனும், 39 கதிர்களுடனும், 18 1/2 அடி உயரத்துக்கு வளரச் செய்தார். 11 அடி உயரம் வளர்ந்து 24 ராத்தல் பருத்தியை கொடுத்த அவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்று ஜெர்மானியர்கள் பெயர் சூட்டி கெளரவித்தனர். ஆனாலும், இந்திய அரசாங்கம் வழக்கம் போல அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் ஜி.டி.நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது.
 

சிக்கல்கள் 

ஜி.டி.நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டது. ஆனால்  ஜி.டி.நாயுடு சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் ஆங்கிலேய அரசு இட்ட அதிக பட்ச வரியால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஜி.டி.நாயுடு ஒருவர் என்ற போதும் அவர் மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயர் சுமத்தப்பட்டது.
அவரது கண்டுபிடிப்புக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க ஓர் அமெரிக்க நிறுவனம் முன்வந்த போது, பணத்தை வாங்கிக் கொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்கான உரிமையை இலவசமாகவே வழங்கிய தியாகி  ஜி.டி.நாயுடு. இதற்கு ‘‘அமெரிக்க நிறுவனத்திடமிருந்து 10 லட்சம் ரூபாயை வாங்கி,  இங்கிருக்கும் ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் வரி செலுத்துவதை விட, அதனை இலவசமாகக் கொடுப்பதே மேல்’’ என்று விளக்கம் கூறினார் ஜி.டி.நாயுடு.  
GD.Naidu
credit Tamilnadu Tourism
ஆங்கிலேய அரசு தான் இப்படி என்றால் சுதந்திரத்துக்குப் பிறகும், மத்திய அரசு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கவில்லை. அவரது தொழில் முயற்சிகளுக்குக் கெடுபிடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. வெறுத்துப்போன ஜி.டி.நாயுடு, 1953 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்  முன்னிலையில் பலர் தடுத்தும் அவர் கண்டுபிடித்த ரேடியோக்களையும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கினார்.
வெறும் 2,500 ரூபாய்க்கு தயாரிக்க கூடிய சிறிய காருக்கான  புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஜி.டி.நாயுடு. அதுவும் அந்த காலத்திலேயே! ஒருவேளை அரசு அவருக்கு ஒத்துழைத்திருந்தால் இந்திய கார்கள் உலக கார் சந்தையைக் கலக்கியிருக்கும். அதே போல குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும்  ஜி.டி.நாயுடு தயாரித்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.
 

சமூக சேவை 

அவரால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருந்த ஜி.டி.நாயுடு இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிக்கை விட்டார். 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகளை 1938-ம் ஆண்டு கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவுக்குத் தேவை என்று வலியுறுத்திய ஜி.டி.நாயுடு 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949 ஆம் ஆண்டு அதையும்  அரசாங்கத்துக்குத் தானமாகத் தந்தார். தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தான் தற்போது அரசினர் தொழில்நுட்ப கல்லூரி,கோயம்புத்தூர் (GCT) என அறியப்படுகிறது. 
இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக் கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.
 

இறப்பு 

சிக்கல்கள் பல வந்த போதும் மனம் தளராமல் பல அரிய கண்டுபிடிப்புகளை தந்த ஜி.டி.நாயுடு அவர்கள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி அவருடைய  80 ஆவது வயதில் காலமானார். 
 

சிறப்புகள் 

1936 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்திக்கு முதல் பரிசும், பிளேடுக்கு மூன்றாவது பரிசும் கிடைத்தன.

“இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்” என்றார் பெரியார்.

“நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்” என்றார் அறிஞர் அண்ணா

“கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்” என்று பாராட்டினார் சர்.சி.வி ராமன்

GD.Naidu
Credit Tamilnadu Tourism

கோவை-அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு தயாரித்த உலகின் மிகச்சிறிய கால்குலேட்டர், பூமிக்கடியில் எலெக்ரிக் கம்பிகள் இணைப்பு கொண்ட கட்டிடம் போன்றவை கண்காட்சியாக உள்ளன. தொழில்நுட்பம் வளராத காலத்தில் இவர் கண்டுபிடிப்புகள் இன்றும் பிரம்மிக்கத்தக்கவை.

தமிழக அறிவியல் மேதை மற்றும் பல்துறை வித்தகராக விளங்கிய ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாளான மார்ச் 23 ஆம் தேதியை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!