Home இந்த வார ஆளுமை அடக்குமுறைக்கு எதிராக போராடி 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதை! இன...

அடக்குமுறைக்கு எதிராக போராடி 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதை! இன விடுதலையின் தந்தை நெல்சன் மண்டேலா!!

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சம உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம்.

நவீன இருபதாம் நூற்றாண்டில் கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் தான் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை.

மண்டேலாவின் இளமை

1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. இவரது தந்தை சோசா என்ற பழங்குடி இன மக்களின் தலைவர். ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.

சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், மோசமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனதில் பதிந்தது.

பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் மண்டேலா. ஆனால் அவர் கல்வியை கைவிடவில்லை. மற்றொரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பினத்தவர்க்கான முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார்.

இருபதாம் நூற்றாண்டின் இருண்ட பக்கங்கள்

நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள்.

வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்கு கூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், கட்டடங்கள். ஆனால் அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்கு கூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

துளிர் விட்ட விடுதலை வேட்கை

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து பெரும்பான்மை மக்கள் போராடியிருக்கலாம். வெள்ளையர்கள் அவர்களை மொழிகளின் பெயரால் பிரித்து வைத்திருந்தனர். ஆனால் அப்போது வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார்.

மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.

மண்டேலாவின் சிறை வாசம்

இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு

அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.

நெல்சன் மண்டேலா விடுதலையின் போது இனமும் விடுதலையானது

மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம்.

நெல்சன் மண்டேலா

1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W டி க்ளெர்க் (F.W.de Klerk) நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபர்

1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட மண்டேலாவுக்கும், அதிபர் F.W டி க்ளெர்க் அவர்களுக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27-ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் மண்டேலா அவ்வாறு செய்யவில்லை அதனால் தான் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார்.

ஜூலை 18,1918ல் பிறந்து , டிசம்பர் 5, 2013ம் ஆண்டு மறைந்த மாபெரும் மனிதர் நெல்சன் மண்டேலாவை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -