28.5 C
Chennai
Sunday, November 27, 2022
Homeஇந்த வார ஆளுமைஎட்வர்ட் ஜென்னர் வாழ்க்கை வரலாறு: கிராம மக்களின் நம்பிக்கை மூலம் பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்த 'நோய்...

எட்வர்ட் ஜென்னர் வாழ்க்கை வரலாறு: கிராம மக்களின் நம்பிக்கை மூலம் பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்த ‘நோய் எதிர்ப்பியலின் தந்தை’ கதை!

NeoTamil on Google News

எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும் அறிவியலாளர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை காரணம் தெரியாமல் மனிதர்களை கொன்ற பயங்கர தொற்று நோயான Smallpox எனப்படும் பெரியம்மை நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர். நோய் எதிர்ப்பியலின் தந்தை என போற்றப்படுபவர். 

Edward Jenner
Credit: How It Works Daily

தோற்றம் 

எட்வர்ட் ஜென்னர் 1749 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள பெர்க்லி நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் மத சடங்குகள் செய்யும் புரோகிதராக இருந்தார். இதனால் ஜென்னருக்கு சிறந்த அடிப்படை கல்வி கிடைத்தது. அதே சமயம் ஜென்னர் இளம் வயதில் இருந்தே இயற்கை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். வோட்டன் மற்றும் சிரென்செஸ்டரில் இருந்த பள்ளிகளில் படித்த ஜென்னருக்கு பெரியம்மையால் மனிதர்கள் இறப்பது கவலையை அளித்தது. அப்போதே அவருக்கு இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இந்த தடுப்பூசியின் பயனால் 1980 ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றிலும் அழிந்துவிட்டதாக விட்டதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்தது!!

இளமை வாழ்க்கை 

தன்னுடைய பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்த ஜென்னர், ஏழாண்டுகள் பயிற்சிக்கு பின் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரானார். 1770 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் மருத்துவமனையில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு அறுவை சிகிச்சை செய்பவராகவும் பணியாற்றினார். 1792 ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற ஜென்னர் குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார்.

பெரியம்மை தடுப்பூசி 

தடுப்பூசி முறை 1721 ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்தாலும் பெரியம்மையை முழுமையாக கட்டுப்படுத்தி போக்க முடியவில்லை.  Cowpox என்ற நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அந்த மனிதனுக்கு பெரியம்மை நோய் வரவே வராது என்ற நம்பிக்கை அப்போது வாழ்ந்த மக்களிடம் இருந்தது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தானே! இந்த நம்பிக்கையையே சவாலாக எடுத்துக் கொண்ட ஜென்னர் சுமார் இருபது ஆண்டுகள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் செய்தார். அதே சமயம்  1765 இல் ஜான் பியூஸ்டெர் என்ற மருத்துவர் Cowpox நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை.

இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்க்க 1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி சாரா என்ற பெண்ணின் கையிலிருந்த Cowpox கொப்புளத்திலிருந்த எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸ் (James Phipps) என்ற எட்டு வயது சிறுவனின் உடலுக்குள் செலுத்தினார். நினைத்தது போலவே அந்த சிறுவனுக்கும் Cowpox நோய் ஏற்பட்டது. விரைவில் குணமும் அடைந்தான்.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு ஜென்னர் செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை தடுத்த போதும் நம்பிக்கையோடு சற்றும் மனம் தளராமல் அந்த  தடுப்பூசியை அவனுக்கு செலுத்தினார். ஜென்னரின் ஆராய்ச்சி முடிவு போலவே அந்த சிறுவனுக்கு இந்த தடுப்பூசியால் பெரியம்மை நோய் ஏற்படவில்லை. 

Edward Jenner performs his vaccination
Credit: Money Week

அதன் பின் மேலும் பல ஆய்வுகளை செய்து அவரது அனைத்து முடிவுகளையும்  1798 ஆம் ஆண்டு “அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அது சிறந்த விளக்கத்துடன் நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக்கு தடுப்பூசி முறை உலகெங்கும் விரைவாக பரவி ஜென்னரின் புகழ் பரவியது.

சிறப்புகள் 

சேவை மனப்பான்மையைக்  கொண்டிருந்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகத்திற்கு இலவசமாக வழங்கினார். அவரிடம் வரும் ஏழை எளியவர்களுக்கும் இலவசமாகவே அம்மை தடுப்பூசி போட்டார்.

மருத்துவ உலகில் ஜென்னரின் பங்களிப்பை கெளரவிக்கவும், தனது கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802 ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அந்த பணத்தை தனது செலவுக்கே பயன்படுத்தாமல் 1808 ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தை நிறுவ பயன்படுத்தினார் ஜென்னர்.

பிற ஆராய்ச்சிகள் 

இயற்கையை மிகவும் நேசித்த ஜென்னர், குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள் குஞ்சுகளுக்கு பிறந்த 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார். மார்பு முடக்குவலி (Angina pectoris) பற்றி முதலில் ஆராய்ந்து வெளியிட்டவரும் ஜென்னரே!!

Jenner Statue
Credit: Royal Parks

திருமணம் 

ஜென்னர் 1788 ஆம் ஆண்டு கேதரின் கிங்ஸ்கோட் (Catherine Kingscote) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.1810 ஆம் ஆண்டு அவரது முதல் மகன் இறந்ததால் மிகவும் துவண்டு போன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார்.  

மறைவு 

உலகத்தையே பெரியம்மை என்னும் கொடிய நோயிடம் இருந்து காப்பாற்றிய எட்வர்ட் ஜென்னர் 1823 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அவருடைய 73 ஆவது வயதில் காலமானார்.

ஜென்னருடைய இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பு ஒன்றும் சாதாரணமானதல்ல. மனித குலத்தை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இந்த தடுப்பூசியின் பயனால் 1980 ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றிலும் அழிந்துவிட்டதாக விட்டதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்தது.

மே 17 ஆம் தேதி “நோய் எதிர்ப்பியலின் தந்தை” எட்வர்ட் ஜென்னரின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறது எழுத்தாணி.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

சந்திர கிரகணம் (lunar eclipse)

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள் நிலவுகளைக் கொண்டுள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சந்திரன் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய தகவல்கள்! சந்திர கிரகணம் என்றால்...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!