28.5 C
Chennai
Sunday, November 27, 2022
Homeஇந்த வார ஆளுமைகுரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தை முன் வைத்த சார்லஸ் டார்வின் வரலாறு!

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தை முன் வைத்த சார்லஸ் டார்வின் வரலாறு!

NeoTamil on Google News

பரிணாமவியலின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் ஒரு இயற்கையியல் ஆராய்ச்சியாளர். பல்வேறு உயிரினங்களை ஆராய்ந்து, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர். சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக்  கொண்டு வாழும் உயிரினமே உயிர் பிழைக்கும் என்று விளக்கியவர். சார்லஸ் டார்வின் வரலாறு பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.சார்லஸ் டார்வின் வரலாறு

credit: jane austens london

சார்லஸ் டார்வின் இளமைப் பருவம்

சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி என்ற ஊரில் ராபர்ட் டார்வினுக்கும், சுசானா டார்வினுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவர். 8 வயதிலேயே தாயை இழந்த டார்வின் சுரூஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறு வயது முதல் விலங்குகள், புழு, பூச்சிகள் மீது அதிக ஆர்வம் காட்டினார். பறவைகளையும் உயிரினங்களையும் கண்காணிப்பது, புத்தங்கள் படிப்பது போன்றவை அவருக்கு பிடித்த செயல்கள். தந்தையின் விருப்பத்தால் முதலில் மருத்துவ படிப்பில் சேர்ந்த டார்வினுக்கு மருத்துவத்தில் ஆர்வமே இல்லை. அதனால் அவரது தந்தை அவர்  கிறிஸ்துவ மத பாதிரியார் ஆக வேண்டும் என முடிவு செய்து இறையியல் (Theology) படிப்பதற்காக கேம்பிரிட்ஜ் பலக்லைக்கழகத்தில் சேர்த்தார். அங்கு நிலவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களைக் கற்ற டார்வின் அந்த பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரின் நெருங்கிய நண்பரானார். அவர் மூலமாக ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பும் கிடைத்தது.

மனிதனும் குரங்கும் ஒரே உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் – டார்வின்.

கடற்பயணம்

1831 ஆம் ஆண்டு இயற்கையாளர்கள், புவியியலாளர்கள் கொண்ட குழு ஒன்று கடல் பயண ஆராய்ச்சிக்கு  கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் தலைமையில் HMS Beagle என்ற கப்பல் செல்வதாக இருந்தது. அதில் கலந்துகொள்ளுமாறு 22 வயது டார்வினுக்கும் அழைப்பு வந்தது. 1831 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். அவரின் வாழ்நாள் முழுவதும் ஈடுபடப்போகும் ஆய்வுக்கான அஸ்திவாரமாக அந்த பயணம் இருந்தது. தென் அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்பகுதி மற்றும் பல தீவுகளுக்கான அந்த பயணத்தை முதலில் இரண்டாண்டுகளில் முடிப்பது என்று எண்ணினர். ஆனால் அந்த பயணம் ஐந்து வருடங்களுக்கு நீடித்தது. பயணத் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் புவியைப் பற்றிய பல விஷயங்களை உணர்ந்து கொண்டார். பல உயிரினங்களின் எலும்புகள் போன்ற மாதிரிகளையும் சேகரித்தார். எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். உயிரினங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் எப்படி? ஏன் ஏற்படுகின்றன? என அறியும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்.

darwin treeCredit: Glogster

ஆய்வுகள்

டார்வின் கடல் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளில் அவர் சேகரித்த விபரங்களையும் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி “The voyage of the Beagle” என்ற நூலை வெளியிட்டார். சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற  இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு ஏற்பட்டது. டார்வின் ஏற்கனவே கடல் பயணத்தின் போது திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை அல்ல என்றும் அவற்றுக்கிடையே காணும் சிறுசிறு வேறுபாடுகள் உயிரினங்கள் அவைகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டதால் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பல்வேறு பாலூட்டிகளின் எலும்புக்கூடுகள் ஒரே மாதிரி இருப்பதை விரிவாக ஆராய்ந்தார். அவற்றின் மூட்டு எலும்புகள் ஒரே வரிசையில் இருப்பதையும், அவை வெவ்வேறு உயிரினங்களுக்கு ஏற்ற வகையில் மறுவடிவம் பெற்றது என்பதையும் கண்டறிந்தார். மனிதனின் உடலமைப்பை ஒத்ததாக குரங்கின் உடலமைப்பு இருப்பதும், அவர் கவனத்தை ஈர்த்தது. கண்டறிந்தவைகளை ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிடத் துவங்கினார். அவர் வெளியிட்ட கட்டுரைகள் புத்தகங்கள் எல்லாமே பரம்பரை மாற்றங்கள், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை மையக்கருத்தாக கொண்டிருந்தன.

பரிணாம வளர்ச்சிக் கொள்கை

1859 ஆம் ஆண்டு டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை “The Origin of Species by Natural Selection” என்ற புத்தகம் மூலம் வெளியிட்டார். அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும். மேலும் இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறினார். மேலும்  மனிதனும் குரங்கும் ஒரே உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற முக்கிய கருத்தை வெளியிட்டார். டார்வினின் கொள்கைகள் உயிரினங்களின் தோற்றம் முழுக்க முழுக்க இயற்கையானது என விளக்கியது. பல காலங்களாக உயிரினங்களின் தோற்றத்திற்கு காரணம் கடவுள் என்று கூறி வந்த பல மதவாதிகள் டார்வினை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். ஆனாலும் டார்வின் தகுந்த விளக்கங்கள் கொடுத்தார். உயிரினங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக  மாற்றமடைந்து, சின்ன உயிரிகளிலிருந்து பெரிய உயிரியாக மாறி, ஒவ்வொரு விலங்கினமாக மாறி, இன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன என்பதையும் தெளிவாக ஆதாரத்துடன்  தெரிவித்தார். அதன் பிறகு சிலர் அவரது கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர்.

human evolutionCredit: Dna India
டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

  1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)
  2. மரபு வழி (ஒரே மாதிரியான உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)
  3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச்  சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க  முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார்.

mutationCredit: thoughtco

திடீர்மாற்றம்

ஒரே உயிரினத்தில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அந்த உயிரினத்தின் மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றமே (Mutation) காரணம். இந்தத் திடீர் மாற்றம், அதனுடைய வாரிசின் மீது தாக்கம் செலுத்துகிறது. உடனடியாகவோ அல்லது பல தலைமுறைகளுக்குப் பிறகோ இந்த தாக்கங்கள் நிகழலாம். ஓர் உயிரினம் வாழும் சுற்றுச்சூழலில் உணவு, வாழ்விடம், இயற்கை நிகழ்வுகள் போன்ற நெருக்கடிகள் தான் இதில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த நெருக்கடிகளால் தான் திடீர் மாற்றம் தூண்டிவிடப்படுகிறது.

டார்வின் ஆய்வின் படி, அனைத்து உயிரினங்களும், தாவரங்களும் உலகில் தோன்றிய பொழுது இருந்தது போல இப்பொழுது இல்லை. அவை பலவிதமான சிக்கலான அமைப்புகளைக் கடந்து புதிய இனங்களாக மாறி இன்று தான் கொண்டுள்ள வடிவத்தை அடைந்துள்ளன.

சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன? என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆனால், டார்வினுக்கு பின்னர் உயிரியல் துறை பல முன்னேற்றங்களை அடைந்து குரோமோசோம்களினுள் உள்ள மரபணுக்களின் மூலம் பாரம்பரிய பண்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இறப்பு

வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகள் செய்து பரிணாமவியலின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் காலமானார்.

பிப்ரவரி 12 ஆம் தேதி சார்லஸ் டார்வினின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

சந்திர கிரகணம் (lunar eclipse)

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள் நிலவுகளைக் கொண்டுள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சந்திரன் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய தகவல்கள்! சந்திர கிரகணம் என்றால்...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!