இந்த வார ஆளுமை – ஜாகிர் உசேன் – பிப்ரவரி 8, 2019

0
79
Arif with Indian Presidet zakir Husain
Credit: Arif Naqvi

ஜாகிர் உசேன் அவர்கள் 1967 முதல் 1969 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமை மிக்க நிர்வாகியாகவும் விளங்கியவர்.

பிறப்பும் கல்வியும்

ஜாகிர் உசேன் அவர்கள் 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். உசேன் அவரது பெற்றோருக்கு இரண்டாவது மகனாவார். தொடக்க கல்வியை ஹைதராபாத்தில் கற்ற உசேன், அதன் பிறகு குடும்பம் உத்திரப் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்ததால் அங்கு எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை பிடா உசேன் கான் உசேனின் பத்தாவது வயதில் இறந்தார். பதினான்காவது வயதில் உசேன் தாயையும் இழந்தார். அதன் பிறகு படிப்பில் இருந்த ஆர்வத்தால் சுய முயற்சியில் படித்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். 1926 ஆம் ஆண்டு ஜெர்மனியில், பெர்லின் நகரத்தில் உள்ள பெடெரிக் வில்லியம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

zahir husain
Credit: India Today

பொறுப்புகள்

காந்தியடிகளின் ஆதாரக் கல்வி முறை உசேனை மிகவும் கவர்ந்ததால் அலிகார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே அவரின் தீவிர ஆதரவாளரானார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டார். 1920 ஆம் ஆண்டு அலிகாரில் தேசிய முஸ்லீம் பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள் குழுவில் இடம் பெற்றார். அதன் பிறகு அந்த பல்கலைக்கழகம் டெல்லிக்கு மாற்றப்பட்டு ஜமியா மில்லியா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பிறகு இந்தியா திருப்பிய உசேன் மூடப்படும் நிலையில் இருந்த ஜமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 1948 வரை பணியாற்றினார். அப்போது காந்தியடிகள், ஹக்கீம் அஜ்மல்கான் போன்றோர் வலியுறுத்திய நெறிசார்ந்த கல்வித் திட்டத்தை இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் அலிகார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றினார். சர்வதேசக் கல்வி நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்த உசேன் யுனெஸ்கோ நிர்வாக வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

உசேன் அவர்கள் ஆங்கிலம் இந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். இந்த மூன்று மொழிகளிலும் ஆதாரக்கல்வி முறை குறித்தும் கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதியுள்ளார். காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து, உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பல திட்டங்களை கொடுத்தார்.

அரசியல்

1956 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். 1957 ஆம் ஆண்டு பிகார் ஆளுநரானார். 1962 – 1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இரண்டாவது துணை குடியரசு தலைவராக இருந்த உசேன் 1967 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தொடக்க உரையில் “இந்தியா என் வீடு, இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்” என்று கூறினார். வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற வாதங்கள் இவர் காலகட்டத்தில் தான் நடந்தன. அதன் விளைவாகத் தான் 1969 ஆம் ஆண்டு பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

Credit: India Tv

இறப்பு

உசேன் அவர்கள் 1969 ஆம் வருடம் மே மாதம் 3 ஆம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்திலேயே அவருடைய 72 ஆம் வயதில் காலமானார்.

சிறப்புகள்

கல்வித் துறையில் இவரது பங்களிப்பினைப் பாராட்டி இவருக்கு 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்தது. 1963 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கியது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக்கழகங்கள் இவருக்கு “இலக்கிய மேதை” பட்டம் வழங்கின. இவருக்கு மரியாதை செய்யும் விதமாக 1970 ஆம் ஆண்டு இவர் பெயரில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியும் உசேன் பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்த மாதம் 8 ஆம் தேதி ஜாகிர் அவர்களின் பிறந்தநாள் வருவது குறிப்பிடத்தக்கது. மரணம் வரையிலும் இந்தியாவிற்காக உழைத்த ஜாகிர் ஹசனை இந்தவார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.