28.5 C
Chennai
Saturday, August 13, 2022
Homeஇந்த வார ஆளுமைஒரு வருடம் கூட பள்ளி செல்லாத போதும், மின்னலில் மின்சாரம் உள்ளது என்ற அறிவியல் உண்மையை...

ஒரு வருடம் கூட பள்ளி செல்லாத போதும், மின்னலில் மின்சாரம் உள்ளது என்ற அறிவியல் உண்மையை கண்டுபிடித்த பெஞ்சமின் பிராங்கிளின் வரலாறு!

NeoTamil on Google News

பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு அரசியல் தலைவர், வணிகர், எழுத்தாளர், அறிவியல் கண்டுபிடிப்பாளர். மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்று கண்டறிந்தவர்.

பிறப்பு

பெஞ்சமின் பிராங்கிளின் அவர்கள் 1706 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் பிறந்தார். அவரது தந்தை சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தயாரித்து விற்பனை செய்தார். முதலில் பள்ளிக்கு சென்ற பிராங்கிளினால் குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு  செல்ல முடியவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் அவரது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் அவருக்கு கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தொடர்ந்து இருந்தது. அவரது தந்தைக்கு தொழிலில் உதவி செய்து கொண்டு கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

Benjamin Franklin in tamil
Benjamin Franklin Statue in University of Pennsylvania

Credit: Association For Public Art

அச்சுத்தொழில்

சிறு வயதிலிருந்தே பிரான்கிளினுக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அவருக்கு தெரிந்தவர்கள் வைத்திருக்கும் புத்தகங்களை கேட்டு வாங்கி படிப்பார். பன்னிரண்டு வயதில் அவரது சகோதரர் நடத்தி வந்த அச்சுக்கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது சகோதரருக்கு இவரது வளர்ச்சி பிடிக்கவில்லை. பிராங்கிளின் Silence Dogood என்ற பெயரில் கட்டுரைகளை அவரது சகோதரருக்கு அனுப்பினார். அவரும் யாரென்று தெரியாமலேயே அவர் பத்திரிக்கையில் கட்டுரைகளை வெளியிட்டார். பிராங்கிளின் தான் எழுதினார் என்று தெரிந்ததும் சகோதரருடன் பிரச்சனை ஏற்பட்டதால் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா (Philadelphia)  சென்றார். அங்கும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக ஒரு அச்சு நிறுவனத்தைத் தொடங்கி நிறைய எழுத ஆரம்பித்தார். இதன் மூலம் அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

மின்னல் மூலம் வரும் மின்சாரத்தை மின்கடத்திக்கு அனுப்புவதன் மூலம் மின்னலில் இருந்து நாம் தப்ப முடியும் என்பதை கண்டறிந்தார்.

பத்திரிக்கைகள்

1729 ஆம் ஆண்டு பிராங்கிளின் Pennsylvania Gazette என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard’s Almanack என்ற இதழைத் தொடங்கினார். இந்த இதழ் மக்கள் மத்தியில் நன்கு புகழ் பெற்று அதிகமாக விற்பனையானது.

அறிவியல்

அச்சுத்துறையில் பல சாதனைகள் செய்த பிராங்கிளினிடம் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் குறையாமல் இருந்தது. குறைவான எரிபொருளுடன் அதிக வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்ததோடு அவற்றை  தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்கள் செழித்து வளர செயற்கை உரமிடலாம் என்ற யோசனையை தந்தார்.

பிராங்கிளின், அவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கூட வாங்கவில்லை!

Kite experimentCredit: How Stuff Works

கடும் புயலில் இவர் நிகழ்த்திய  பட்டம் ஆய்வு (Kite Experiment)  தான் மின்னலில் மின்சாரம் இருக்கிறது என்பதையும் நேர் மற்றும் எதிர் மின்னோட்டங்கள் இருக்கிறது என்பதையும் உலகிற்கு புரிய வைத்தது. கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது, அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதையும் விளக்கினார். இந்த ஆய்வின் மூலம் மின்னல் மூலம் வரும் மின்சாரத்தை மின்கடத்திக்கு அனுப்புவதன் மூலம் மின்னலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை அறிந்தார். தொடர் முயற்சிகள் மூலம் இடிதாங்கியையும் கண்டுபிடித்தார்.

முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடி (Bifocal Lens) பிராங்கிளினின் மற்றொரு கண்டுபிடிப்பாகும். சமுதாய நன்மைகாகவே இவற்றை எல்லாம் கண்டுபிடித்த பிராங்கிளின், அவற்றிற்கு காப்புரிமை கூட வாங்கவில்லை.

அரசியல்

பிராங்கிளின், இங்கிலாந்திடம் அடிமையாக அமெரிக்கா இருந்த போது பிரான்ஸின் உதவியை பெற்று அமெரிக்கா சுதந்திரம் பெற வழி செய்தார். அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பு பெஞ்சமின் பிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம் தான் இன்றும் அமெரிக்காவை வழி நடத்துகிறது. மேலும் அரசின் அழைப்பை ஏற்று பிராங்கிளின்  சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு விதங்களில் அரசியல் பணி புரிந்தார்.

பிற சாதனைகள்

சந்தா முறையில் (Subscription) நூல்களை வாங்கி படிக்கும் முறையையும், நடமாடும் நூல் நிலையம் என்ற திட்டத்தையும்  உலகத்திற்கு பிராங்கிளின் தான் அறிமுகம் செய்தார். கல்வி நிறுவனத்தை நிறுவ வேண்டும் என கனவு கண்ட பிராங்கிளின் 1749 ஆம் ஆண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை நிறுவினார். 1751 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் மருத்துவமனையையும் நிறுவினார். பிலடெல்பியாவின் தபால் துறையிலும்  பல மாற்றங்கள் செய்து பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கியவரும் பிராங்கிளின் தான்.

100 dollar currency noteCredit: Wikipedia

மறைவு

பல துறைகளில் சாதனை புரிந்த பிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி அவரது 84 ஆவது வயதில் காலமானார். முழு அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிறப்புகள்

அமெரிக்கா, தேசத் தந்தையராக கொண்டாடும் ஏழு பேரில் பிராங்கிளினும் ஒருவர். சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக வெளியிட்ட இரண்டு அஞ்சல் தலைகளில் ஒன்றில் பெஞ்சமின் பிராங்கிளின் படம் இடம்பெற்றிருந்தது. மேலும் 1914 இல், அமெரிக்காவின் 100 டாலர் கரென்சி நோட்டை வெளியிட்ட போது  பெஞ்சமின் பிராங்க்ளின் உருவப்படத்தோடு வெளியிட்டார்கள்.

ஜனவரி 17 ஆம் தேதி பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பிரபஞ்சன் அவர்களின் சிறந்த 12 புத்தகங்கள்!

பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்தாளர் ஆவார். 46 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும்...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!