ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு இயற்பியல் அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானிகளில் முக்கியமானவர். கோட்பாட்டு இயற்பியலின் தந்தை. அண்டவியல், அணுவியல், குவாண்டம் எந்திரவியல், ஒளிமின் விளைவு எனப் பல துறைகளில் விளக்கங்களை தந்தவர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறப்பு
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஜெர்மனி நாட்டில் வுர்ட்டெம்பர்க் மாகாணத்தில் உள்ள உல்ம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஹேர்மன் ஐன்ஸ்டைன் மற்றும் தாயார் போலின் கோச். இவரது தந்தை நேர்மின்னோட்டம் மூலம் மின் உபகரணங்களை தயாரிக்கும் மின்வேதியியல் சார்ந்த தொழிற்சாலையை நடத்தி வந்தார்.
கல்வியும் வேலையும்
தொடக்கக் கல்விக்காக கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்ட ஐன்ஸ்டைன் அவரது தாயின் வற்புறுத்தலால் வயலினும் கற்க ஆரம்பித்தார். சிறுவயதில் இவருக்கு பேசும் போது பேச்சில் தடங்கல் இருந்தது. ஐன்ஸ்டைன் வகுப்பில் சராசரி மாணவராகத்தான் இருந்தார். இவரது ஐந்து வயதில் அவரது தந்தை கொடுத்த திசை அறியும் காம்பஸ் கருவியை ஆராய ஆரம்பித்தார். அதனுள் இருந்த காந்தம் அவருக்குள் அறிவியல் ஆர்வத்தைக் கொண்டு வந்தது. இவருடைய உறவினர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்ததால்,கணிதம் மற்றும் அறிவியலில் ஐன்ஸ்டைனுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஐன்ஸ்டைனின் தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 1894 ஆம் ஆண்டு இவரது குடும்பம் முதலில் இத்தாலியிலுள்ள மிலான் நகரத்திற்கும் பின் பேவியா என்ற ஊருக்கும் குடி பெயர்ந்தது. 1896 ஆண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். படிப்பு முடிந்ததும் இவருடன் படித்த ஒருவரின் தந்தை மூலம் 1902 ஆம் ஆண்டு சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக ஐன்ஸ்டைனுக்கு வேலை கிடைத்தது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ச்சிகளை செய்ய உதவியாக இருந்தது. இதனால் பல ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுதத் தொடங்கினார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள்
அணுக்கள், இயந்திரவியல், ஒளிமின் விளைவு (Photoelectric Effect), ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஐன்ஸ்டைன் வாழ்வில் 1905 ஆம் ஆண்டு மிக முக்கியமானது. 1905 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட முதல் ஆராய்ச்சி கட்டுரையில் பிரௌனியன் இயக்கம் குறித்து தெளிவாக விளக்கினார். “திரவங்களின் இயக்கவியல் கோட்பாடு” என்னும் கருத்தின் அடிப்படையில், மூலக்கூறுகள் மோதிக்கொள்வதை ஐன்ஸ்டைன் விவரித்து அதன் மூலம் அணு இருப்பதை நிரூபித்தார். ஐன்ஸ்டைனுக்கு முன், ஒளி அலை வடிவமானது என்று தான் விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால் ஒளி துகள்களால் ஆனது என்ற கருத்தை ஐன்ஸ்டைன் கொண்டு வந்து ஒளிமின் விளைவை விளக்கினார். இந்த விளக்கம், குவாண்டம் இயற்பியல் என்னும் நவீன சிந்தனைக்கு வித்திட்டது. இந்த ஒளி துகள்களுக்கு தான் எலெக்ட்ரான், புரோட்டான், போட்டான் என பிற்காலத்தில் பெயர் வைத்தனர்.
சிறப்புத் தொடர்பியல்
ஐன்ஸ்டைனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் (On the Electrodynamics of Moving Bodies) என்பது 1905 ஜூன் 30 ஆம் நாள் வெளிவந்தது. ஒளி, எக்ஸ்ரே மற்றும் மின்காந்த அலைகள் பரவும் வேகம், எந்த அமைப்பிலும் மாறாதது என்ற புது விளக்கைத்தைக் கொடுத்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு
அணுவைப் பற்றி ஆராய்ந்த ஐன்ஸ்டைன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். அவரது 26 ஆம் வயதில் சார்பியல் கோட்பாடு மூலம் ஐன்ஸ்டைன் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடு தான் E=MC2. விஞ்ஞான உலகத்திற்கே இந்த சமன்பாடுதான் அடிப்படையாக கருதப்படுகிறது. இதில் M- நிறை, E-ஆற்றல், C- ஒளியின் திசைவேகம். மிகக் குறைந்த நிறையைக் கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதை ஐன்ஸ்டைன் விளக்கினார். அதாவது ஒரு பொருளின் நிறை மற்றும் அது செல்லும் வேகத்தைப் பொறுத்து அதன் ஆற்றலை அதிகரிக்க முடியும் என்பதே அந்த கோட்பாடு.

அணு குண்டு
முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்து கொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்த ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் ஜெர்மனி அணுகுண்டு தயாரிப்பதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பி, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனி அணுகுண்டை தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்க கூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டைனுக்குத் தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.விளைவு உலகமே பதை பதைத்த நாகசாகி ஹிரோஷிமா சம்பவம் ஏற்பட்டது. E=MC2 என்ற சமன்பாடு தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தை எண்ணி ஐன்ஸ்டைன் அவரது வாழ்நாள் முழுவதும் வேதனை அடைந்துள்ளார்.
திருமண வாழ்க்கை
சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா மாரிக் என்ற பெண்ணை காதலித்து மணந்து இரு குழந்தைகளுக்கு தந்தையானார் ஐன்ஸ்டைன். சில வருடங்களுக்கு பின் அவருடன் மணமுறிவு ஏற்பட்டதால் எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் தனியாக வாழ்ந்துள்ளார் ஐன்ஸ்டைன்.
சிறப்புகள்
1905 ஆம் ஆண்டு சூரிச் பல்கலைகழகம் ஐன்ஸ்டைனுக்கு முனைவர் பட்டம் அளித்தது. 1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டைனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஒளிமின் விளைவு என்ற கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கபட்டது. ஐன்ஸ்டைன் இஸ்ரேலுக்கு அதிபராக வேண்டும் என அழைப்பு விடுத்தது இஸ்ரேல் நாடு. ஆனால் அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மறைவு
மனித கண்டுபிடிப்புகள் நல்ல விஷயங்களுக்கே பயன்பட வேண்டும் என எண்ணி உலக அமைதிக்காக குரல் கொடுத்த ஐன்ஸ்டைன் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி அவரது 76 ஆவது வயதில் காலமானார்.
மார்ச் 14 ஆம் தேதி இயற்பியல் மாமேதை ஐன்ஸ்டைன் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்.