புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது, புற்று நோயை ஏற்படுத்தி மனிதனுக்கு மரணத்தைக் கூட தரும் என்பது நமக்குத் தெரியும். மனிதர்களுக்கான பாதிப்புகளைத் தாண்டி, புகைத்த பிறகு தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகள் கூட பலவிதமான சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் முக்கியமாக கடல் மாசுபாடு. கடல் மாசுபாடு என்றதும் உடனே நமக்கு தோன்றுவது ஸ்ட்ரா, பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் தான். நாம் பெரிதாக நினைக்காத, பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரியும் சிகரெட் ஃபில்டர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் மோசமான ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

Credit: Nbc News
1980 ஆம் ஆண்டு முதல் சுமார் 60 மில்லியன் சிகரெட் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன!
மிக அதிக அளவு
முதலில் சிகரெட் ஃபில்டர்கள் பெரிதாக பாதிப்பில்லாதவை என்று தான் நம்பப்பட்டன. ஆனால் சிகரெட் ஃபில்டர்கள் கடலுக்கும் உயிரினங்களுக்கு மீளமுடியாத சேதத்தை உருவாக்குகின்றன என்பதே உண்மை. அதிலும் குப்பைகளில் போடப்படும் எண்ணிக்கை அதிகமாகும் போது விளைவுகள் இன்னும் மோசமாகின்றன. 1986 ஆம் ஆண்டு முதல் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் இருக்கும் Ocean Conservancy என்ற நிறுவனத்திடம் பெற்ற தகவல் படி 1980 ஆம் ஆண்டு முதல் சுமார் 60 மில்லியன் சிகரெட் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களால் அதிகமாக சேகரிக்கப்பட்டதும் சிகரெட் துண்டுகள் தான் என்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஸ்ட்ரா, பாட்டில்கள், உணவு குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகளை விட மிகவும் அதிகம்.
கடலுக்கு செல்லும் விதம்
தூக்கி எரியும் சிகரெட் ஃபில்டர்கள் எப்படி கடலை அடைகின்றன என்று பார்த்தால் முக்கியக் காரணம் மழை தான். மழை மூலம் சிகரெட் குப்பைகள் ஆறுகளுக்கு அடித்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கடலுக்குச் செல்கின்றன. அங்கிருந்து அலைகள் மூலம் கடற்கரைக்கும் வந்தடைகின்றன. இதனால் கடற்கரையில் இருக்கும் சிறு உயிரின்களும் பாதிப்படைகின்றன. கடற்கரையில் புகைபிடிப்பவர்களாலும் சிகரெட் ஃபில்டர்கள் கடலுக்குள் செல்கின்றன. சோம்பேறித்தனத்தாலும் பொறுப்பற்ற தன்மையாலும் இதுபோல செய்யும் புகைபிடிப்பவர்களுக்கு உண்மையில் அவர்கள் செயல் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதே இல்லை. அதே போல் மண்ணில் புதையும் சிகரெட் துண்டுகளால் பூமி மாசுபடுவதுடன், சிகரெட் ஃபில்டரில் கலந்துள்ள பிளாஸ்டிக் நிலத்திற்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கிறது.
சிகரெட் ஃபில்டர்கள் எவ்வளவு சிறுசிறு துண்டுகளாக உடைந்தாலும் அவை மட்க பல ஆண்டுகளாகும்!
மட்காத சிகரெட் ஃபில்டர்கள்
சிகரெட்டின் அடியில் இருக்கும் பஞ்சு போன்ற சிகரெட் ஃபில்டர் பகுதியில் சிறிதளவாவது செல்லுலோஸ் அசிடேட் இருக்கும். மேலும் அதில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களும் இருக்கும். இதனால் இவை மட்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். இந்த சிகெரெட் குப்பை மட்க ஆரம்பிக்கும் வரை அது புகையில் இருந்து உறிஞ்சும் ரசாயனங்களான அதாவது நிகோடின், ஆர்சனிக், லெட் போன்ற மாசுக்களை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்களால் சிகிரெட்டின் ஃபில்டர்கள் உடைந்தாலும் உண்மையில் அவை மட்காது. அதாவது அவை எவ்வளவு சிறுசிறு துண்டுகளாக உடைந்தாலும் எளிதில் மட்காது.

Credit: blue ocean
பாதிப்புகள்
வருடத்திற்கு சுமார் 5.5 டிரில்லியன் சிகரெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கிட்டதிட்ட அவை எல்லாமே பிளாஸ்டிக் ஃபில்டர்களுடன் தான் தயாரிக்கப்படுகின்றன. சிகரெட் தயாரிப்பில் சுமார் 600 பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் புகையிலை எரிக்கப்படும் போது சுமார் 7000 ரசாயனங்கள் உருவாகின்றன. அதில் புற்றுநோயை உருவாக்கும் 69 கார்சினோஜென்கள் இருக்கின்றன. 70% கடல் பறவைகள் மற்றும் 30% கடல் ஆமைகலில் இந்த ரசாயனங்களுக்கான தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். இது கவலைக்குரிய விஷயம். ஒரு ஆய்விற்காக மீன்கள் இருந்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிகரெட் ஃபில்டர் போடப்பட்டது. தொடர்ந்து ஆராய்ந்த போது சிகரெட் ஃபில்டரில் இருந்து வெளிப்பட்ட ரசாயனங்களால் அந்த நீரில் இருந்த கிட்டதிட்ட பாதி மீன்கள் இறந்துவிட்டன. மொத்தத்தில் சிகரெட் கழிவுகளால் மீன்கள் நச்சுத் தன்மை அடைகின்றன. விளைவு அதனை உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்படுகிறோம். கடல் பாக்டீரியாக்களுக்கும், சிறு உயிரினங்களும் பாதிக்கப்படுவதோடு அவற்றின் வாழ்விடங்களும் மாசடைகின்றன.

Credit: tribune
உலக சுகாதார நிறுவனம்
சிகரெட்டின் பாதிப்புகளைக் குறைக்க சிகரெட்டின் ஃபில்டர்கள் 1950 களில் புகையிலை தொழிற்சாலைகளால் தயாரிக்கப்பட்டன என்று உலக சுகாதார நிறுவனம் (WHO)கூறியுள்ளது. அப்படியென்றால் இப்போது தயாரிக்கப்படும் ஃபில்டர் சிகிரெட்கள் பாதிப்பு குறைவு எனபது நிச்சயம் பொய் தான். அதோடு சிகரெட் சாம்பலை சிகிரெட்டை தட்டி கீழே கொட்டுவார்கள். அப்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 680 மில்லியன் கிலோ புகையிலை உலகம் முழுவதும் கொட்டப்படுகிறதாம். இந்த குப்பையிலும் சுமார் 7000 நச்சு ரசாயனங்கள் இருக்கின்றன என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதுவும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிகரெட் தொழிற்சாலைகள் இதற்கான தீர்வைப் பெற சில நடவெடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும் தீர்வு ஒன்றும் கிடைக்கவில்லை. அதே போல் புகைபிடிப்பவர்கள் இதில் கவனம் செலுத்தி குப்பை தொட்டிகளை பயன்படுத்தினால் கூட பாதிப்பு முழுவதும் நீங்காது. புகைபிடிப்பதை நிறுத்துவதே இதற்கு முழுமையான தீர்வு.