நவீன உலக வரலாறு கொரோனாவிற்கு முன் மற்றும் கொரோனாவிற்கு பின் என பிரித்து அறியப்படும் அளவிற்கு பல தாக்கங்களை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. இவை ஒருபுறம் இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக இயற்கைக்கு தன்னை பல்லாண்டுகள் கழித்து புதுப்பித்துக்கொள்ள நேரம் கிடைத்தது என்றே சொல்லவேண்டும். காற்று மாசுபாட்டின் அளவு குறைந்திருக்கிறது. நன்னீரில் கழிவுநீர் கலப்பு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நீர்நிலைகள் தூய்மையான தரத்திற்கு தம்மை மாற்றிக்கொண்டுவருகின்றன.
ஆனால், இந்தியாவில் இதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாக உருவெடுத்திருக்கிறது EIA 2020 (Environmental Impact Assessment) என்கின்றனர் சுற்றுச்சூழலியலாளர்கள். EIA – தமிழில் சொன்னால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு. அதில் செய்யப்பப்போகும் திருத்தம் தான் EIA 2020 வரைவு. எதிர்கால இந்தியாவின் வளங்களை அசைத்துப்பார்க்க இருக்கும் இந்த திட்டத்தினை எதிர்த்து ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால், இந்த திட்டத்தினை செயல்முறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.
EIA 2020 என்பது என்ன?
இந்தியாவில் எந்த பகுதியிலும் ஒரு புதிய நிறுவனம் துவங்க வேண்டுமானால், அந்த இடத்திற்கு துவங்கப்படும் நிறுவனத்தால் ஏதேனும் காற்று, நீர், நில, கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை ஆராய, அதற்கான வழிமுறைகளை வழங்குவதே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA). தற்போது இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட EIA விதிமுறைகள் தான் பின்பற்றப்பட்டு வருகின்றன.
Also read:இயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்
நிலக்கரி மற்றும் பிற தனிம சுரங்கம், உட்கட்டமைப்பு, அனல்/அணு/நீர் மின் நிலையங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழிற்சாலைகள் ஆகியவை துவங்கப்படும் போது அதற்கான வழிமுறைகளை EIA வழங்கிவந்தது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகள் தங்களுக்கான பிரத்யேக EIA விதிமுறைகளை வகுத்து அதனை செயல்படுத்தியும் வருகின்றன. பொதுவாக தொழிற்சாலைகள்/உட்கட்டமைப்பு துறைகளை விரிவாக்கம் செய்யும் போது இயற்கை வள அழிப்பு என்பது நிகழும். அதனைக் கட்டுப்படுத்தவே இந்த EIA போன்றவை தேவைப்படுகின்றன. ஆனால் தற்போது இந்தியாவில் கொண்டுவரப்பட இருக்கும் EIA 2020 என்பது இயற்கை வளங்களுக்கு கொடுக்கப்பட்டுவந்த முக்கியத்துவத்தினைக் குறைத்து, தொழிற்சாலை மற்றும் பொருளாதார விரிவாக்கத்திற்கு அதீத முக்கியத்துவத்தினை அளிக்க இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த வரைவினை சூழலியல் ஆர்வலர்கள் எதிர்த்துவருகின்றனர்.
Also read: வளங்களை இப்படியே சுரண்டினால் 2030-ல் இரண்டு பூமி தேவை – புவி வள மிகைச்சுரண்டல் நாள் சிறப்பு பதிவு!!
EIA வின் வரலாறு
தொழிற்புரட்சி உலகம் முழுவதிலும் தனது கால்களை ஆழப் பதித்து நின்றதற்கு பிறகுதான் சுற்றுச்சூழல் காரணிகளில் புதிய தொழில் முறைமைகளினால் ஏற்பட்ட தாக்கம் உலகத்திற்கு தெரியவந்தது. இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபை திட்டம் ஒன்றினை முன்மொழிந்தது.
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம்-ல் ஐநா மாநாடு ஒன்றினைக் கூட்டியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் வழியே நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதாரம் ஆகியவை பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டன. உலக நாடுகளும் அதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டன.
அதன் பின்னர் ஒவ்வொரு நாடுகளிலும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சட்டங்கள் அதிகளவில் இயற்றப்பட்டன. இந்தியாவிலும் 1974 ஆம் ஆண்டு நீர்நிலை பாதுகாப்பிற்கான சட்டத்தினையும் 1981 ஆம் ஆண்டு காற்று மாசுபாட்டினை தவிர்க்கும் வகையிலும் சட்டமானது இயற்றப்பட்டது. ஆனால், அவையெல்லாம் பெரியளவில் பலனிக்காது என்பதை இந்தியா உணர்ந்துகொண்டது போபால் விபத்திற்கு பின்புதான்.
தொழிற்சாலை ஒருவேளை விபத்தினை சந்தித்தால், அதனால் அதனைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் மனிதர்களின் நிலையை அஜாக்கிரதையாக கையாண்டதன் விளைவே 3,787 அப்பாவி மக்களின் மரணம். அதற்குப் பிறகு இந்தியாவில் தொழிற்சாலை நிறுவுதலுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய அரசு முடிவெடுத்தது. ஒருவழியாக 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தினை இயற்றியது இந்தியா.

இந்தியாவில் தாராளமயமாதல் கொள்கையை நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து தொழில் நிறுவனங்கள் இந்தியாவிற்கு படையெடுக்கத் துவங்கின. ஆகவே, தொழிற்சாலை நிறுவுதலுக்கான சுற்றுச்சூழல் துறையின் அனுமதி என்பது அவசியமாகியது.இதனால் தொழிற்சாலை தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 (EIA 2006) சட்டத்தின் கீழ், திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து மதிப்பீட்டு அறிக்கை பெற வேண்டும். இதற்கென்று அரசு குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருந்தால் அனுமதி வழங்கும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இருந்தால் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்படாது.
இந்த திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்படும். அப்படி 2006 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் EIA வில் கொண்டுவரப்பட்டன. அதனாலேயே அது EIA 2006 என அழைக்கப்படுகிறது. புதிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் துவங்கப்பட வேண்டுமென்றால் இந்த EIA விடம் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதி பெற காற்று, நிலம் நீரின் மீதான பாதிப்பு போன்ற 8 படிநிலைகளை பின்பற்றி அந்த அறிக்கையை ஆராய்ச்சியாளர் ஒருவரின் ஒப்புதலுடன் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு தொழில் துவங்க இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 640 நாட்கள் இந்திய அரசால் வழங்கப்பட்டன. ஆனால் EIA 2020 ல் இந்த நாட்கள் 108 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளன. இத்தனை குறுகிய நாட்களுக்குள் எப்படி அனுமதி பெற முடியும் என்ற கேள்வி எழுகிறதா?
அங்குதான் இன்னொரு சிக்கல் எழுகிறது. நீங்கள் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிறுவனத்தினை குறிப்பிட்ட இடத்தில் துவங்கலாம். அதன்பிறகு அனுமதி விவகாரங்கள் பின்பற்றப்படும் என EIA 2020 சொல்கிறது.
இன்னும் சில வகையிலான நிறுவனங்களுக்கு EIA அனுமதி பெறத் தேவையில்லை என அறிவித்திருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். முன்பு, மத்திய மற்றும் மாநில அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறை கைவிடப்படுவதுடன், நிறுவனங்கள் எந்த அனுமதியும் பெறாமல் தங்களது பணிகளைத் துவங்கலாம்.
Also Read: பூமியின் வெப்பத்தை அதிகம் உறிஞ்சும் கடல்கள்
என்னென்ன திருத்தங்கள் செய்யப்படவுள்ளன?
ஸ்டெர்லைட் பிரச்சினை என்பது அத்தனை எளிதில் நம்மால் மறக்க முடியாத வடுவாக மாறியிருக்கிறது. தூத்துக்குடியில் இருக்கும் அந்த ஆலைக்கு எதிராக சென்னையில் உள்ள மக்களும் திரண்டார்கள் அல்லவா? EIA 2020 செயல்படுத்தப்படுமேயானால் குறிப்பிட்ட தொழிற்சாலை இருக்கும் இடத்தில் இருக்கும் மக்கள் மட்டுமே அதனை எதிர்த்து கேள்வியெழுப்ப முடியும்.
அப்படியில்லை எனில், அரசு அதிகாரிகளோ அல்லது அதே குறிப்பிட்ட தொழிற்சாலை நிறுவனமோ அதிருப்தி தெரிவிக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அரசு ஆய்விற்கு உட்படுத்தும்.தனது நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என அந்த நிறுவனமே அரசிடம் முறையிடும் என்பது எப்படி சாத்தியமாகும் என்பதே தெரியவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எந்த ஆடாவது தன் தலையில் மாலையை போட்டுக்கொண்டு வெட்டச்சொல்லி கசாப்புக் கடைக்காரனிடம் கேட்குமா என்ன?
EIA 2006 ன் படி தொழிற்சாலைகளை நிறுவுதல் குறித்த மக்களின் கருத்துக் கேட்பு நடைபெறும். முன்பு இதற்கென 30 நாட்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. இந்த கால இடைவெளியில் மக்கள் அந்த தொழிற்சாலையின் இயக்கம் பற்றி அறிந்து, அதிலுள்ள குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டலாம். ஆனால் தற்போது அந்நாட்கள் 20 நாட்களாக குறைக்கப்பட இருக்கிறது.

“தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவையில்லை என்கிறது இந்த EIA 2020 வரைவு. பின்னாளில் எந்த திட்டத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எனக் கூறிவிட வாய்ப்பு இருக்கிறது அல்லவா? மேலும், எந்த கருத்துக் கேட்பும், சூழலியல் மதிப்பீடும் செய்யாமல் அமல்படுத்தலாம் என்கிறது இந்த புதிய வரைவு.
இந்திய அரசால் ஒரு திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன்பிறகு அந்த திட்டத்தின் பணிகள் குறித்து பொதுமக்கள் எந்த தகவலையும் பெற முடியாது. தற்போதைய நிலையில் உள்நாட்டு நீர்நிலைகள், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஆகியவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களாக அறிவிக்கப்பட EIA 2020 வழிவகுத்திருக்கிறது.
அதேபோல, முன்பு 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட தொழிற்சாலை ஒன்றினைத் துவங்குவதாக இருந்தால் EIA விடம் அதற்கான ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால் EIA 2020 ன் படி 1,50,000 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்ட தொழிற்சாலைகள் வரையில் துவங்கப்படுவதற்கு EIA விடம் அனுமதிபெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுப்பு நிலங்களுக்கு ஆபத்து
நிலத்தடி நீரின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்க மற்றும் சூழலியல் சமநிலையை தொடர சதுப்பு நிலங்களின் இருப்பு மிக அத்தியாவசியமானது. இந்த EIA 2020ன் மூலம் சதுப்பு நிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் சதுப்புநிலங்களில் மக்கள் வீடுகள் கட்டி குடியேறியதும், 2015 சென்னை வெள்ளத்தில் மிதக்க காரணமாக ஆனது குறிப்பிடத்தக்கது.
Also Read: பூமியின் ஆண்டின் பாதியளவு மழை வெறும் 12 நாட்களில் பொழிகிறது!! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு
வறண்ட புல்வெளிகள் என வரையறுக்கப்படும் தரிசு நிலங்களை, தனியார் நிறுவனங்களுக்கு விற்கவும் இந்த வரைவானது ஒப்புதல் அளிக்கிறது.
இந்த இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் அரசு இணையத்தளத்தில் இருக்கும் EIA Draft 2020 கோப்பினை நீங்கள் படித்தறியலாம்.
இந்த வரைவு ஒருவேளை ஏற்கப்பட்டு சட்டமாக்கப்பட்டால், நம் கண்முன்னே நமது இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டாலும் நம்மால் அதனை எதிர்த்து குரல் எழுப்ப முடியாமல் போகலாம் என்பதே சூழலியலாளர்களின் அச்சம். வேலைவாய்ப்பையும் தொழிற்சாலை உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற சுற்றுச்சூழலை பலியிடுவது எந்தவகையில் சரி? என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
மக்கள் இத்திட்டம் குறித்து தங்களுடைய கருத்துக்களை eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என அரசு தெரிவித்திருக்கிறது. இதனை எதிர்த்து குரலெழுப்ப ஆகஸ்டு 11 ஆம் தேதிவரையில் மட்டுமே அவகாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.