
கடந்த பத்து வருடங்களாக மனித யானை மோதல்களை பற்றிய செய்தி ஊடகங்களில் வருவது தொடர்கதையாகிவிட்டது. இதில் யானையை எதிர்மறையாக கொண்டு எழுதப்பட்ட செய்திகளே மிக அதிகம். இந்த நிகழ்விற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால், சந்தேகமே இல்லாமல் மனித இனம் தான் என்ற கசப்பான உண்மை நம் எல்லோருக்கும் புலப்படும்.
மனிதனின் சுயநலம்
யானை, மனித இனத்திற்கு முன் தோன்றி, பரந்து விரிந்த இவ்வுலகை கம்பீரமாக ஆட்சி செய்து வந்தது. ஆதிகால மனிதன் தன் தேவைக்காக காடுகளை அழித்து, நீர்நிலைக்கு அருகில் தனக்கான வாழ்விடத்தை அமைத்தான். யானைக்கும் இந்த நிலத்தில் பங்குண்டு என்பதை அறிந்து, யானை உணவுக்கும் நீருக்கும் தனது வாழ்விடத்தை தேடிவரும் போது பங்கிட்டு கொண்டான். காலப்போக்கில் மனிதனின் எண்ணம் முற்றிலும் மாற தொடங்கியது; பேராசையும் சுயநலமும் மேலோங்கின. தனது வாழ்விடம், தனது எல்லை என்று மனது சுருங்கியது.
மேலும், தொடர்ச்சியாக உயர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கமும், நமது அடிப்படை தேவைகளும் யானைகளின் வாழ்விடத்தை பெருமளவு ஆக்கிரமித்து அழித்துவிட்டன. இதன் விளைவாக தெற்காசியா முழுவதும் பரவியிருந்த யானை இனம், இன்று வெறும் 13 நாடுகளில் மட்டும் எஞ்சிய சிறு பகுதிகளில் அகதியைப்போல் வாழ்ந்துவருகிறது.
என்னென்ன வழிகளில் யானைகளுக்கு தொல்லை தருகிறோம்?
- சாலைப் போக்குவரத்து, தொடர்வண்டி இருப்புப்பாதை, வழிபாட்டுத்தலங்கள், நகர விரிவாக்கம் , தொழிற்சாலைகள் யானைகளின் இருப்பிடத்தை துண்டாக்கின.
- மேலும் விவசாய நீர் மேலாண்மைக்காகவும், நீர்மின் நிலையத்திற்கும் மிகப்பெரிய அணைகள் கட்டப்பட்டன. இதன் விளைவாக எஞ்சியிருந்த யானையின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கின.
- மேலும் உணவு உற்பத்திக்காக காட்டின் அருகாமையில் இருத்த தரிசு நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டன.
- நீர்மூழ்கி மின் மோட்டார் மூலம் காட்டின் நீர்வளம் கூட உறிஞ்சப்பட்டது. பருவகால பயிர்களான காய்கறிகள், ஆண்டுப் பயிர்களான வாழை, தென்னை மற்றும் பாக்கு பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது.
- யானைக்கும் நிலத்தில் பங்குண்டு என்பதை மனிதன் மறந்தான். ஆண்டாண்டு காலமாக யானை பயன்படுத்திய பாரம்பரிய வாழ்விடத்தையும் அதன் வழித்தடத்தையும் ஆக்கிரமித்தான்.
- காட்டை ஒட்டிய சமவெளி பகுதி விளைநிலங்களாக மாற்றப்பட்டன. தனது பயிர்களை காக்க வேலியமைக்கத் தொடங்கினான். முதலில் வெறும் செடிகளால் ஆன வேலி மெல்ல பரிணாம வளர்ச்சிப்பெற்று கம்பி வேலியாக மாறி, பின்னர் உயிர்குடிக்கும் மின்வேலியாகவும் மாறியது.
- யானை வலசை போக பயன்படுத்தும் வழித்தடங்கள், மின் வேலி மற்றும் சுற்று சுவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதான் மனிதன் யானை மீது தொடுத்த மிகப்பெரிய தாக்குதல்.
இவ்வாறு மனிதனின் தொடர் தாக்குதலால் யானையினம் செய்வதறியாது திகைத்து நின்றது.
வில்லனாக்கப்பட்ட யானைகள்
மனித-யானை மோதல்களில் எப்படியெல்லாம் மனிதர்கள் யானைகளை வில்லனாக்கி இருக்கின்றனர் என்று பாருங்கள்!
- பாரம்பரிய வழித்தடத்தை பயன்படுத்த, மின்வேலியை சேதப்படுத்திய யானைகள் கொடூர வில்லன்களாக சித்தரிக்கப்பட்டன. சட்டத்திற்கு புறம்பான நேரடியான மின்வேலிகளால் பெருமளவில் ஆண் யானைகள் இன்றுவரை இறக்க நேர்கிறது.
- உணவுக்காகவும், நீருக்காகவும் தனது வாழ்விடத்தை தேடிய யானைகள், பயிரை சேதப்படுத்தியதாக காரணம் காட்டி ஈவு, இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன.
- பிறந்த குட்டிகள் மலையேற முடியாததால், பாதுகாப்பாக சமவெளியில் அழைத்துச்செல்ல நினைத்த யானைகள் துரத்தப்பட்டன.
- மனித-யானை மோதலில் மனிதனுக்கு ஏற்படும் இழப்பு மட்டும் மிகைப்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டுக்கு சுமார் 600 சதுர கிலோமீட்டர் வரை செல்லும் யானைகள் மனிதர்களின் இடையூறால் தற்காலிக வாழ்விடங்களுக்குள் செயற்கையாகஅடைக்கப்படுகின்றன. இதுவே மனிதயானை மோதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
யானைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்!
யானைகளை எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறோம் என்பதை வன உயிரின ஆர்வலர்களைக் கேட்டால் மட்டுமே தெரியவரும். யானைகளை நேரடியாக கண்காணித்த அனுபவம் எனக்கு உள்ளதால் அதை பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.
காட்டின் அருகே பல இடங்களில், யானைக்கு ருசியான கரும்பு மற்றும் தினைகளை பயிரிட்டும், பல மைல் தூரம் வாசம் வீசும், யானைக்கு பிடித்தமான பலா மரத்தையும், புளிய மரத்தையும், வாழை மரத்தையும் வீட்டு அருகேயும் வாசலிலும் வைத்து யானையை தம் வீட்டுக்கே வரவழைக்கிறோம். அவ்வாறு வரும் யானையை, கோபமடையச் செய்து அது உயிர் மற்றும் பயிர் சேதங்கள் ஏற்படுத்துவதற்கு நாமே காரணமாகிறோம். பின்னர், மரக் கிளைகளில் பரண் அமைத்து யானையின் மீது கூரிய வேல்களை வீசியும், மிதி வண்டியின் டயர்களை கொளுத்தி யானையின் முதுகில் எறிந்தும், பின் யானை தாக்குவதற்கு ஏதுவாய், யானையின் பலம் தெரிந்தும், அதன் அருகே சென்று கற்களை வீசியும், குச்சியினை எடுத்து விரட்ட முயற்சித்தும், பதிலுக்கு யானை தாக்கினால் ஊடகங்கள் மூலம் அதை குற்றவாளி கூண்டில் ஏற்றி விடுகிறோம்.
காட்டின் உள்ளேயும் அருகேயும் வாழும் மக்கள், காட்டில் ஓடும் ஆறுகளிலும், நீர் மிகுந்த நிலத்திலும் சக்தி வாய்ந்த மோட்டார்களின் உதவியால் நீரை உறிஞ்சி விவசாயம் மேற்கொள்ளும் போது காட்டின் உள்ளே நிலத்தடி நீர் குறைகிறது. யானைகளுக்கு தேவையான நீர் கிடைக்காமல் தவிக்கும் நேரத்தில், நம் நிலத்தில் நீர் தொட்டியையும், குட்டையும் அமைத்து யானை நீருக்கு வர கூடாது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
யானை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது ஒன்றும் புதிது அல்ல. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளிலேயே இத்தகைய பயிர் சேதம் இருந்ததாக கஜசாஸ்திரம் கூறுகிறது. ஒரு காலத்தில் காட்டில் வாழ்ந்த நாம் முக்கியமான நீர் நிலைகளை பிடித்து விவசாயம் மேற்கொண்டதையும் பிற்காலத்தில் அந்த பகுதிகள் நகரமானதையும் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இத்தகைய நீர்நிலைகளை யானைகளும் பயன்படுத்தியதை நாம் மறந்து விட்டோம். முன்பெல்லாம் மானாவாரி பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படும் நிலங்களில் இன்று பணப்பயிர்கள், ஒரு போகம் மட்டுமே விளைவிக்கப்படும் நிலங்களில் முப்போக பயிர்களும், தரிசு நிலங்கள் யாவும் அடுக்கு மாடி கட்டிடங்களாகவும் யானை மனித முரண்பாடுகளுக்கு முக்கிய காரணமாகும்.
மனித-யானை மோதலுக்கு தீர்வுகள் தான் என்ன?
மனித-யானை மோதலுக்கு, ஒரு வன உயிரின ஆராய்ச்சியாளராக நான் கூறும் வேறு பல காரணங்களையும், முன்வைக்கும் தீர்வுகளையும் அடுத்த பகுதியில் இங்கே காணலாம்.