கடந்த வாரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள பார்பரா கடற்கரை அருகே வித்தியாசமான கடல்வாழ் உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 7 அடி நீளம் கொண்ட இதன் வரலாற்றை ஆராய முற்பட்டபோது அப்படி ஏதும் இல்லை என்று கைவிரித்திருக்கிறது கணினி. உண்மைதான். கடல்வாழ் உயிரினங்களில் இன்றுவரை பல உயிரினங்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காமல் கடலே கதி என ஆராய்ச்சியாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது இந்த பிரம்மாண்ட உயினம்.

அடிப்படையில் மீன் தான் என்றாலும் உலகின் அதிக எடையுள்ள மீன் இனங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சராசரியாக 1000 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இந்த ராட்சத மீன் கேமிராவின் கண்களில் சிக்குவதே இல்லை. கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கடற்கரையில் தான் முகம் காட்டியது இந்த மீன். அப்போது அதற்கு மோலா டெக்டா (Mola tecta) எனப்பெயரிட்டிருக்கின்றனர். Mola tecta என்றால் லத்தீன் மொழியில் “மறைவான” என்று பொருள்.
கண்டம் விட்டுக் கண்டம்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கண்டத்தில் அதாவது தென் அரைக்கோளத்தில் மட்டுமே வசிக்கும் இந்த மீன் எப்படி அமெரிக்கா வரை பயணித்தது என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் குழப்பத்திற்கான காரணம்.

கரை ஒதுங்கிய மீனைப்பார்த்த உடன் பார்பரா கடல் பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் மோலா மீன் என ஆராய்ச்சியாளர்கள் நினைத்திருக்கிறார்கள். சன்பிஷ் என்றும் மோலா மீன் அழைக்கப்படுகிறது. மீனை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ஒருவர் விளையாட்டாக பேஸ்புக்கில் இந்த மீனின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
பார்பரா வில் இருக்கும் UC Santa Barbara பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியில் தலைமைப் பேராசிரியரான தாமஸ் டர்னர் (Thomas Turner) இந்த புகைப்படங்களை அடுத்தகட்ட ஆராய்ச்சிகளுக்காக iNaturalist என்னும் அமைப்பிற்கு அனுப்பியிருக்கிறார்.

அதன்பயனாக ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இது மோலா டெக்டா என்று கண்டுபிடித்ததும் அவர்கள் தான். 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டுவருடங்கள் கழித்து கிடைத்திருக்கும் இந்தவகை மீனினால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்திருகின்றனர். அதே நேரத்தில் இந்த மீன்கள் கண்டம் விட்டு கண்டம் நீந்துவது எப்படி? பார்பராவில் இன்னும் இந்தவகை மீன்கள் இருக்கின்றனவா? என்ற கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலைத் தேடிவருகின்றனர்.