28.5 C
Chennai
Saturday, February 24, 2024

ராஜபாளையம் அய்யனார் கோவில் அருவி

Date:

1962ஆம் ஆண்டு.  அன்றைய  வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் மேற்குக் கடைசியில், மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி உள்ள, செழிப்பான பெரிய ஊர், இராசபாளையம்.  மழைக் காலங்களில் ஊருக்குக் கிழக்கே உள்ள சஞ்சீவி மலையிலிருந்து, கீழே ஒடி வரும் நீர், கழுதைக் கடவு வழியாக இறங்கி, வடூரணிக்குப் போய்ச்சேரும்.  மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஓடிவரும் நீர், பல்லிளிச்சான் கணவாய், (காரணப் பெயர்) வழியாகவும் அய்யனார் கோவில் அருவி வழியாகவும் கிழக்கு நோக்கி வந்து, பல பக்கங்களிலும் பாய்ந்து ஊரை வளப்படுத்தும்.

Stream
நீரோடை

6, 7, 8 ஆகிய வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த நாங்கள் 65 பேர், 4 ஆசிரியர்கள் தலைமையில் காலை 6 மணிக்கு, அய்யனார் கோவில் அருவி நோக்கி சிறு சுற்றுலாவாகச் சென்று கொண்டிருந்தோம்.  முடங்கியாறு சாலையில், பொன் விழா மைதானத்தைத் தாண்டியதும் எங்கள் சரித்திர ஆசிரியர், தங்கப்பாண்டியன், ‘டேய்! அங்க பாருங்கடா மேற்குத் தொடர்ச்சி மலையில, வட மேற்குப் பக்கம் பாருங!க  வெள்ளைப் பல்காரன் சிரிக்கிற மாதிரி, அழகா மலையில இருந்து, தண்ணி கீழே ஓடிவருது.  அது தாண்டா, பல்லிளிச்சான் கணவாய்.  நாம, இப்ப 8 மைல் தூரத்துல இருக்கிறோம்.  இங்கிருந்து பார்த்தாலே தண்ணி ஓடி வர்றது தெரியுதுனா, பக்கத்துல போய்ப்பார்த்தா, எவ்வளவு அகலத்துக்கு, பிரமாண்டமா இருக்கும்னு கற்பனை பண்ணுங்கடா”.

ஒரு மாணவன், ‘அந்தத் தண்ணியெல்லாம் எங்கே போகுது சார்”?. ஆசிரியர், ‘மேற்குத் தொடர்ச்சி மலையில இருந்து வர்ற தண்ணீர்  தான், முடங்கியாறுக்கு வந்து, அருகு பத்திக் கால்வாய் (குத்தப்பாஞ்சான்), பெரியகுளம், அப்பாள் ராசா ஊரணி, புளியங்குளம், பெரிய மந்தை, கொண்டனேரிக் கண்மாய்னு தொடர்ச்சியா வந்து, ஊரைச் செழிப்பாக்குது.  அன்று ஊரையொட்டியுள்ள பெரிய மந்தையில், நீச்சலடிக்குமளவுக்குத் தண்ணீர் இருந்தது.  பழைய பாளையம், பெரிய கடை பசார், சுரைக்காய்ப்பட்டித் தெரு, தம்பா பிள்ளைத் தெரு, மக்கள், பெரிய மந்தையில் இருந்த நீரில் குளித்தனர்.  துணி துவைத்தனர்.  மலையில  இருந்து வர்ற  இந்தத் தண்ணில, ஊருக்குக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்துற முயற்சி நடக்குது” என்று ஆசிரியர் கூறினார்.  காலை 7 மணியளவில்  முடங்கியாற்றின் அருகில், இருந்த மரங்களடர்ந்த திட்டில் உட்கார்ந்து, கொண்டு சென்ற புளியோதரையைச் சாப்பிட்டோம்.

முடங்கியாறு தாண்டியபின், சாலையில் யானையின் லத்தி (யானையின் விட்டை – கழிவு) கிடந்தது.  மாணவர்கள் ஓடிப்போய், யானையின் லத்தி மீது 2 கால்களாலும் மிதித்தார்கள். செருப்பில்லாமல் வெறுங்காலுடன் நடப்பவர்கள் நாங்கள்.  யானையின் லத்தியை மிதித்தால், காலில் முள் முத்தினால் கூட, பாதிப்பு இருக்காது என்பது மாணவர்களுக்குக் கூறப்பட்டுள்ள செவிவழிச் செய்தி.

ஆசிரியர் தங்கப்பாண்டியன், ‘யானை லத்தி இன்னும் காயாம இருக்கு.  நேத்து ராத்திரி யானை இங்க வந்துட்டுப் போயிருக்குது” என்று கூறினார்.  6ஆவது மைல் கடந்ததும்  2 பக்கமும் வரிசையாகப் புளியமரங்கள்.  சில புளிய மரங்களின் காய்கள் மட்டும் உள்ளே சிவப்பாக இருக்கும்.  (வழக்கமான நிறம் பச்சை).

படிப்படியாகச் சரிவாக உயரும் பாதை.  7 மைல் கடந்து வந்துவிட்டோம்.  குறுக்கிடும் ஓடையின் குறுக்கே, தண்ணீரில் இறங்கி, மேற்கொண்டு நடந்தோம்.  அருவி இன்னும் 1 மைல் தூரத்தில் உள்ளது.  ஆசிரியர் அமைதியாக இருந்து, கூர்ந்து கவனிக்கச் சொன்னார்.  அமைதியான அந்தக் காலை நேரத்தில், அமைதியான அந்தக் காட்டுப் பகுதியில், 1 மைல் தூரத்தில் தண்ணீரைக் கொட்டுகின்ற அருவியின், சத்தம் மெதுவாகக் கேட்டது.  மேலே தொடர்ந்து செல்லச் செல்ல, அருவியின் சத்தம் படிப்படியாக அதிகமாகித் தெளிவாகக் கேட்டது.

அய்யனார் கோவில் அருவி, இராசபாளையம் நகரிலிருந்து ஏறத்தாழ 2000அடி உயரத்திலிருக்கும்.  அருவி இருக்கும் இடம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம்.  அருவிக்குக் கீழே சற்றுத் தூரத்தில், அய்யனார் கோவில் இருக்கிறது.

Waterfalls of Western Ghats

ஆசிரியர் தங்கப் பாண்டியன், ‘இப்படியே மலையில தொடர்ந்து ஏறி, மலையைத் தாண்டி அந்தப் பக்கமா இறங்குனா, கேரளா வந்துடும்.  தமிழ்நாடு எங்க முடியுது?.  கேரளா எங்கு தொடங்குதுன்னு? சொல்ல முடியாத அளவுக்கு, அடர்ந்த காட்டுப் பகுதி.  கேரளாங்குறது,  நம்முடைய பழந்தமிழ் சேரநாடு.  மேகமலை (காரணப் பெயர்)  எஸ்டேட் இங்கிருந்து பக்கம்.  திருவனந்தபுரத்துல இருந்து மதுரை வர்ற விமானம், இந்தப்பகுதியில் தான் மலையைக் கடக்கும்.  மலைல ஏறிப்போனா, இரத்தத்தை உறியும் அட்டைப் பூச்சி இருக்கும்”.  இங்கிருந்து தென்மேற்காப் போய் அந்தப் பக்கம் இறங்குனா, பொன்னம்பல மேடு, பிறகு சபரிமலை வந்துடும்”.  பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே இருப்பதால், மாணவர்கள், ஆசிரியர்களிடம் வேடிக்கையாகப் பேச ஆரம்பித்தனர்.

அசோகன் எனும் மாணவன், ‘பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வந்து, சேர நாட்டு எல்லையில் நிற்கிறோம்”. தமிழ் ஆசிரியர் ஆதிமூலம், ‘இடையில் மலை குறுக்கிட்டதால, போக்குவரத்து சிரமமாகி, தொடர்பு குறைந்து, சேரநாட்டுத் தமிழ் கொஞ்சங் கொஞ்சமா மலையாளமா மாறிருச்சு”. மலை ஆழம் தான் மலையாளம்.  ‘சோழ நாடு, நமக்குப் பக்கத்துல இல்லை” என்றான் ஒரு மாணவன்.  வாசிமலை எனும் மாணவன், “சார்! நிலத்தை விற்றவர், நிலத்தை வாங்கியவர் 2 பேருமே நிலத்தில் உள்ள புதையல் தனக்குச் சொந்தமில்லை என வாதாடிய பொழுது, கரிகால் சோழன் முதியவர் வேடம் பூண்டு வந்து, ஒருத்தர் மகனுக்கும் ஒருத்தர் மகளுக்கும் திருமணம் செஞ்சு வச்சு, பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்னு சொன்னீங்க.  அவங்களுக்குக் கல்யாண வயசுல பிள்ளைகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது ஒருவரது ஒரே மகள் வயதில் மூத்திருந்து மற்றவரது மகன் வயதில் இளையவராயிருந்திருந்தா, கரிகாலன் மன்னன் தடுமாறிப் போயிருப்பான், சார்!”

தமிழ் ஆசிரியர், ‘பழந்தமிழர்கள், உழைத்து வராத பொருளுக்கு, அல்லது பிறர் பொருளுக்கு ஆசைப் படாதவர்கள் என்பது தான் இதில் முக்கியச் செய்தி.  திருமண வயதில் இருவீட்டிலும் பொருத்தமான பிள்ளைகள் இல்லை என்ற நிலை இருந்தால், கரிகாலன் வேறு பொருத்தமான நீதியினை வழங்கியிருப்பான்”.

ஆசிரியர்,  ‘இங்கிருந்து தெற்கே 10 மைல் போனா, சிவகிரி வந்துடும்.  அங்கே உள்ள மலைல இருந்துதான் பெரியாறு உற்பத்தி ஆகுது.  வடக்குப் பக்கம், மலை உச்சில, டிரான்ஸ் பார்மர் வரிசையாத் தெரியுது பாருங்க.  இது நம்ம முதலமைச்சர் காமராஜர் போட்ட திட்டத்தின் படி, பெரியாறு அணையிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் இந்த மலை வழியா, இந்த டிரான்ஸ்பார்மரில் நம்ம ஊர்ப்பக்கம் வருது.  ‘பென்னி குவிக்”னு பேருடைய வெள்ளைக்காரன் அருமையாக் கட்டிய அணையிலிருந்து தான் இந்த மின்சாரம் வருது”.

அய்யனார் கோவில் அருவியின் எதிரேஇருந்த பெரிய தீவுத்திட்டில், மாணவர்கள் கொண்டு சென்றிருந்த சாப்பாடு, ஆடை, பை இவற்றை வைத்துவிட்டு, மாணவர்கள் அருவியில் ஆட்டம் போட்டனர்.  தூய்மையான, சுவையான, மூலிகைவளம் நிறைந்த அருவிநீர்.

Waterfalls of Western Ghats in TNமலையில் வாழும் 2 பளியர்கள் (ஆதிவாசிகள்) வந்தனர்.  கரிய நிறம்.  குள்ளமான உருவம்.  மெலிந்த உடல்வாகு.  உடன் ஒரு நாய் வந்தது.15 )தமிழ் ஆசிரியர், ‘பளியர்கள் எல்லாம் நம் முன்னோர்கள்.  நாம் சமவெளிப் பகுதிக்குச் செல்லாது, மலையிலேயே வாழ்ந்திருந்தால், நாமும் இவர்களைப் போலத்தான் இருந்திருப்போம்.  நாம் படிக்கிறோம்.  நாகரிகமாக இருக்கிறோம் எனப் பெருமைப் பட்டுக்கொள்கிறோம்.  ஆனால் இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில், திசை காட்டும் அறிவிப்புப் பலகையோ, எழுத்துகளோ இல்லாத இடத்தில், சரியாகச் சென்று திரும்பி வருவதும் யானை, புலி, மான், காட்டு அணில், மிளா, காட்டுப்பன்றி, அலையும் காட்டுப்பகுதியில் இவைகளோடு வாழ்வதும் பளியர்களின் பெரிய திறமைதான்.  இயற்கையான சூழ்நிலையில், இயற்கை வாழ்வு வாழ்கிறார்கள்”.

‘மலையில் உள்ள எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், புளி, உப்பு, இதெல்லாம் கொண்டு சேர்க்கறது இந்தப் பளியர்கள் தான்.  இராத்திரி 7 மணிக்கு இங்கிருந்து கிளம்பி, 8 மைல் நடந்து, 9 மணிக்கு, இராசபாளையம் அம்பலப்புளி பசார் வந்து, மளிகைக் கடையில் 30 கிலோ எடை அளவுக்குப் பொருள்களை வாங்கிக்கிட்டு, அந்த மூட்டையை முதுகுல வச்சுக்கிட்டு, அசோக் தியேட்டர்ல இரவுக் காட்சி சினிமா பார்ப்பாங்க.  படம் அதிகாலை 1 ½ மணி அளவுல முடியும்.  டீ குடிச்சுட்டு, நடந்தால் காலை 5 மணிக்கு அய்யனார் அருவிக்கு வந்துடுவாங்க.  5 மணிக்கு முன்னால மலையில ஏறினா மிருகங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.  விடியப்போற நேரம்கிறதுனால, தைரியமா இன்னும் 6 மைல் நடந்து, மலை உச்சிக்குப் போயி, எஸ்டேட்ல கொண்டு போய்ச் சேர்த்துடுவாங்க.  அதுக்குப் பணம் கிடைக்கும்.  30 கிலோ எடைக்கு மேல், முதுகில தூக்கிக்கிட்டு, மலையில் ஏறுவது சிரமமான காரியம்.  இந்தக்கடும் உழைப்புல தான் வருமானம்.  சினிமா பார்க்கணும்னு, ஆசையில அவங்க தியேட்டருக்குப் போகலை.  காலை 2 மணி வரை நேரத்தக் கடத்துறதுக்கு குறைஞ்ச செலவுல (25 பைசா) நல்ல வழி தான் சினிமா தியேட்டர்”.

‘மலைக்குமேல் பல குகைகள் உள்ளன.  ஒருசில குகைகளில் தவழ்ந்து அல்லது குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டும்.  வெயில் உள்ளே வராது.  எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வராது.  மிருகங்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அருமையான இடம்”.

‘அய்யனார் அருவிக்கு மேல், மலை மேல் ஏறிச்சென்று கொண்டே இருக்கலாம்.  அங்கங்கு குளித்து மகிழ இடங்களும், உணவு உண்ணத்திட்டுகளும் வந்துகொண்டே இருக்கும்.  எவ்வளவு கூட்டம் வந்தாலும், சிரமமின்றி குளிக்கலாம்.  உடலில் தெம்பும் திராணியும் உள்ளவர்கள், அருவிக்கு மேல் 2 மைல் தூரம் உள்ள வழுக்குப் பாறை வரை கூடச்சென்று வருவதுண்டு.  பெரிய வட்ட வடிவப்பாறை. சும்மா உட்கார்ந்தாலே போதும்.  ஓடிவரும் நீரின் வேகம், நம்மை வழுக்கிக் கீழே தள்ளிவிடும்.  கீழே நாம் விழும் இடம், சற்று ஆழமாக நீச்சலடித்துக் குளிக்க வசதியாக இருக்கும். நீர் ஓடி வரும் வழிக்குப் பக்கத்தில், ஏராளமான பாறைகள் ஒன்றன் மேல் ஒன்று, அடுக்கியது போல, வந்து கொண்டே இருக்கும்.  ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு அளவு.  ஒவ்வொரு பாறையும் வௌ;வேறு வடிவம். ஒன்று போல் இன்னொன்று இராது.  ஆனால் அவை அனைத்தும் கருங்கல் பாறைகள்.  தனித்தனியாகப் பாறை.  ஒட்டு மொத்தமாக மலை.  பாறைகள் ஒன்றையொன்று தாங்கிப்பிடிக்கும் நேர்த்தியினை, ஆலமர விழுதோடும் நல்ல கூட்டுக் குடும்பத்தோடும் ஒப்பிடலாம்.

அருவிக்கு மேல் சுமார் 300 மீட்டர் தூரத்தில் கேணி என்ற ஒரு இடம் உண்டு.  அங்கு வறண்ட கோடையிலும் தண்ணீர் இருக்கும்.  யானைகள், புலிகளுக்கு அது ஒரு அமுதசுரபி.  தகதகக்கும் சூரிய ஒளியில், 3 அடி ஆழத்தில், பால் வெண்மை வடிவில், ஒளிரும் தரை மணல் இருப்பதுபோல் தெரியும். நீரினுள் குதித்தால், 12 அடி ஆழத்திற்கு மேல் இருக்கும்.  ஒளிரும் வெண்மணலும் தகதகக்கும் சூரியனும் நம் கண்களை ஏமாற்றி விடுகின்றன.  அதில் குதித்து நீராடி மகிழ்வது, ஆனந்த அனுபவம்.

Jungle Streamஅப்பொழுது காலையும், மதியமும் அங்கு சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, மாலையில் வீடு திரும்பும் எண்ணத்தில் சுமார் 50 பேர் கொண்ட குழு, சமையல் சாமான்களுடன் அருவிக்குக் கீழிருந்த தீவுத்திட்டில் வந்து இறங்கியது.  சமையல் சாமான்கள் மாட்டுவண்டியில் வந்தன.  வந்தவர்கள் மிதிவண்டியில் வந்திருந்தார்கள்.  காலை  உணவுக்கும்  மதியம்  கறிச்சாப்பாட்டுக்கும் ஒரு ஆளுக்கு ரூ. 2½ கட்டணம் வசூலித்து ஒருவர் அந்தக் குழுவை அழைத்து வந்திருந்தார்.21 ) முந்தைய நாள் இரவு மழை பெய்திருந்ததால், அங்கு கிடைத்த விறகுகள் எல்லாம் ஈரமாக இருந்தன.  சமையல் செய்யப் பயன்படுத்த முடியவில்லை.  பளியர்களிடம், ‘காய்ந்த விறகு வேண்டும்” என்று சமையர்காரர் கேட்டார்.  ஒரு பளியர் காட்டுக்குள் போய், 10 நிமிடத்தில் திரும்பி வந்தார்.  ஒரு சுமை காய்ந்த விறகினைத் தலையில் வைத்துக்கொண்டு வந்து இறங்கினார்.

அம்மி, குழவி, உரல், எதுவும் கிடைக்காத அந்தக் காட்டுப் பகுதியில், சால்னா (குருமா?)வுக்காக முந்திரிப் பருப்பை மாவாக அரைக்க வேண்டியிருந்தது.  வாழை இலையில் இருந்த அந்த முழு முந்திரிப் பருப்பை வாங்கிச் சென்ற ஒரு பளியர், 2 சிறிய பாறைகளைக் கழுவி, அவற்றினிடையே முந்திரிப் பருப்பை நசுக்கி, பின் தண்ணீர் ஊற்றி மறுபடி நசுக்கி மாவாக்கிக் கொண்டு வந்து சேர்த்தார்.  காலை உணவான கேசரியும் இட்டிலி, சட்டினி சாம்பாரும் அங்கு ஏராளமாக வளர்ந்துள்ள பசுமையான தேக்குமர இலைகள் பறிக்கப்பட்டு, கவனத்துடன் தேக்குமர இலைகளில் பரிமாறப்பட்டன.

தண்ணீரில் தொடர்ந்து ஆட்டம் போட்டு வந்து, மதியம் 1 மணியளவில் மாணவர்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்ண ஆரம்பித்தனர்.  புளியோதரைக் காரமும் நீர்ச்சத்துடன் உள்ள தேங்காய்ச் சில்லும் கொண்ட உணவை ஒரு மாணவன் ’சொட்டை” போட்டு ருசித்துச் சாப்பிட்டான்.  (சொட்டை என்றால், ருசியான உணவில் மகிழ்ந்து, நாவால் குரலெழுப்புவது).

குழுவாக வந்தவர்களுக்கு, மதிய உணவு பரிமாறப்பட்டது.  அங்கு அதிகமாக வளர்ந்துள்ள தேக்கு மரங்களில் இருந்து இலைகளைப் பறித்து, இலைகளில் பெரியவைற்றைத் தேர்ந்தெடுத்து, இரண்டிரண்டு இலைகளாகச் சேர்த்து வைத்து, அதில் கறிச்சோறு அவர்களுக்குப் பரிமாறப்பட்டது.  அருவியில் வரும் தூய்மையான நீரில் வைக்கப்பட்ட இரசத்தில் எண்ணெய் ஒட்டவே இல்லை.  இயற்கையான சூழ்நிலையில், தூய காற்றை உட்கொண்டு மகிழ்வுடன் உண்டவர்கள், வழக்கத்தைவிட அதிகம் சோறு சாப்பிட்டார்கள் என்று கூறத்தான் வேண்டுமா என்ன?

அய்யனார் கோவில் அருவி, குற்றால அருவிகள் அளவுக்கு உயரமில்லையே தவிர, அதே அளவு மூலிகை வளம் மிக்க சுவையான நீரினை வழங்குகிறது. குளோரின் கலவாத இயற்கையான குளிர்ச்சி நீர்.  அருவியில் தண்ணீர் அதிகம் வந்து, கீழே உள்ள இடம் ஆழமாக இருந்ததால், அருவியின் மேலிருந்து ஒரு மாணவன் ‘சொர்க்” அடித்தான்.  அதாவது தலைகீழாக, தண்ணீருனுள் விழுவது.

ஒரு மாணவன், ‘டேய்! இப்பத்தான் சாப்பிட்டு முடிச்ச. இன்னொரு முறை ‘சொர்க்” அடிச்சின்னா, சாப்பிட்ட சோறெல்லாம் வெளியே வந்துரும்டா!” ‘சொர்க்” என்பது காரணப்பெயர்.  உயரமான இடத்திலிருந்து தாவி, கையை முதலில் நீட்டி, தலைகீழாகத் தண்ணீரினுள் விழும்பொழுது, நீரில் எழும் சத்தம் ‘சொர்க்” என்பது போலக் கேட்கும்.

12 அடி இடைவெளியில் 2 அருவிகள் இருந்தன.  பெரிய அருவி ஆண்களுக்கு. சிறிய அருவி, பெண்களுக்கு.  ஆபத்தில்லாத அருவிகள்.  ஒரு சிறுமி, தலையைக் குனிந்து, அருவியில் தலையைக் கொடுத்த பொழுது, அதிகம் குனிந்து விட்டதால், அருவி நீரின் வேகத்தில், கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி, தண்ணீருனுள் விழுந்துவிட்டது.  அந்த அருவியின் வழியில், சிறிய பாறைகளை வைத்து, நீரைத் தடுத்து, கீழே சங்கிலியைத் தேடினால், தெளிவான நீரினுள், தரையில், தங்கம் மின்னுகிறது.  தங்கம் கனமான பொருள் என்பதால், நீரில் அடித்துச் செல்லப்படாது, நேரே தரைக்குச் சென்றுவிட்டது.

மாலை 4. 30 மணி.  50 பேர் கொண்ட குழு, ஊருக்குத் திரும்ப ஆயத்தமானது. சமையலில் மீதமிருந்த சாப்பாடு, இரசம், பளியர்களுக்கு வழங்கப்பட்டது.  காய்ந்த விறகு கொண்டு வந்த பளியரும் முந்திரிப் பருப்பை மாவாக்கிக் கொடுத்த பளியரும் ஆளுக்கொரு பழைய வேட்டியில் மீதமிருந்த சோற்றை, பெரிய பொட்டலம் போல் கட்டினார்கள்.  இரசத்தைப் பெற்றுக் கொள்ளப் பளியர்களிடம் பாத்திரம் இல்லை.  சமையல் குழு, சமையல் பாத்திரங்களை எடுத்துச்செல்ல வேண்டும்.  இரசம் யாருக்கும் பயனின்றி, கீழே ஊற்றப்பட்டது.  பளியர்கள், சமையல் பாத்திரங்களை, அருவி அருகில் ஓடும் நீரில் கழுவித் தந்தார்கள்.  சாதாரண நாளில் அரிசி உணவு கிடைக்காத பளியர்கள், தரப்பட்ட சோற்றைப் பக்குவமாக வைத்திருந்து 1 வாரத்துக்குப் பயன்படுத்துவார்கள் என ஒரு சமையல்காரர் கூறினார்.

காட்டுக்குள் இருக்கும்பொழுது, எந்தப்பக்கம், எந்தத் திசை என்று எங்களுக்குப் புரிபடவில்லை. பெரியவர் ஒருவர், மேலே அண்ணாந்து பார்த்து, சூரியன் இருக்கும் நிலையைக் கூறி, எங்களுக்குத் திசையைக் கூறினார்.  பிள்ளையார் சிலை எப்பொழுதும் கிழக்குப் பக்கம் பார்த்துத்தான் இருக்கும் என்று கூறிய பெரியவர், சற்றுத் தூரத்தில் இருந்த பிள்ளையார் சிலையைக் காட்டினார்.  அதன்படிப் பார்த்தால், பெரியவர், கூறிய திசை சரியாக இருந்தது.

ஒருவழியாக நாங்களும் அருவியில் போட்ட ஆட்டத்தை முடித்து, ஊருக்குப் புறப்பட்டோம்.  மாலை 6. 30 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.

திரும்பி வரும்பொழுது, மலையில் மேய்ந்துவிட்டு, வீடு திரும்பும் மாடுகளைப் பார்த்தோம்.  10அடி நீளத்துக்கு 2 அடி சுற்றளவுக்கு, பொறுக்கிய, 50 கிலோ எடையுள்ள விறகுகளை ஒன்றாகக் கட்டி, அதனைத் தலையில் சும்மாட்டின் மீது வைத்து, அதன் புவிஈர்ப்பு மையம், சரியாக உச்சந்தலையில், சும்மாட்டின் மீது படும்படி, விறகுக் கட்டை முன் பின் நகர்த்தி, சரியாக வைத்துவிட்டு, தலையில் அழுத்தும் பாரத்துடன் ஓட்டமும், நடையும் கலந்த பாவனையில், நேராக, ஒரே சீராக, விரைவாக, நடைபோட்டு வரும் வெள்ளைச் சேலைப் பெண்கள் நாள்தோறும் 6 மைல் நடந்து, திரும்பி வருகிறார்கள் என்றால், அவர்கள் தனியாக வேறு உடற்பயிற்சி எதுவும் செய்யத் தேவையில்லை.

ஒரு வாரம் கழித்து, இரவு 12 மணியளவில் வித்தியாசமான இசைக்கருவிகளின் சத்தம் பலமாகக் கேட்கவே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனக்குத் தூக்கம் கலைந்துவிட்டது.  வீட்டின் பலகணி (சன்னல்) வழியாக நானும் என் அம்மாவும் பார்த்தால், தெருவில் நீளமான எக்காள இசைக் கருவியில் வாய்வைத்து ஊதி, ஒருவர் ஒலிக்கிறார்.  பின்னால், ஒரு பெரிய மூங்கிலில் தலைகீழாகக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ள வேட்டையாடிய பெரிய அளவு மிளா. (மிளா என்பது மானை விடப் பெரிய அளவு வலிமையான மிருகம்).  உடன் ஏழெட்டுப்பேர் தொடர்ந்து வருகின்றனர். ‘மலையில வேட்டையாடியதைத் தூக்கிக்கொண்டு, ஊருக்குள்ள வர்றாங்க” அதுக்குத் தான் இந்த எக்காள ஒலி (வெற்றியின் ஒலி – வீரத்தின் ஒலி) என்று என் அம்மா அப்பொழுது, என்னிடம் கூறினார்கள்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பொழுது, வழியில் இருந்த மாரியம்மன் கோவிலில் அந்த இறந்துவிட்ட வேட்டையாடப்பட்ட மிளாவை, ஒரு ஒற்றை மாட்டுவண்டியில், நிற்கும் படியான நிலையில், கம்புகளை முட்டுக்கொடுத்துக்கட்டி, மாட்டு வண்டி ஊர்வலம் வரத்தொடங்கியது.  எக்காளம் உட்பட பல இசைக்கருவிகள் முழங்கின.  வேட்டையில் தலைமையேற்று, முன்னின்று போராடிய இளைஞர், மாட்டுவண்டியில் மிளாவுக்கு முன்பாக நின்று வந்தார்.  தெருவில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்தோர் ரூ. 1, ரூ. 2, ரூ. 5 அளவுகளில் பரிசுகள் வழங்கினர்.  (ரூ. 1க்கு 1 படி அரிசி கிடைத்த காலம்).  துணிக்கடைக்காரர், கைத்தறித்துண்டை வேட்டைக்காரத்தலைவனின் தலையில், முண்டாசாகக் கட்டி விட்டார்.  சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்து முடிந்த பின், வேட்டைக்காரத்தலைவன், தனது தேவைக்கான அளவு மிளாக் கறியை எடுத்த பின், மீதியை விற்றுவிடுவார்.

பள்ளிக்கு வந்த பின், ஆசிரியர் தங்கப்பாண்டியனிடம் இச்செய்தியைக் கூறினேன்.  மலை, மலைசார்ந்த இடம், காடு, காடு சார்ந்த இடம் என வாழ்ந்த பழந்தமிழர்கள் வேட்டை நாயை அழைத்துக்கொண்டு, சிறிய ஆயுதங்களை, வைத்துக் கொடிய விலங்குகளை வேட்டையாடினார்கள்.  அதன் தொடர்ச்சிதான் இன்றும் வீரத்தமிழர்கள், மேற்குத் தொடர்ச்சிமலைப்பகுதிக்குச் சென்று வேட்டையாடி வருவதும், வேட்டையாடிய வெற்றி வீரனைப் பாராட்டிப் பொதுமக்கள் பரிசுகள் வழங்குவதும்.

Rajapalayam Dogs
ராஜபாளையம் நாய்கள்

இவ்வளவு செய்திகளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் தமிழ்ச்செல்வன், வெளியூரில் கல்லூரியில் சேருகிறான்.  முன்பின் தெரியாத வழிப்போக்கன் கூட, இரவில் வந்தால், இளைப்பாறி, ஓய்வெடுத்துச் செல்ல வாய்ப்பாக வீட்டுக்கு வெளியே திண்ணை வைத்து, வீடு அமைக்கும் பண்பாட்டில் வந்தவன் தமிழன்.  ஈகை, இரக்கம், உதவி, வீரம், மனிதநேயம், வாக்குத் தவறாமை  போன்ற நற்பண்புகளில் வந்த தமிழ்க்குலம் இன்று ஏன் இப்படியாகி விட்டது என நொந்து வருந்தி, வாடினான் தமிழ்ச்செல்வன்.

1965ஆம் ஆண்டு கால கட்டத்தில், விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது.  1968 ஆம் ஆண்டுவரை, அய்யனார் கோவில் அருவியில் இருந்து வரும் நீர் இராசபாளையம் பெரிய மந்தை வரை வந்தது.  இப்பொழுது உள்ள தலைமுறைக்கு இந்த விபரமே தெரியாது.

அருவிக்கு மேல் தண்ணீரைத் தடுத்து, குழாய் மூலம் 6ஆவது மைலில் உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டிக்கு அனுப்ப ஆரம்பித்த பின், பெரிய மந்தைக்குத் தண்ணீர் வராமலே போய்விட்டது. நிறைய தண்ணீர் வந்தால் தான், அருவியில் தண்ணீர் விழும்.  விவசாயத்துக்கு நீர் போகும். இல்லையேல் அருவிமேலேயே, குடிநீருக்காகத் தண்ணீர் திருப்பி விடப்பட்டுவிடும்.  அருவிக்கு மேல் யாரும் செல்லக்கூடாது.  6ஆவது மைலில் திறந்துவிடப்படும்,  குடிநீர், சரிவாகக் குழாய்களில் கீழ் நோக்கிவரும் வேகத்தில், மின்சாரத் தேவையின்றியே, மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிவிடும்.

1995ஆம் ஆண்டு காலத்தில், அய்யனார் கோவில் அருவிப்பகுதி, காட்டு அணில்களின் சரணாலயமாக மாற்றப்பட்டு, ரூ. 2 பணம் கொடுத்து, அனுமதிச் சீட்டு பெற்று அருவிக்குச் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

காட்டு அணில்களின் சரணாலயம் உங்களை வரவேற்கிறது என்று இருந்த அறிவிப்புப் பலகையில் ‘உங்களை வரவேற்கிறது” என்ற வாசகம் இப்பொழுது எடுக்கப்பட்டுவிட்டது.  பொதுமக்கள் யாரும் இப்பொழுது அருவிக்குச் செல்லமுடியாது.  (பளியர்களும், எஸ்டேட்டில் பணிபுரிபவர்களும் மலைமேல் இன்றும் சென்று வரமுடியும்).

பாண்டிய நாட்டுத் தமிழர்களும் சேரநாட்டுத் தமிழர்களும் இயல்பாகப் பயன்படுத்திய, அய்யனார் கோவில் அருவியும் மலைப்பகுதியும் இன்று தடை விதிக்கப்பட்ட பகுதிகளாகிவிட்டன.  அய்யனார் கோவில் அருவியின் பயன்பாட்டில், மலையின் பயன்பாட்டில் தான் எத்தனை மாற்றங்கள்? மாற்றங்கள் அருவியில் மட்டும்தானா?

சொ. பாசுகரன்.
ஆனந்து அடுக்ககம்,
16, G.A. சாலை,
சென்னை – 21.
கைபேசி: 98403 16020

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!