அனைவரின் மனமும் மகிழுமாறு தமிழகத்தில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது பருவ மழை. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்கிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டு நமது அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. “அவர்கள் கை விரித்தால் என்ன? நான் உங்களைக் காக்கிறேன்.” என்று கரிசனை காட்டி இருக்கிறாள் இயற்கை அன்னை.

தமிழகத்தில் நிரம்பியுள்ள மற்றும் வேகமாக நிரம்பி வரும் அணைகளின் பட்டியல் இதோ,
- மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. இன்றைய நிலவரப்படி அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி நிறைந்துள்ளது.
- 105 அடி நீர்மட்டம் கொண்ட பவானி சாகர் அணையில் , இன்றைய நிலவரப்படி 101.98 அடி நீர் நிரம்பியுள்ளது.
- 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது, 57.80 ஆக உள்ளது.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருக்கும் நிலையில், தற்போது 142 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.
- வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடி. இந்த அணையில் நீர்மட்டம் இன்று 62.27 அடியாக உயர்ந்துள்ளது.
- பாபநாசம் அணையின் நீர்மட்டம் 143 அடி. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டமானது 137.80 ஆக அதிகரித்துள்ளது.
- 119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 91.70 அடியாக உள்ளது.
- ஆழியாறு அணையின் மொத்தக் கொள்ளளவு 120 அடியாக இருக்கும் நிலையில், இன்றைக்கு அணை நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மற்றும் கேரள மாநில அணைகளில் இருந்தும் உபரி நீர் திறந்துவிடப்பட இருக்கின்றது. இன்னும் 5 தினங்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நாம் தண்ணீருக்கு சிரமப்பட நேராது என்றே தோன்றுகிறது.
ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதனை ஒரு குட்டிக்கதை மூலம் விளங்க வைக்க முடியும்.
கொட்டும் சாரலில், பசுமை போர்த்திய பூமியை விழி விரியக் கண்டவாறே பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளைஞன். அப்போது, நகரத்தில் இருக்கும் அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அங்கு மழை ஆரம்பித்திருப்பதாகவும், ஓய்வின்றி சீராக மழை பொழிவதைப் பார்த்தல் கலக்கமாக இருப்பதாகவும் சொல்கிறான். அதற்கு இவன், “சரி இப்பொழுதே பிரட் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்.” என்று அறிவுரை கூறுகிறான்.

இப்பொழுது, அதே பேருந்தில் பயணிக்கும் நடுத்தர வயதுடைய ஒருவருக்கு யாரிடமோ இருந்து அழைப்பு வருகிறது. கிராமத்து மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? அலைபேசி உரையாடல்களில், நாம் சாப்டாச்சா ? என்று கேட்பது போல், அவர்கள் அங்கு மழையா ? என்று தவறாமல் கேட்பார்கள். மழையை நம்பி, மழையை எதிர்நோக்கி, மழையோடே பயணிக்கும் வாழ்வியல் அவர்களுடையது. அதே கேள்வியை அவரும் எதிர்முனையில் பேசுபவரிடம் கேட்கிறார். அங்கு மழையா?
அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் தெரியாது. ஆனால், பதிலுக்கு இவர் சொல்கிறார்,
” ஆமாப்பா இங்கன நல்ல மழை. காடு வயலெல்லாம் பச்சை பசேருன்னு பாக்கவே கண் கொள்ளல. மாடு கன்டெல்லாம் மகுந்து போச்சுக. நாம ச்சாமிக்கு தான் நன்றி சொல்லணும்.”
இந்த இரு உரையாடல்களின் மூலம் நாம் புரிந்து கொள்வது, எந்த ஊரில் ஆறு ஆறாகவும், ஏரி ஏரியாகவும், காடு, வயல், குளம், குட்டை என அனைத்தும் அதன் தன்மை மாறாமல் இருக்கிறதோ அந்த ஊரில் தான் மழையைக் கொண்டாடுவார்கள். மழை அந்த மனிதர்களைத் தான் வாழ வைக்கும். அப்படி இல்லாத இடங்களில், சாரல் மழைக்கும் வெளியே செல்ல பயந்து போய் மக்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கத் தொடங்குவார்கள்.
நமக்குக் கொடுக்க ஏதேனும் ஒன்று எப்போதும் இயற்கையிடம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் தான் பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழித்துப் பார்க்கிறோம்.
இயற்கையைக் கொண்டாடுவோம். அது நம்மை வாழ்விக்கும். நீடூழி வாழ்க.