புவி வெப்பமயமாதல் உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இந்நேரத்தில் பல நாடுகளும் இதனைத் தடுக்க பல்வேறு வகைகளில் முயன்று வருகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையை கட்டுப்படுத்துதல், அடுத்த பத்து வருடங்களுக்குள் டீசல், பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக முழுவதும் மின்னாற்றலில் இயங்கக் கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இயங்கக்கூடிய வாகனங்களை புழக்கத்திற்கு கொண்டு வருவது என பல வளர்ந்த நாடுகள் முடிவெடுத்துள்ளன.

ஆனால் மரங்களை வளர்ப்பது தான் இப்பிரச்சினையை தீர்க்க மிக முக்கிய பங்காற்றும் என்பதே வல்லுனர்களின் கருத்து. இதனால் தான் பிலிப்பைன்ஸ் நாடு வினோத சட்டம் ஒன்றினை இயற்றியுள்ளது. உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும் எனும் சட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது. பல கட்ட விவாதத்திற்குப் பிறகு அந்நாட்டு அவையில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான மனுவை தாக்கல் செய்து பேசிய மேக்டாலோ கட்சியின் உறுப்பினரான கேரி அலஜானோ,” பிலிப்பைன்ஸில் தொடக்கப்பள்ளி படிப்புகளை ஆண்டுக்கு 12 கோடி பேர் முடிக்கின்றனர். அதேபோல் உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளை சுமார் 50 லட்சம் பேர் முடிக்கிறார்கள். பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரமாக இருக்கிறது. தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படுமேயானால் ஆண்டுக்கு 17.5 கோடி மரங்கள் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் ஒரே தலைமுறையில் 52500 கோடி மரங்களை நம்மால் பெற முடியும். இயற்கை மற்றும் வியாபார நோக்கத்திற்காக இந்த மரங்களில் 90 சதவிகிதத்தை பயன்படுத்திக் கொண்டாலும் கூட 10 சதவீத மரங்கள் இயற்கையை பாதுகாக்கும். 10 சதவீதம் என்பது 5250 கோடி மரங்களாகும்” என்றார்.

மாணவர்கள் காட்டுப் பகுதியிலோ தங்களுக்கு சொந்தமான இடங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான பொது இடங்களிலோ மரத்தை நடலாம். இதனைக் கண்காணிக்க கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறைக்கான ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல் மாணவர்கள் மரக்கன்றுகளை வளர்ப்பது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிகளை சுற்றுச்சூழல் துறை மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்ட அரசு சார் அமைப்புகள் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபரின் ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டிருக்கும் இந்தச்சட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலிமிருந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.