கல்வராயன் மலை என்பது கள்வர்களை அடக்கி ஆளும் அரசர்கள் வாழும் மலை என்று முன்னோர்கள் கூறுகின்றனர். மேலும், இம்மலை பெரிய பெரிய கற்களைக் கொண்டு அமைத்த மலை தொடர் என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு.
இம்மலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. வடப்பகுதி மலைத் தொடரை சின்னக் கல்வராயன் மலை எனவும், தென் மலைத் தொடரைப் பெரிய கல்வராயன் மலை எனவும் அழைக்கின்றனர்.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிரப்பாளையம் வழியாகக் கல்வராயன் மலையைச் சென்று அடையலாம். இந்த மலைத் தொடர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தாலும், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையை ஒட்டி அமைத்துள்ளது.
இந்த மலையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடியில் அமைந்துள்ளது.
சின்ன சேலம் மற்றும் சங்கராபுரம் வட்டத்திலும், சங்கராபுரம் தொகுதியிலும் அமைத்துள்ளது. இந்த மலையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடியில் அமைந்துள்ளது. பொதுவாக இங்கு சம நிலையான தட்பவெட்பம் நிலவுகின்றது. இங்கு 6 மாதம் மழை காலமும், 3 மாதம் குளிர் காலமும், 3 மாதம் வெயில் காலமும் நிலவுகின்றது.

இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் வரை அடர்த்த காடு , நீர்வீழ்ச்சிகள் ஆகியவையும், மேலே செல்லச் செல்ல சிறு சிறு ஊர்களும், விவசாய நிலங்களும் அமைந்து இருக்கின்றன. நீர்வீழ்ச்சியின் நீர் மற்றும் மழை நீர் ஆகியன சேகரிக்கப்பட்டு, இம்மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் பாதுகாக்கப்படுகிறது. இந்த நீர் விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வாழ்க்கை முறை
இம்மலையில் வெள்ளிமலை, சேராப்பட்டு, கரியாலூர் ஆகிய மூன்றும் முக்கிய ஊர்கள். இங்கே சுற்றுலாத் தளம் என்று எடுத்துக்கொண்டால் சிறுவர் பூங்கா, மேகம் அருவி, பெரியார் நீர்வீழ்ச்சி, மான்கொம்பு நீர்வீழ்ச்சி மற்றும் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைத்துள்ளன. சிறப்பு வாய்ந்த ஆண்டியப்பன் கோவிலும், முருகன் கோவிலும் இங்கே அமைத்து இருக்கின்றன. மேலும், கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் அரசு சார்பில் நடத்தப்படுகின்றது.

இங்கே முக்கியத் தொழில் என்பது விவசாயம் ஆகும். இங்கே பொதுவாக கிணற்று நீர் பாசனமும், மழை நீர் பாசனமும் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை நெல், சாமை, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு மற்றும் காய்கறிகள் ஆகியன இங்கே அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகின்றன.
சில மக்கள் வெளியூர் சென்று மரம் வெட்டுதல், கூலித்தொழில் ஆகியவற்றை செய்து வருகின்றனர். இங்கு அரசு சார்ந்த சேவைகளான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கூட்டுறவு அங்கன்வாடி மையம், நடமாடும் மருத்துவ சேவை போன்றவைகள் வழங்கப்படுகின்றன.

இங்கே 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் (அரசு பள்ளிகள், சில கிறிஸ்துவ மற்றும் தனியார் பள்ளிகள்) இயங்கி வருகின்றன. மருத்துவத்தைப் பொறுத்த வரை, இங்கே அரசு மருத்துவமனைகள் அமைந்து இருக்கின்றன. காவல் நிலையங்கள் மற்றும் வனத்துறை அலுவலகமும், இந்தியன் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவையும் இம்மலையில் சேவையாற்றி் வருகின்றன.
குடும்பத்துடன் 2 நாள் அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புவர்கள், இம்மலையைச் சுற்றிப் பார்த்தால், மனதிற்கு அமைதியையும், புதிய அனுபவத்தையும் தரும் என்று சொன்னால் அது மிகையாகாது.