உலக அளவில் மிகவும் சுற்றுச்சூழல் மோசமான நகரங்களின் பட்டியலில், இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. பட்டியலின் முதல் பத்து இடங்களில் ஏழு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தெற்காசியாவில் அதிக வளர்ச்சி விகிதத்தினைக் கொண்டுள்ள இந்தியா எதிர்காலத்தில் காற்று மாசுபாட்டினால் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆட்காட்டி விரலை உயர்த்தியுள்ளனர்.
காற்று மாசுபாட்டின் காரணமாக அடுத்த ஆண்டு சுமார் 70 மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
ஆசியா கண்டம்
காற்றில் இருக்கும் நுண் துகள்களைப் பொறுத்து இந்த பட்டியலைத் தயாரித்திருக்கின்றனர். அதன்படி, இந்தியாவின் குருகிராம் நகரம் முதலிடத்தில் இருக்கிறது. முதல் பத்து இடங்களில் இருக்கும் அனைத்து நகரங்களும் ஆசிய கண்டத்தில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஐந்து இடங்களில் இருக்கும் இந்திய நகரம் அல்லாதது பைசலாபாத் (பாகிஸ்தான்) மட்டுமே. மற்ற நான்கு இடங்களும் இந்தியாவிற்கே. இந்த மாசுபாட்டின் காரணமாக அடுத்த ஆண்டு சுமார் 70 மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இது உலக பொருளாதாரத்தின் மீதும் கடும்தாக்கத்தினை ஏற்படுத்தும் என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள். இதன் காரணமாக தோராயமாக 225 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
வளர்ச்சி
வளர்ச்சி என்பதனை மட்டுமே அடிப்படியாகக்கொண்டு திட்டங்களை வகுக்கும்போது இம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாகியிருக்கிறது. மொத்த பட்டியலில் இருக்கும் 30 நகரங்களில் 22 இந்தியாவிலும், சீனாவில் ஐந்தும், பாகிஸ்தானில் இரண்டும், வங்கதேசத்தில் ஒரு நகரமும் தேர்வாகியிருக்கின்றன.
இந்தியாவின் மொத்த மருத்துவ செலவுகளில் காற்று மாசுபாடு கணிசமான பங்கினை வகிக்கிறது என உலக வங்கி தெரிவித்துள்ளது. மக்கட்தொகை, தொழில்துறையில் நமக்கு முன்னே நிற்கும் சீனாவின் மாசுபட்டு அளவு நம்மைவிடக் குறைவு. இதனை நாம் அங்கிருந்து கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலைக்கு நாம் எப்போதோ வந்துவிட்டோம்.