ஜப்பானின் மேற்குப் பகுதியில் கரையைக் கடந்த ஜெபி புயல் கடும் சேதத்தினை விளைவித்துள்ளது. மணிக்கு சுமார் 172 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிப்பதால் மின்சார சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 25 ஆண்டுகளில் இதுதான் பெரிய புயல் என்று ஜப்பானின் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

700 விமானங்கள் ரத்து?
ஜெபி கரையைக் கடந்த போதிலும் அங்கே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒசாகா மாநிலத்தில் (Osaka) உள்ள கன்சாய் விமான நிலையத்தில் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்களின் ஓடு பாதை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதிபர் ஷின்ஸோ அபே (Shinzō Abe) தனது பயணங்களை ரத்து செய்துள்ளார். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சுமார் 3000 பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வானுயர அலைகள்
கடற்பரப்பில் வீசும் கடும் காற்றினால் அலைகள் மிக உயரத்தில் மேலெழும்புகின்றன. இதனால் ஜப்பான் கடல் பரப்பில் எந்தக் கப்பலையும் நுழைய வேண்டாம் என அந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் முக்கிய நகரங்களை இணைக்கும் பாதைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னேறுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கடும் மழையினால் நிலைச்சரிவுகளும் அங்கங்கே நடைபெற்று வருகிறது. இந்தப் புயல் பாதிப்பினால் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 200 க்கும் அதிகமானோர் காயமுற்றிருக்கின்றனர். சுமார் 1 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குப்பையாய்க் குவியும் கார்கள்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் காற்றினால் நகர்த்தப்பட்டு, ஒன்றோடு ஒன்று மோதி தீவிபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தெருவில் நிற்கும் கார்கள் தேங்கிக் குப்பை போல் காட்சியளிக்கின்றன. மழை இன்னும் நீடிப்பதால் கார்களை அப்புறப்படுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுனாமி, நிலநடுக்கம் என அடுத்தடுத்து பேரிழப்புக்களைச் சந்திக்கும் ஜப்பான் வெகு சீக்கிரமே அதிலிருந்து விடுபட்டு புது நடைபோடும். ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் போதே இதனை உலகம் அறிந்து கொண்டது. எனவே, இந்தப் புயலில் இருந்தும் ஜப்பான் வெளியேறும். புது சரித்திரம் படைக்கும்.