இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்திலிருந்து 4 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது, லோனார் ஏரி. இது சுமார் 500 அடி ஆழம் கொண்ட வட்ட வடிவத்தில் இருக்கிறது. லோனார் ஏரி சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மீது சிறுகோள் மோதியதால் உருவானது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்த ஏரியானது ராம்சர் பகுதியாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்சர் பகுதி என்றால் என்ன?
1971-ம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் என்ற பகுதியில் உலகின் முதல் சதுப்புநிலங்களுக்கான பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ‘ராம்சர் மாநாடு’ என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. 170 நாடுகள் இதில் உறுப்பு நாடுகளாக இணைந்துள்ளன. இந்த அமைப்பானது, உலகளாவிய அளவில் சதுப்புநிலப் பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளை அலசுவதற்கும், அது தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான ஒரு அமைப்பாக விளங்குகிறது. அதன்படி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள, உலக முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலப் பகுதிகளை ‘ராம்சர் பகுதி’ என இந்த அமைப்பு அறிவிக்கும்.

“ராம்சர் பகுதி” பட்டியலில் இடம்பெற்ற இடங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் சர்வதேச நிதி உதவி வழங்கப்படும். ஏனெனில் எண்ணற்ற தாவர, விலங்கினங்களின் வாழ்வுக்காக நீரையும் பிற வளங்களையும் வழங்கும் உயிரியற் தொட்டிலாக சதுப்பு நிலங்கள் விளங்குகின்றன என்பதே. உலகம் முழுவதிலும் இதுவரை 2441 பகுதிகள் “ராம்சர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்டதில் 40 சதுப்புநிலப் பகுதிகள் இந்தியாவில் உள்ளன. நம் இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள சூர் சரோவர் என்று அழைக்கப்படும் கீதம் ஏரி (39), மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரியும் (40) சமீபத்தில் இந்த பட்டியலில் இடம்பெற்றன.
லோனார் ஏரி
லோனார் பள்ளம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஏரி சுமார் 4.8 கிமீ சுற்றளவு கொண்டது. இந்த ஏரியில் உள்ள பாறைகளில் இருக்கின்ற ரசாயனங்களின் காரணமாக, ஏரியின் பெரும்பகுதி நீரானது உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இந்த ஏரிக்கு, புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளிலிருந்து தண்ணீர் வந்து சேர்கின்றது. விஞ்ஞானிகள் இந்த ஏரியின் நீரை ஆய்வு செய்தபோது, அதிக அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையின்போது உருவாகும் மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களைக் கண்டுபிடித்தனர். லோனார் ஏரியானது, சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது சிறுகோள் மோதியதால் உருவானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.
நீரின் நிறம் மாறியது ஏன்?
கடந்த ஜூன் மாதம் லோனார் ஏரி நீரானது, பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு (பிங்க்) நிறமாக மாறியது. லோனார் ஏரியின் நீர் இயல்பாக பச்சை நிறத்தில் இருக்கும் என்பதால் இந்நிற மாற்றம் விஞ்ஞானிகளை சற்று குழப்பமடையச் செய்தது. இறுதியில் ஏரியில் நீரின் அளவு குறைந்தது மற்றும் பாசிகளின் தன்மை காரணமாகவே இளஞ்சிவப்பு நிறமாக நீரின் நிறம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து புவியியல் வல்லுநர்கள் கூறுகையில், “லோனார் ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்கு முன்னும் மாறியுள்ளது. ஆனாலும் முழுமையாக பிங்க் நிறத்தில் மாறியுள்ளது இதுவே முதல்முறை. இந்த நீரில் பிஹெச் அளவானது 10.5 சதவீதம் இருக்கின்றது. மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள் மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம். மேலும் ஏரியின் நீர் மேற்பரப்பில் ஒரு மீட்டருக்குக் கீழே ஆக்ஸிஜன் இல்லை.” என்று தெரிவித்தனர். இந்த ஏரிதான் இப்போது ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த லோனார் ஏரியானது இதற்கு முன்னர், 1979-ம் ஆண்டில் ‘தனித்துவமான புவியியல் தளம்’ என அறிவிக்கப்பட்டு ‘தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னம்’ என்ற நிலையை பெற்றது குறிப்பிடத்தக்கது.