இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது என்பது, உண்மையில் நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. ஒரு காட்டில் மெதுவாக நடந்து செல்வது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் தெளிவாக சிந்திக்க உதவும். ஜப்பானியர்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவர்கள் என்று பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும். பணிகளுக்கிடையில் அவர்கள் பேணுகின்ற ஒழுக்கமும் தெரியும்.
வேலைப்பளுவுக்கு இடையில் அவர்களும் நம்மைப் போல் சோர்வடையவே செய்கிறார்கள். ஆனால், புத்துணர்ச்சியை பெற நாம் சூடான பானங்களை மற்றும் குளிர் பானங்களையே நம்பிக்கொண்டிருக்கையில், ஜப்பானியர்கள் பைசா செலவில்லாமல், தண்ணீர் கூட செலவு இல்லாமல் பசுங் காடுகளில் குளிக்கப் பழகிவருகின்றனர். அதாவது காட்டுக்குளியல், நமது ஐம்புலன்களின் வழியாக காட்டை ரசித்து அனுபவிப்பது. சுற்றுச்சூழலின் அழகைப் பார்ப்பது முதல் மரங்களின் வாசனை வரை, வனப்பகுதிகள் ஒரு முழு உணர்ச்சிகரமான புத்துணர்வை அளிக்கின்றன.
காட்டின் மிக சக்திவாய்ந்த நன்மைகளில் ஒன்று, அங்கு வரும் சத்தம் தான். Tree.fm -இல் உங்கள் வீட்டில் இருந்தபடியே இயற்கையின் நிதானமான ஒலிகளை நீங்கள் கேட்கலாம். ஆம், tree.fm உண்மையான காடுகளின் ஒலிகளை சேகரித்து ஆன்லைனில் பதிவேற்றி உள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள கருப்பு காடுகளிலிருந்து ஜப்பானில் உள்ள கோட்டாரி நோ மோரி (பறவைகளுக்கான காடு) வரை (Black Forest in Germany to Kotori no Mori), எந்த நேரத்திலும் இலவசமாகக் கேட்க எண்ணற்ற ஒலித்தொகுப்புகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள்தங்களால் முடிந்த காடுகளின் ஒலிகளைப் பதிவுசெய்து அவற்றை திறந்தவெளி ஒலி நூலகமான சவுண்ட்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட் இல் பதிவேற்றி உள்ளனர். Tree.fm இந்த சேகரிப்புகளை எளிதான வலைத்தளமாக மாற்றியது. அங்கு பயனர்கள் விரும்பும் பல காடுகளின் ஒலியை கேட்கலாம். இதனால், நீங்கள் உடனடியாக அமைதியான சூழலுக்கு கொண்டு செல்லப்படுவீர்கள். பறவைகளின் பாடல்கள், கிளைகளில் இலைகளில் காற்று வீசும் சத்தம் என இயற்கையின் பிரமிப்புகளுக்குள் மூழ்குவீர்கள்.
Tree.fm நிறுவனமானது ஈகோசியா (Ecosia) என்ற வலைத்தள தேடுபொறி நிறுவனத்துடனும் கூட்டுசேர்ந்து செயல்படுகிறது. ஈகோசியா நிறுவனம் அதன் லாபத்தில் குறைந்தது 80% ஐ அழிக்கப்பட்ட காடுகளை மறுஉருவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்கிறது. ஈகோசியா தளத்தில் இருக்கும் “plant some trees” பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் இதயத்திற்கு நெருக்கமான மரத்தை நடுவதற்கான காரணத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.
“நம்மை உயிருடன் வைத்திருக்கும் மரங்களை வளர்க்க நாம் ஏன் உதவக்கூடாது?. காட்டுத்தீ, அரசாங்கங்கள் மற்றும் சில நிறுவனங்கள் என நம் காடுகளை அழித்து வருகின்றன. நம் பேரக்குழந்தைகளுக்கு ஏறி இறங்கி விளையாட மரங்கள் இருக்க வேண்டும். எனவே சில நடவடிக்கைகள் எடுப்போம்.” இவ்வாறு Tree.fm நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த லிங்கை க்ளிக் செய்து காடுகளின் ஒலியை கேட்டு மகிழுங்கள் : Tree.fm