உலகிலேயே மிகவும் ஆழமான மற்றும் பழமையான ஏரி தான் பைக்கால் ஏரி. இது ரஷ்யாவின் தென்கிழக்கு சைபீரியா பகுதியில் உள்ளது. உலகின் மற்ற எந்த ஏரியை விடவும் இந்த ஏரி தான் பல உயிரினங்களுக்கு வசிப்பிடமாக உள்ளது. சுமார் 2500 உயிரினங்கள் வாழும் இந்த ஏரியில் 75% இனங்களை இந்த ஏரியை தவிர உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. அதே போல் இதில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு தாவர வகைகளையும் வேறு எங்கும் காண முடியாது. பைக்கால் சீல் எனப்படும் ஒரு வகை நன்னீரில் வாழும் சீல் காணப்படும் ஒரே இடமும் இந்த ஏரி தான். பூமியின் நிலப்பரப்பில் உள்ள நன்னீரில் 20% பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது. ஆம் அதிக அளவு நன்னீர் கொண்ட ஏரியும் இது தான். இங்கு வருடத்தின் குளிர் காலங்களில் ஏரியில் உள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஏரி மனிதனின் செயல்களால் சுற்றுச்சூழல் மற்றும் வெப்பநிலை மாற்றங்களை சந்திப்பதால் அங்கு வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படும் ஊழல் ஏற்பட்டுள்ளது.
பூமியின் நிலப்பரப்பில் உள்ள நன்னீரில் 20% பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது.

பாதிப்புகள்
மனிதர்கள் உருவாக்கிய வாகனங்கள், ஆலைகள் மற்றும் தொழிநுட்பங்களால் 1892 முதல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் பைக்கால் ஏரியை சுற்றிய பகுதிகளின் குளிர்கால வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. இதனால் இந்த பகுதி உலகிலேயே விரைவாக வெப்பமடையும் பகுதியாக மாறிவிட்டது. ஏரியின் மேற்பரப்பு நீரும் 1946 ஆம் ஆண்டு முதல் 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடைந்து வருகிறது. விளைவு, ஏரி பனிக்கட்டியே இல்லாமல் நீராகவே இருக்கும் நாட்கள் முன்பை விட மூன்று வாரங்கள் அதிகமாகியுள்ளது. ஏரி பனிக்கட்டிகளாக உறையும் போதும் அந்த பனிக்கட்டியின் அடர்த்தியும் சராசரியைவிட 30 அங்குலங்கள் குறைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதாலும், பனிக்கட்டியாக உறைந்து இருக்கும் கால அளவு குறைவதாலும் ஏரியில் வாழும் நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் மிகவும் பாதிப்படைகின்றன. முக்கியமாக Diatoms எனப்படும் பாசிகள். இவற்றை நம் கண்களால் பார்க்க கூட முடியாது. ஏனெனில் இவை மனிதனை முடியின் அகலத்தில் ஐந்தில் ஒரு பங்கு தான் இருக்கும். இந்த ஏரியில் வாழும் உயிரினங்களின் உணவு சங்கிலியை பொறுத்தவரை இந்த Diatoms அடியில் இருப்பதால் இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிசேர்க்கையும் செய்கின்றன. இவற்றின் ஓடு சிலிகாவால் ஆனது. இவற்றின் படிமங்கள் அப்படியே ஏரிக்கடியில் பாதுக்காப்பாக இருக்கும் என்பதால் ஏரியில் ஏற்படும் மாற்றங்களை மறுகட்டமைப்பு செய்ய இவை உதவுகின்றன.

ஊட்டச்சத்து
இந்த ஏரியில் செய்த தொடர் ஆய்வுகள் மூலம், பருவநிலை மாற்றத்தால் இந்த ஏரியில் மட்டுமே இருக்கும் அளவில் பெரிய, கடினமான மெதுவாக வளரும் Diatoms எண்ணிக்கை குறைவது தெரியவந்துள்ளது. இவை தான் அதிக ஊட்டச்சத்துள்ளவை. இவற்றால் தான் ஏரியில் உள்ள உயிரினங்களின் உணவு சாத்தியமாகிறது. ஆகவே அவற்றின் எண்ணிக்கை குறைவது பல்லுயிர் தன்மையை நிச்சயம் பாதிக்கும்.
பொதுவாக இந்த பாசிகள், ஏரி பனியாக உறைந்து இருக்கும் காலங்களில் மிகுதியாக வளரும். இவை வாழ சூரிய ஒளி அவசியம். பனிக்கட்டிகள் வழியே சூரிய ஒளி ஏரிக்குள் எளிதாக உட்புகும் என்பதால் அப்போது இவற்றிற்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். ஆனால் ஏரியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருவதால் அளவில் சிறிய மென்மையான வேகமாக வளரும் உலகத்தின் பல இடங்களில் வாழும் Diatoms வளர தான் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் இவை ஊட்டச்சத்து அற்றவை என்பதால் இதன் மூலம் ஏரியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அழியும் அபாயம் உள்ளது.
கார்பன் சுழற்சி
இது போன்று வெப்பநிலை அதிகரிப்பதால் ஏரியின் வெவ்வேறு ஆழங்களில் நீரின் அடர்த்தி வேறுபட்டு ஏரியின் வெப்பநிலையும் வேறுபடும். இந்த சீரற்ற வெப்பநிலையில் அளவில் பெரிய கடினமான Diatoms மூழ்கத் தொடங்கும். இதன் மூலம் ஆர்கானிக் கார்பன் ஏரியின் அடியில் வாழும் உயிரினங்கள் வரை சென்றடைய முடிகிறது. ஆனால் அளவில் சிறிய Diatoms இது போன்ற மாறுபாட்டை தாங்கி கொண்டு அப்படியே இருக்கும். அளவில் பெரிய Diatoms குறையும் போது அவற்றின் படிமங்களில் இருக்கும் சிலிகாவை வேறு சில சாதாரண Diatoms உபயோக்கிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சாதாரண Diatoms வேகமாக வளரும் என்பதால் ஊட்டச்சத்துள்ள மற்ற Diatoms முழுவதுமாக அழியவும் வாய்ப்புள்ளது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏரியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.