- தாவரவியல் பெயர் : ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா (Strobilanthes kunthiana)
- கடும் குளிர் இடத்தில் பூக்கும் பூ குறிஞ்சிப்பூ.
- குறிஞ்சிச் செடிகள் புதர் வகையைச் சேர்ந்தவை.
- பூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டிருக்கும்.
- உயரம் 30-60 செ.மீ. , இதற்கேற்ற தட்ப வெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரை வளரும்.
- மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளரும்.
கபிலரின் குறிஞ்சிப் பாட்டு பிறந்து கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இதில் குறிஞ்சிப் பூக்கள் உள்பட 99 பூக்களின் பட்டியல் விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. இதில் குறிஞ்சி மலரின் சிறப்பு அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது. உண்மையில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குறிஞ்சிப் பூக்கள் பூக்கின்றனவா என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்புகிறார்கள். குறிஞ்சியில் பல வகைகள் உண்டு. ஓராண்டுக்கு ஒரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆறாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகைகளும் இருக்கின்றன.

ஒரு காலத்தில் ஐந்து வண்ணங்களில் குறிஞ்சிப் பூக்கள் இருந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். நீலம், கருநீலம் மட்டும் தான் இப்போது நீலகிரியில் காணப்படுகிறது. குறிஞ்சியின் நீல நிறம்தான் நீலகிரி மலையின் பெயராக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, மேல்பவானி, குந்தா ஆகிய இடங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூத்து நிற்கும் காட்சியைப் பார்க்க முடியும். கொடைக் கானல், மூணாறு மலைகளிலும் குறிஞ்சி பூக்கிறது.
கடந்த 2006-ம் வருடம் பூத்த குறிஞ்சிப் பூக்கள், 12 வருடங்கள் கழித்து இப்போது பூக்கத் தொடங்கியுள்ளன. மூணாரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா பகுதியில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்களைக் காண இரண்டு கண்கள் பத்தாது. பச்சை நிறத்தில் பசுமையாக காட்சியளித்து வந்த மூணாறு தற்போது குறிஞ்சி மலர்களால் ஊதா வண்ண நிறத்தில் காட்சியளிக்கிறது.

இதே போன்று, குறிஞ்சி பூக்கள் கொடைக்கானல், நீலகிரி பகுதிகளிலும் தற்போது பூத்துள்ளன. கொடைக்கானலில் கறுப்பு, வெள்ளை, நீலநிறம் என மூன்று வகையான பூக்கள் பூத்துள்ளன.
குறிஞ்சிப் பூக்களின் வருகையை வசந்தத்தின் வருகையாக, பழங்குடி மக்கள் கருதுகிறார்கள். மலர் பூக்கும் காலத் தொடக்கத்தைத் தங்கள் விழாக் காலத் தொடக்கமாக கணக்கிட்டுக் கொள்கிறார்கள். இயற்கையை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் இறை வழிபாட்டுக்கான காலமாக இந்தப் பூக்களின் வருகையை கொண்டாடுகிறார்கள். இவர்களின் மணவிழாக்களும் குடும்ப விழாக்களும் இந்தக் காலத்தில்தான் நடைபெறுகின்றன.

சங்கத் தமிழ் இலக்கியம் குறிஞ்சிப்பூவை பல பெயரிட்டு அழைக்கிறது. நீலக் குறிஞ்சி, கல் குறிஞ்சி, செறு குறிஞ்சி நெடுங்குறிஞ்சி இடக் குறிஞ்சி என்றும் வெள்ளைப்பூக்களைப் பூக்கும் கருத்தண்டை கொண்ட குறிஞ்சியை கருங்காற் குறிஞ்சி என்றும் போற்றுகின்றன.
இப்போது தொடங்கி டிசம்பர் மாதம் வரை இம்மலர்கள் பூக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்து 2030-ம் வருடம் தான் குறிஞ்சி மலர்கள் பூக்கும் என்பதால் அவற்றைக் காண மலைப் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள். வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் சென்று கடுங்குளிரில் குறிஞ்சியை ரசித்து விட்டு வாருங்களேன்!