வரலாறு காணாத மழை கேரளாவை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. எங்கு நோக்கிலும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர்!!
கடந்த இரண்டு வார காலமாக வெளுத்து வாங்கிய கனமழையினால் அங்குள்ள எல்லா ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கேரளாவில் இருக்கும் 33 அணைகளையும் திறக்கும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது. மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 167 பேர் மரணமடைந்துள்ளனர்.
காட்டாற்று வெள்ளம் போல வீதிகளில் தண்ணீர் ஓடுகிறது. கரைகளை மீறி ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. இந்நிலையில், ஏராளமானோரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அனைவரும் அரசு அமைத்திருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் நிவார முகாமை அடைவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
கடவுளின் தேசம்
கேரளாவை அம்மக்கள் கடவுளின் சொந்த தேசம் என்பார்கள். கேரளா என்ற வார்த்தைக்கே ஒரு கவர்ச்சி இருப்பதாகத் தோன்றும். எங்கெங்கு காணினும் பசுமை அங்கே. கேரளாவின் தனித்துவம் அங்கு மட்டுமே நாம் உணரமுடியும் ஈரப்பதம் தான். காற்றில், சாலையில், வீட்டுச் சுவர்களில், அங்கு வாழும் மனிதர்களில், ஏன் கேரள வெயிலில் கூட ஈரப்பிசுபிசுப்பு கலந்திருக்கும். அதே ஈரமும், நீரும் தான் இன்று அந்த தேசத்திற்கு பெரும் சவாலாக இருக்கின்றன.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும், 5 மடங்கு பெரிய வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது கேரளா. ஆனால், நமக்காக உருகிய தேசம் அதே அளவிலான முக்கியத்துவத்தைக் கேரளாவிற்குத் தருகிறதா?
கேரளா – நம் சொந்த தேசம்
சென்னை வெள்ளப்பெருக்கின் போது இந்தியாவின் அனைத்து மூலைகளில் இருந்தும் வந்து குவிந்த நிவாரண உதவிகளில், பகுதி கூட கேரள மக்களைச் சென்றடையவில்லை. இதற்கு கேரளாவின் பாதிப்புகள் ஊடக முக்கியத்துவம் பெறாததே முதன்மையான காரணமாக இருக்கிறது.
“எங்கெல்லாம் பாதிக்கப்படும் மக்கள் இருக்கிறார்களோ, அதெல்லாம் என் சொந்த தேசம்.” என்றார் சே குவேரா.
“எங்கெல்லாம் பாதிக்கப்படும் மக்கள் இருக்கிறார்களோ, அதெல்லாம் என் சொந்த தேசம்.” என்றார் சே குவேரா. ஆனால், கேரளா உண்மையாகவே நம் சொந்த தேசம். நம் சகோதர,சகோதரிகள் தான் அங்கு தவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையிலிருந்து வெறும் 25 கிலோமீட்டர் தொலைவில் தான் கேரள எல்லை உள்ளது. வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான, அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்திற்கும், கோவைக்கும் இடையே மருதமலை மட்டும் தான் உள்ளது.
வாழ்வென்பது பொதுவுடைமை
நாம் பாதிக்கப்பட்ட போது, சென்னை, கடலூர், நாகை போன்ற மாவட்டங்கள் மட்டுமே பெரும் அழிவிற்கு உள்ளாகின. மீதமிருந்த நம் மக்களும், ஏனைய மாநில நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவினர். ஆனால், கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேரளாவிற்கு வெளியில் இருந்து வரும் உதவிகளை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்தியர்கள் அனைவரும் நம் சகோதர, சகோதரிகள் என்பதே குறுகிய மனோபாவம் தான். மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே நம் நேசத்திற்கு உரியவை.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது. – திருக்குறள்.
வாழ்வென்பது பொதுவுடைமை. சக மனிதன் ஆபத்தில் இருக்கும் போது அவனை வாழ்வித்தல் நம் பெருங்கடமை. நீடூழி வாழ்க !!