28.5 C
Chennai
Monday, March 4, 2024

பாலைவனத்தில் பூத்த காதல்! உலகப்புகழ் பெற்ற லைலா – மஜ்நூன் காதல் கதை இது!

Date:

அரேபியப் பாலைவனத்தின் நடுவே அந்த ஊர் இருந்தது. நபிகள் நாயகத்தின் பிறப்பு, பூலோக வரலாற்றைப் புரட்டிப்போட்டிருந்த நேரம். கல்வி என்னும் வாய்ப்பு வறியவர்களுக்கும் வழங்கிட வேண்டும் என பாலைவன பூமியில் பிறந்த ஜீவ ஊற்று உத்தரவிட்டிருந்தது. அப்படித்தான் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தாள் லைலா. அவளுக்காகவே தன் பெயரையும் பள்ளியோடு இணைத்துக்கொண்டான் கைஸ். ஊருக்கு வெளியே கூட்டஞ்சோறு ஆக்கிய காலத்திலிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்கள்.

விடலைப் பருவத்தின் விதைகள் உடலுக்குள் விதைக்கப்பட்டவுடன் ஆட்டத்தின் விதிமுறைகள் மாற்றம் கண்டன. காதலர்களுக்கே வரும் பெரும்வியாதியான கவிதைப் பழக்கம் கைசை வாட்டியது. லைலாவின் உதடுகளைப் பற்றியே ஓராயிரம் கவிபாட, நாணத்தின் பெருமழையில் நித்தமும் நனைந்தாள் லைலா. காதல் என்ன ஒருவழிப்பாதையா என எதிர்க்கணை தொடுக்கக் கற்றுக்கொண்டாள் அவள். கவிதையில் கற்பனை கரைமிஞ்சிய கடலானது. கற்பனையை நிஜமாக்கிவிடத் துடித்தார்கள் இருவரும். உலகத்து அற்புதங்களை எல்லாம் உன் காலடியில் வைக்கவா? என்ற கைசிடம் ஒற்றை முத்தம் போதும் மூன்று ஜென்மத்திற்கும் சேர்த்து என்று ஒரே போடாகப் போட்டாள் லைலா.

பாலைவன மண் உன் பாதத்துளிகள் படவே விரிந்திருக்கிறது என்பான் கைஸ். ஆலமரமனாலும் வேர் ஓரிடத்திற்குத்தான் சொந்தம் என்றே பதில் சொன்னாள். இப்படியான காதல் வகுப்புகள் ஒவ்வொரு வருடமும் நீடித்தன. பிரிவெனும் அரக்கனைத் துரத்த தோல்வியெனும் தேவதையை ஏற்றுக்கொண்டார்கள் இருவரும். பள்ளியின் கடைசி வகுப்பில் மூன்றாம் வருடமும் உட்கார்ந்துகொள்ள இடம் தேடினார்கள்.

அவர்களுக்கு ஆட்டு மூளையை ஆண்டவன் வைத்துவிட்டானோ என்ற கவலை இருவீட்டாரையும் கலங்கடித்தது. குலத்தொழில் குடிபுகச் சொன்னார் கைஸின் அப்பா. நேற்றுவரை வீசிவந்த வசந்தக்காற்று புயலின் வருகையால் வேறுநாட்டிற்குச் சென்றுவிட்டது. தினந்தோறும் அவள் கன்னத்தைத் தாங்கிய கரங்களுக்கு கண்ணீரைத் துடைக்கவே நேரம் சரியாக இருந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக அரேபிய மண் அவனுக்குச் சுட்டது. வீடு முழுவதும் லைலாவின் உருவத்தை வரையத் தொடங்கினான். எத்தனை முறை வட்டக்கல்லில் வடித்தாலும் காதல் அழகை கொட்டித்தீர்க்க முடியவில்லை அவனால்.

லைலாவும் தன் பங்கிற்கு இவனுடைய பெயரை அறைமுழுவதும் எழுதி வைத்தாள். படுக்கை விரிப்பில் அவன் பெயர் எழுதி அதன்மேல் படுத்துக்கொண்டாள். காலம் மற்றொரு முறை கருணை காட்டவேண்டும் என அல்லாவைப் பிரார்த்தித்தாள். உள்ளூர் வணிகன் ஒருவன் இவளது முக்காடிட்ட முகத்தைப் பார்க்க தினமும் வீட்டிற்கு வரத்துவங்கினான்.

கைஸ், லைலாவின் வீட்டை தினமும் சுற்றிவந்தான். அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் ரகசியமாகக் கத்தினான். மூன்று ஆள் உயர கோட்டைச் சுவர் இவன் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மறுத்தது. அவளுக்கு வலிக்கும் என அதுவரை மழித்துவந்த தாடியை பூமியை நோக்கிப் படரவிட்டான். அழுக்கின் படியில் ஆடைகள் கனத்தன. சில நாட்களிலேயே அவனை அனைவரும் மஜ்நூன் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அரேபிய மொழியில் மஜ்நூன் என்றால் பைத்தியம் என்று பொருள். இதெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என நினைத்தான் அவன். காதல் தேவதையை வரைய கரித்துண்டுகளைப் பொருக்கி எடுத்துக்கொண்டிருந்தான். ஓவியம் வரைய ஊர் சரியில்லை என காட்டிற்குள் காதல் வளர்க்கப் புறப்பட்டான் கைஸ். மரங்களிலெல்லாம் லைலா, பாறைகளில் எல்லாம் லைலா கடைசியாக தண்ணீரில் எப்படி எழுதுவது என தர்க்கத்தில் இருந்தவனை வீட்டிற்கு வரச்சொல்லி மன்றாடினார் கைஸின் அப்பா. சிக்கலின் முதல் முடிச்சை உணர்ந்த கைஸின் தந்தை திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொண்டார். அமிரி குலத்தைச் சேர்ந்தவளான லைலாவின் வீட்டிற்குச் சென்றவரிடம் “உன்னளவிற்கு நான் நல்லவனில்லை உரை வாள் ஒன்று உனக்காகக் காத்திருக்கும்” என சீறினார் லைலாவின் தகப்பனார்.

வணிகனின் வசதியைப் பார்த்து பிரம்மித்த லைலாவின் தந்தை திருமணத்தை அடுத்த நாளே நடத்தி முடித்தார். முதலிரவில் ரோமங்கள் இல்லாத முன்கையைப் பார்த்தே அவன் மூர்ச்சையானான். ஒட்டகப்பாலில் குளிப்பாட்டவா, பேரீச்சைகளால் பிரம்மிடு கட்டவா? என்றெல்லாம் வலை வீசிப்பார்த்தான். சமூகம் அளித்த சலுகைகளின் மேல் ஏன் சாட்டை சுழற்றுகிறாய் என பின்னிரவு ஒன்றில் விசும்பினான் வியாபாரி. மவுனமே எனது தாய்மொழி என்றாள் லைலா.

கைஸின் காதைக் கடித்தது இச்செய்தி. வாழ்நாள் முழுவதும் உன் வாசலில் வசந்தம் வீற்றிருக்கட்டும் எனக் கவிதை எழுதி அனுப்பினான். கட்டுகளை உடைக்கக் காத்திருந்த காட்டாறின் கதவு திறந்தது இந்தக் கடிதம். பிறைநிலா மட்டும் விழித்திருக்கும் இரவில் வீட்டை விட்டு வெளியேறி கைஸின் காலடிக்கே ஓடினாள் லைலா.

பாறை ஒன்றின் நிழலில் படுத்துக்கிடந்தவனைப் பார்த்த பின்னரே மூச்சுவிட்டாள் இவள். கருணையில்லாத காட்டு வழி அளித்திருந்த காயங்களுக்கு மருந்திட்டான் கைஸ். பேச எத்தனையோ இருந்தும் எந்த மொழியில் என்று தெரியாமல் விழித்தார்கள். கண்கள் பேசட்டும் என இருவரும் முடிவெடுத்தார்கள். கற்பனையில் இருவரும் கட்டிக்கொண்டார்கள். காலைக் கதிரவன் வருவதற்கு முன்பே வீடு திரும்பினாள் லைலா. நாளையும் வருவாயா? என்றவனிடம் நிச்சயம் என்றாள்.

இதற்குள் ஊர் முழுவதும் லைலாவின் இரவுப்பயணம் பரவியிருந்தது. வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டாள் அவள். அந்த நாள் இரவு எப்போவும் போலவே வந்தது. வருவதாக அவனிடம் எதிர்பார்ப்பை விதைத்துவிட்ட குற்ற உணர்ச்சி இவளை வாட்டியது. இனி எந்த இரவும் நேற்றயதைப்போல் இருக்கப் போவதில்லை என்ற உண்மை அதிகமாகக் கசந்தது. அடுத்தநாள் காலை படுக்கையில் மலர் மார்புகள் விறைத்துக் கிடந்தவளை எழுப்பச் சென்ற கணவன் ஓவென்று கதறினான். லைலாவின் முடிவுகேட்ட கைஸ், சொர்க்கத்திற்குப் போகும்போது ஏன் சொல்லாமல் போனாள்? என்று கேட்டுக்கொண்டான். அடுத்தவினாடியே பாறையின் விளிம்பிலிருந்து விழுந்தான். அரேபிய பாலைவனம் இன்றும் இவர்களது கவிதையை பாலைநிலத்தில் கவிதையாகத் தாங்கி நிற்கிறது.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!