இறப்பே இல்லாத ஜெல்லி மீன்கள் – இயற்கையின் பெரும் புதிர்

Date:

உயிர் என்று ஒன்று இருந்தாலே, இறப்பு என்பதும் நிச்சயம் இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ஜெல்லி மீன்களின் குறிப்பிட்ட சில இனங்களுக்கு மட்டும் இறப்பு என்பதே கிடையாது. உண்மை தான்! இவை உயிரியல் அடிப்படையில் அழிவில்லாதவை. ஒருவேளை ஏதாவது நோய் அல்லது புற காரணங்களால் இதற்கு ஆபத்து நேர்ந்து இதன் உடல் பாதிக்கப்பட்டால் கூட இந்த ஜெல்லி மீன்கள் மீண்டும் வளர்ந்து உருவாகிவிடும்!

ஜெல்லி மீன்களின் உடலில் வெறும் 5% தான் திடப்பொருள். மீதம் 95% நீரால் ஆனது

உடலமைப்பு

ஜெல்லி மீன்களின் மேல் பகுதி குடை (Bell) போன்ற வடிவத்தில் இருக்கும். இதன் ஓரங்களில் உணர் கொம்புகள் (Tentacles) உள்ளன. கைப்பிடி போன்று கீழ் நோக்கிச் செல்லும் வாய்த்தண்டு ஒன்றும் உள்ளது. இதன் ஒரு துளையின் முனையில் வாயும், பின்முனையில் கழிவு நீக்க உறுப்பும் இடம் பெற்றுள்ளன.வாயின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரு கை வீதம் நான்கு முதல் எட்டு கைகள் இதற்கு உள்ளன. இவற்றின் நரம்பு மண்டலத்தில் மணம், ஒளி, நீரின் அழுத்தம், புறத்தூண்டல்கள் என அனைத்தையும் உணரும் உணர்வேற்பிகள் (Nerve Receptors) இருக்கின்றன. இவற்றின் முழு உடலும் ஒளி ஊடுருவும் விதத்தில் இருக்கும்.

இவற்றின் உடலில் வெறும் 5% தான் திடப்பொருள். மீதம் 95% நீரால் ஆனது. ஜெல்லி மீன்கள் அதன் குடை போன்ற பகுதியை சுருக்கி, நீரை உந்தி தள்ளி அதன் மூலம் நீரில் நீந்துகின்றன.

உணவை பொறுத்தவரை கடலில் இவை சிறு மீன் போன்ற எதையாவது பார்த்தால், இதன் உணர் கொம்புகளில் இருக்கும் நூல்களை வெளியே வீசி இரையை பிடித்து விடும். ஜெல்லி மீன்களின் தூரிகை போன்ற அமைப்பு மேலே ஏதேனும் உயிரினம் பட்டு விட்டால் அவற்றின் அடியில் இருக்கும் நெமடோஸைஸ்ட்ஸ் (Nematocysts) எனப்படும் கொடுக்குகள் மூலம் கொத்தி ஒரு வகையான நச்சு பொருளை பாய்ச்சிவிடும். ஜெல்லி மீன்களின் வகையை பொறுத்து இந்த நச்சு மனிதனுக்கு அரிப்பு முதல் மரணம் வரை கூட ஏற்படுத்தும்.

வாழ்க்கை சுழற்சி

ஜெல்லி மீன்கள் வடிவத்தைப் போலவே அவற்றின் வாழ்க்கை சுழற்சியும் வித்தியாசமானது தான். ஜெல்லி மீன்களின் வாழ்க்கை சுழற்சியின் முதல் நிலை லார்வா எனப்படும். பெண் ஜெல்லி மீனின் உடலில் இருந்து வெளியேறும் லார்வா கடலில் ஏதேனும் பாறை போன்றவற்றை கண்டறிந்து அதில் நன்கு பற்றிக்கொள்ளும். இந்த நிலைக்கு பாலிப் (Polyp) என்று பெயர். உறுதியாக பற்றிய பிறகு ஒரு கடற்பாசி போல பெருகி வளர ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்ததும் அதிலிருந்து ஒவ்வொன்றாக பிரிந்து நீந்த ஆரம்பிக்கும். அதன் பிறகு தொடர்ந்து வளர்ந்து மெடுசா எனப்படும் வளர்ந்த நிலையை அடைந்து விடும்.

மீண்டும் வளரும் இந்த பண்பு ஜெல்லி மீன்களின் ஐந்து இனங்களில் கண்டறிப்பட்டுள்ளது!

இறப்பில்லா இனம்

ஜெல்லி மீன்களில் பல வகையான சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் Turritopsis dohrnii என்னும் இன ஜெல்லி மீன்கள் அழிவில்லாதது. இந்த இனத்தின் மெடுசா நிலையில் இருக்கும் ஜெல்லி மீன் ஏதேனும் காரணங்களால் இறந்து விட்டால் அது அப்படியே மூழ்கி கடலின் ஆழத்திற்கு சென்று அதன் குடை பகுதியும் உணர் கொம்புகளும் அழுக ஆரம்பிக்கும். ஆச்சர்யபடும் விதமாக அதன் செல்கள் சேர்ந்து (புதிய மெடுசா நிலைக்கு மாறாமல்) பாலிப் நிலைக்கு மாறிவிடும். பின்பு மறுபடியும் ஏதேனும் ஒரு இடத்தில் நன்கு பற்றிக்கொண்டு வளர்ந்து புது ஜெல்லி மீனாக உருவாகும். இது போல் இந்த வகை ஜெல்லி மீன்களால் மீண்டும் மீண்டும் செய்ய முடியும். இந்த முறைக்கு Cellular Transdifferentiation என்று பெயர். அதாவது பாலியல் முதிர்வு நிலைக்கு அடைந்த பிறகும் இதன் மரபணு மூலம் அவற்றால் முந்தைய உயிர் நிலைக்கு மாற முடியும்.

Life cycle of jellyfish
Credit: Quark Magazine

2011 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த ஒரு கடல்சார் உயிரியல் மாணவர் ஜெல்லி மீன்களின் இன்னொரு இனமான Aurelia aurita ஜெல்லி மீனை ஒரு தொட்டியில் வளர்த்தார். சில நாட்களுக்கு பிறகு அது இறந்தவுடன் அதை இன்னொரு தொட்டியில் போட்டுவிட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த ஜெல்லி மீனின் மேல் பகுதியில் ஒரு சிறிய பாலிப் வளர்ந்திருப்பது தெரியவந்தது. இது போன்று மீண்டும் வளரும் தன்மை ஜெல்லி மீன்களின் ஐந்து இனங்களில் கண்டறிப்பட்டுள்ளது.

இது போன்ற இறப்பில்லா பண்பு ஜெல்லி மீன்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வரம் தான். ஏனெனில் நோயினாலோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்தாலோ இவற்றின் நிலை மோசமானால் கூட அவை மீண்டும் உயிர் பெற்றுவிட முடியும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!