Home இயற்கை 2050-ல் கடலுக்குள் மூழ்கும் ஜகார்த்தா - அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள்!!

2050-ல் கடலுக்குள் மூழ்கும் ஜகார்த்தா – அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள்!!

உலக வெப்பமயமாதலின் காரணமாகத் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இதனால், கடல் மட்டம் உயரும் என ஆறாவது பாடப் புத்தகத்தில் படித்ததோடு சரி. இன்றும் அதைப்பற்றி செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இருப்பினும் நமக்கு ஏதும் நேராது என்ற அசட்டு நம்பிக்கையின் விளைவாகத் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறோம். ஆனால், இயற்கை திருப்பியடிக்கும் நேரம் வந்துவிட்டது. தனது பழிவாங்கும் படலத்தை இந்தோனேசியத்(Indonesia) தலைநகரான ஜகார்தாவில்(Jakarta) இருந்து ஆரம்பித்திருக்கிறது இயற்கை. உயரும் கடல் மட்டம் காரணமாக 2050-ல் மொத்த ஜகார்த்தா நகரமும் கடலுக்குள் மூழ்கும் என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Credit: NTU

ஜகார்த்தா – கடலின் பிடியில்!

இந்தோனேசியாவின் வடக்குத் திசையில் அமைந்துள்ளது ஜகார்த்தா நகரம். இந்தக் கடற்கரையோர நகரத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் உயரும் கடல் மட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 2.5 மீட்டர் வரை கடல்நீர் நகரத்திற்குள் புகுந்திருக்கிறது. இந்நிலை தொடருமேயானால் இன்னும் 30 வருடங்களில் ஜகார்த்தா முழுவதும் கடல் நீரால் மூழ்கடிக்கப்படும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகில் கடல் நீர் வேகமாக உட்புகும் நகரங்களில் ஜகார்த்தா முதலிடத்தில் இருக்கிறது.

கடல் நீர் உட்புகாமல் இருக்க 32 கிலோமீட்டர் நீளமுள்ள தடுப்புச்சுவர் ஒன்றை நெதர்லாந்து மற்றும் தென்கொரிய அரசுகளின் உதவியோடு கட்டியிருக்கிறது இந்தோனேசியா. இருப்பினும் உலகில் கடல் நீர் வேகமாக உட்புகும் நகரங்களில் ஜகார்த்தா முதலிடத்தில் இருக்கிறது. 4000 கோடி டாலர் செலவில் கட்டப்பட்ட இத்தடுப்புச்சுவர் குறுகிய காலத்திற்கு மட்டுமே கைகொடுக்கும் என அம்மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

அறிந்து தெளிக!!
ஆண்டிற்கு வெப்பமயமாதலினால் உட்புகும் கடல்நீரின் சராசரி அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான நீர் ஜகார்த்தாவில் உட்புகுவதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டமும் காரணம்!

Credit: Bloomberg

ஜகர்த்தாவில் கடல்நீர் உட்புகுதலுக்கு மற்றுமொரு முக்கியக் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது, நிலத்தடி நீரின் மட்டம் அதிவேகமாகக் குறைவது ஆகும். 13 ஆறுகள் ஓடும் ஜகார்த்தாவில் குடிநீருக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. இதைத்தவிர்த்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் நிலத்தடி நீரையே நம்பி இருப்பதாக அந்நகர வாசிகள் தெரிவிக்கின்றனர். அரசின் சார்பில் வழங்கப்படும் நீரானது தேவையை விட 30-40 சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது. இதனால் எல்லா குடியிருப்பு, வர்த்தகக் கட்டிடங்களின் உரிமையாளர்களும் தங்களுக்குத் தேவையான நீரினை ராட்சத மோட்டார்கள் மூலம் பூமியிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர்.

அறிந்து தெளிக!!
கடந்த மே மாதம் ஜகார்த்தா காவல்துறையால் 80 அடுக்குமாடிக் கட்டிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 33 கட்டிடங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

நிலத்தடி நீரை அதிகமாக வெளியே எடுப்பதினால் வரும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று, அங்குள்ள நிலப்பரப்பு கீழே இறங்குவது ஆகும். இளகிய மண் பரப்பு அதிகமாக இருப்பதினால் இவை உருவாகின்றன. இப்படிக் கீழிறங்கும் மண்ணின் மூலமாக கடல்நீர் கசிந்து வெளிவரத் துவங்கும். கொஞ்ச நாட்களிலேயே நீர் கசிதல் மிக அதிக அளவில் நடந்து அந்த இடத்தையே மூழ்கடிக்கும். ஜகார்த்தாவில் நடப்பது இதுதான்.

முவாரா பாரு (Muara Baru) மாவட்டத்தில் பல கட்டிடங்கள் இப்படிக் கடல் கசிவால் கைவிடப்பட்டு நிற்கின்றன. இந்நிலை தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்ட மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.

Credit: BBC

தீர்வு தான் என்ன?

மூழ்கும் கப்பலில் இருக்கும் மக்களைப் போன்று அவசரத்தில் அந்நாட்டு அரசு உள்ளது. ஜப்பான், டச்சு நாடுகளின் ஆலோசனையின் படி பல முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் கருத்துப்படி,  நிலத்தடி நீரினை உடனடியாக உயரச்செய்தல். அல்லது தற்போது இருக்கும் அளவை விடக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி வெள்ளம் வரும் இந்தோனேசியாவில் தண்ணீரைத் தேக்கி வைக்க வசதிகள் இல்லாதததும் மிக முக்கியக் காரணம். மழை நீரைச் சிக்கனத்தோடு சேமித்து பயன்படுத்த அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மேலும், ஆற்று நீர் கடலில் கலந்து வீணாகாமல் இருக்க சிறிய தடுப்பணைகளை கட்ட பரிசீலித்து வருகிறது.

Credit: Bloomberg

ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டும் மற்றுமொரு காரணம், நம்அஜாக்கிரதை. ஆம், ஒரு வகையில் இந்தோசினேசியாவின் இந்த நிலைக்கு நாமும் ஒரு காரணம். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு உலகக் குடிமகனுக்கும் வரவேண்டும். இல்லையேல் இன்றைக்கு ஜகார்த்தாவில் நிலவும் பிரச்சனை நாளைக்கு நமக்கும் வரும் என்பதே உண்மை. ஆதலால், இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்விற்குத் தயாராவோம். பிறக்கட்டும் ஒரு பொற்காலம்.

 

- Advertisment -

Must Read

- Advertisment -