இயற்கைக்கும் அதன் மூலம் மனிதர்களுக்கும் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு மோசமான மைல்கல்லை இப்போது நாம் எட்டியிருக்கிறோம்!!!
ஆம்! பல மில்லியன் ஆண்டுகளாக பூமி இல்லாத ஒரு நிலையை இப்போது நாம் உருவாக்கியுள்ளோம்!!
கடந்த வார இறுதியில் ஹவாயில் வைக்கப்பட்ட சென்சார்கள் மூலம் கணக்கிட்டதில் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 415.26 ppm (parts per million) என தெரியவந்துள்ளது. இப்படி ஒரு மோசமான அளவை எட்டியது மனித குல வரலாற்றில் இதுவே முதல் முறை!! எப்படி உலகம் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு எச்சரிக்கை தான் இது!!
Credit: Science Alert
பசுமை இல்ல வாயுக்கள் தேவை தான். ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட அளவை அது தாண்டும் போது விளைவுகள் பயங்கரமானதாகி விடும்!!
வளிமண்டலம்
பூமியின் மீது படும் சூரிய வெப்பம் முழுவதும் அப்படியே பூமிக்கு வந்துவிடுவது இல்லை. ஒருவேளை அப்படி மொத்த சூரிய வெப்பமும் பூமியில் விழுந்தால் எல்லோரும் சாம்பல் ஆகி விடுவோம். இப்படி எல்லாம் ஆகாமல் சூரிய ஒளியைத் தடுத்து நம்மை பாதுகாப்பது நமது வளிமண்டலம் தான். ஏனெனில் வளிமண்டலத்தில் உள்ள உள்ள சில வாயுக்கள் உறிஞ்சிய வெப்பம் போக மீதி தான் பூமிக்கு வருகிறது. அதே சமயம் பூமியோ, தன் மீது விழும் சூரிய வெப்பத்தை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயற்சிக்கும். ஆனால், அப்போதும் வளிமண்டலத்தில் உள்ள அந்த வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன. இவை தான் பசுமை இல்ல வாயுக்கள் (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன் ).
இவை அந்த வெப்பத்தை தடை செய்து பூமிக்கு மேலே போர்வை போல படிய செய்கிறது. இந்த வெப்ப போர்வை இருப்பதால் தான் நம் பூமி உறையாமல் இருக்கிறது. அதனால் பசுமை இல்ல வாயுக்கள் தேவை தான். ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட அளவை அது தாண்டும் போது விளைவுகள் பயங்கரமானதாகி விடும்.
Credit: Climate Atlas
தொழிற்புரட்சியின் விளைவுகள்
பொதுவாக மனிதன் மற்றும் விலங்கினங்கள் சுவாசித்தலின் போது கார்பன் டை ஆக்சைடை தொடர்ந்து வெளி வந்தாலும், அவற்றை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் உணவு தயாரிப்பதற்காக எடுத்துக் கொள்கின்றன. அதனால் கார்பனின் அளவு வளிமண்டலத்தில் ஓரளவு சமன்பாட்டுடன் தேவைப்படும் அளவிலேயே இருந்து வந்தது.
ஆனால் தொழிற்புரட்சிக்கு பின் மொத்த நிலைமையும் மாறிவிட்டது. 1910 ஆம் ஆண்டு 300 ppm ஆக இருந்த கார்பன் டை ஆக்ஸைடின் அளவே மிக அதிக அளவாக கணிக்கப்பட்டது. ஆனாலும் அடுத்த ஒரே நூற்றாண்டில் 100 ppm உயர்ந்து 400 ppm என்று இருந்த அளவு 2017 ஆம் ஆண்டு 410 ppm ஐ எட்டியது. அப்போதே இது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்தன.
வெப்பமயமாதல்
நாளுக்கு நாள் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் புதைபடிவ எரிபொருள்களின் மூலம் கிடைக்கும் வசதிகளை கைவிட மறுக்கும் நம் மனித சமுதாயம் தான். ஆம்! தொழிற்சாலைகள் வெளி ஏற்றும் புகை, போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை போன்றவை தான் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்துக்குக் காரணம். ஏனெனில் பல இலட்சம் ஆண்டுகளாக தாவரங்கள் சேமித்து வைத்து புதையுண்ட கார்பன்கள் தான் நிலக்கரியாகவும், பெட்ரோலியப் பொருட்களாகவும், பயன்பட்டு வருகின்றன. அதிலும் கார்பன்டை ஆக்சைடு எனப்படும் கரிய மில வாயு தான் பூமியை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
புவி காற்று மண்டலத்தில் இப்படி கார்பன் டை ஆக்ஸைடு நஞ்சு கலப்பதால் இயற்கைச் சூழல் படிப்படியாக சீர்கேடு அடைந்து உலக வெப்பமயமாதல் ஏற்படுகிறது. இந்த விளைவால் தான் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும். கடல் நீர் வெப்பமாகி ஆவியாகும். கடல் வாழ் உயிரினங்கள் மறையும். தாவரங்கள் செழிக்காது. பனிக்கட்டிகள் உருகும். சொல்லப்போனால் இவை எல்லாம் ஏற்கனவே ஆங்காங்கே நிகழ ஆரம்பித்து விட்டன. இவை இன்னும் அதிகமானால் மனிதர்களாகிய நம் நிலையை கேட்கவே வேண்டாம்!
இனி அதிகரிக்கும் கார்பன் அளவை குறைப்பதோடு ஏற்கனவே வளிமண்டலத்தில் இருக்கும் கார்பனின் அளவையும் எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதே உண்மை!!
புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என எவ்வளவோ பேசினாலும் சில முயற்சிகளை செய்தாலும் கார்பன் அளவு என்னவோ எப்போதும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.
Credit: Express
செய்யவேண்டியவை
ஒவ்வொரு நாடும் வளரவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் விதிகளை பின்பற்றாமல் தொழிற்சாலைகளில் இருந்தும் அன்றாட பயன்பாடுகளில் இருந்தும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை காற்றில் வெளியிடுகின்றன. உண்மையில்
ஒரு நாடு மட்டும் அளவுக்கு அதிகமாக கார்பனை வெளியிட்டாலும் அது மொத்த வளிமண்டலத்தையுமே பாதிக்கும் என்பதால் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பாதிப்பிலிருந்து நம் பூமியை காப்பற்ற முடியும். அதனால் முடிந்தவரை செயற்கைகளை தவிர்த்து இயற்கை வழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்தாவது வெளியிடப்படும் கார்பனின் அளவை குறைக்க வேண்டும்.
சொல்லப்போனால் இனி அதிகரிக்கும் கார்பன் அளவை குறைப்பதோடு ஏற்கனவே வளிமண்டலத்தில் இருக்கும் கார்பனின் அளவையும் எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதே உண்மை. அதனால் இனியும் தாமதிக்காமல் கார்பன் – டை- ஆக்ஸைடின் அளவு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.