கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் உபரி நீர் திறக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை நீர் மட்டம் தன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக திறக்கப்படுகிறது.
தமிழகத்தின் காவிரிப் போராட்டம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது. அரசர் காலத்திலிருந்து நடக்கும் காவிரிப் போராட்ட வரலாற்றில், தமிழக மன்னர்கள் போர்த் தொடுத்து காவிரியை அழைத்து வந்த கதைகளும் உண்டு.

இப்போது காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்தாயிற்று. மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்டது. எந்த ஒரு இழுபறியும் இல்லாமல், கர்நாடக கனமழை கை கொடுக்க, காவிரி சிக்கலின்றி தமிழகம் வந்தடைந்தது. ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறோம்? தமிழகம் வந்த காவிரியை அப்படியே கடலுக்குத் தான் அனுப்பப் போகிறோம்.
வீணாகும் காவிரி
இது இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல. எப்போதும் நீரை சேமித்து வைக்க வழிவகைகளை செய்யாமல் அப்படியே கடலில் கலக்க விடுவது நடந்து கொண்டே தான் இருக்கிறது.
- 2005ம் ஆண்டு 70.96 டிஎம்சி வீணாக கடலில் கலந்துள்ளது.
- 2006ம் ஆண்டு 42.85 டிஎம்சி வீணாக கடலில் கலந்துள்ளது.
- 2007ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பி 100 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.
- 2008ம் ஆண்டு 78.15 டிஎம்சி, 2009ம் ஆண்டு 65.42 டிஎம்சி வீணாக கடலில் கலந்துள்ளது.
- கடந்த 2013ம் ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு 16 மதகுக்கண் வழியாக 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.
- இப்போது 2018-ல் விநாடிக்கு 80,000 கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப் படுகிறது. இதனால் இன்னும் 40 நாட்களில், குறைந்த பட்சம் 40 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீணாகாமல் தடுக்க என்ன செய்யலாம் ?
- பெருமளவு நீர் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க, ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரியிருக்கலாம் என்கிறார்கள் நீர்பாசன வல்லுநர்கள்.
- கர்நாடகாவோ, முடிந்த அளவுக்கு காவிரி நீரை பயன்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.விவசாய பயிர்களிலும் கர்நாடகா தனக்கே உரிய யுக்திகளை கையாளுகிறது.
- கர்நாடகாவின் காவிரி பாசனப் பகுதிகளில் அதிகப்படியாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கரும்பு பணப்பயிராகும். அதே நேரம், தண்ணீரை மிக அதிக அளவில் உறிஞ்சக்கூடியது.
- அதே போல தமிழகத்திலும், கிடைக்கும் காவிரி நீரை முழுவதுமாக பயன்படுத்தும் படியான திட்டமிடல்கள் அவசியமாகின்றன.
- புதர் மண்டிக் கிடைக்கும் கால்வாய்கள் தூர்வாரப்படுவதன் மூலம், தண்ணீர் சிக்கலின்றி கடைசி வரை செல்ல வழி செய்ய முடியும்.
- காவிரி கடலுக்கு செல்லும் வழியில், சிறு சிறு தடுப்பணைகளைக் கட்டலாம். இதன் மூலம் சேமிக்க இயல்வது மட்டுமன்றி, நிலத்தடி நீர் மட்டத்தையும் பெருக்க முடியும்.
- விவசாயிகளும் தண்ணீர் வரும்போது அதனை சேமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கால்வாய்களை தூர்வாருவது ஒருபுறம் என்றால் விவசாயிகளும் தங்கள் தரப்பு முயற்சிகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இனியும் வெறுமனே போராடிக்கொண்டு மட்டும் இராமல், ஆக்கப் பூர்வமாக சிந்தித்து தீர்வைத் தேட முயல வேண்டும். போராடிப் பெற்ற நீரை, சரியான முறையில் உபயோகப்படுத்திக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.