பவளப் பாறை 101: பவளப் பாறைகள் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்!

Date:

பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) எனப்படும் பவளப் பாறைத்திட்டு பாதி அழிந்துள்ள நிலையில், உலகில் உள்ள மற்ற பவளப் பாறைகளும் அழிவின் விளிம்பில் தான் உள்ளன. மனிதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களும் அதிகரித்து வரும் கடல் வெப்பமும் தான் இவற்றிற்கு காரணம்.

உருவாக்கம்

கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக அடர்ந்து வாழ்ந்து அழகாக காட்சி அளிக்கும் பவளப் பாறைகள், பவளம் (Coral) என்னும் உயிரினத்தால் உருவாகின்றன. பவளம் என்னும் உயிரினத்தின் இளம் நிலையான லார்வா கடலில் உள்ள பாறைகளைத் தேடி இறுக பற்றிக் கொள்ளும். பின்பு அது வளர்ந்து பாலிப் என்னும் அடுத்த நிலையினை அடையும் போது அது கால்சியம் கார்பனேட்டை வெளியேற்றும். இந்த கால்சியம் கார்பனேட் படிந்த தளம் மேலும் பல பாலிப்கள் வந்து வளர உதவுவதால் மேலும் மேலும் பாலிப்கள் வந்து பற்றிக் கொண்டு வளர்ந்து பவளப் பாறைகள் உருவாகும். கடலில் இறந்த தாவரங்கள், உயிரினங்கள், பாசிகள் போன்றவற்றின் எச்சங்கள் இவற்றில் படியும் போது இவை இன்னும் வலுப்பெறுகின்றன. காலப்போக்கில் இந்த கால்சியம் கார்பனேட் அழுத்தத்தால் சுண்ணாம்பாக மாறிவிடும்.

பவளப் பாறைகள் கடல் அலைகளின் வேகத்தை குறைப்பதால் கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களாலான உயிரினம் தான் என்றாலும் இவை மற்ற நுண்ணுயிரிகளை உண்டு தான் உயிர் வாழ்கின்றன. இவற்றிலுள்ள பாலிப்ஸ் இறந்துவிட்டால் இந்த பவளப் பாறைகளும் இறந்துவிடும்.இந்தப் பாலிப் தான் கடலிலுள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு இவற்றுக்குக் கடினத் தன்மையையும் பல வகையிலான தோற்றங்களையும் தருகின்றன.

fishes eating coral reef

Credit: the Spruce Pets

முக்கியத்துவம்

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த பவளப் பாறைகள் பல விதங்களில் உதவுகின்றன. இவை பல உயிரினங்களுக்குத் தஞ்சம் அளிக்கின்றன. பலவிதமான வண்ண மீன்கள், பாசி வகைகள் போன்றவையும் கடற் பறவைகள், பாலூட்டிகள், ஒட்டு உயிரினங்கள் போன்றவையும் பவளப் பாறைகளைச் சார்ந்தே வாழ்கின்றன. பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உணவளிக்கும் இடமாகவும் இருக்கின்றன. பவளப் பாறைகள் இல்லாமல், கடலில் வாழும்  தாவரங்கள் மற்றும் விலங்குகள் இறக்க நேரிடும். பவளப் பாறைகள் கடல் அலைகளின் வேகத்தை குறைப்பதால் கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கின்றன. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்துச் சுற்றுப்புறச்சூழலையும் மேம்படுத்துகின்றன. பவளங்கள் கடல் நீரில் கரைந்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை புது பவளப் பாறைகளை உருவாக்க பயன்படுத்துவதால் கடலின் கார்பன் டை ஆக்ஸைடு அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. சில இடங்களில் பவளப் பாறை திட்டுகளை முக்கிய மருந்துகளாக கூட  பயன்படுத்துகின்றனர்.

காரணங்கள்

தொழிற்சாலைக் கழிவுகளை கடலில் கலப்பது, பவளப் பாறைகளை சுண்ணாம்பிற்காக வெட்டி எடுப்பது, கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் பவளப் பாறைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கடலோர பகுதிகள் விரிவாக்கம், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப் பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள். பவளப் பாறைகள் இல்லாமல் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்தால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கையாக பவளப் பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.

வருடத்திற்கு இரண்டு இன்ச் என்ற வீதத்தில் வளர்வதால் பவளப்பாறைகள் உயிர் வாழும் விகிதம் 85% ஆக உள்ளது!

இடமாற்றம்

ஜோர்டான் நாடு, அக்வபா வளைகுடாவில் (Red Sea) உள்ள பவளப் பாறைகளை இடமாற்றம் செய்துள்ளது. ஏனெனில் இந்த இடம் நகர்ப்புற வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுவதால் பல பிரபலமான ஸ்கூபா டைவிங் இடங்களை சுற்றுலா பயணிகளால் காண முடிவதில்லை. அதனால் அங்கு இருக்கும் பவளப் பாறைகளை இடமாற்றம் செய்துள்ளது. மேலும் அந்த இடங்களை சுற்றுலா பயணிகளுக்காக திறந்துள்ளது. உண்மையில் இது இயற்கை பாதுகாப்பை விட சுற்றுலா தேவைகாகவே செய்யப்பட்டுள்ளது என்றாலும் இதன் மூலம் தேவைப்படும் போது  இறக்கும் தருவாயில் உள்ள பவளப் பாறைகளை பாதுகாக்க முடியும்.

scuba diving near coral reef

Credit: Thrillophilia

2012 ஆம் ஆண்டு இதற்கான பிரத்யேக குழுக்கள் மூலம் பவளப் பாறைகளில் இருந்து பவளங்களை எடுத்து கூடைகளில் வைத்து நீருக்கடியிலேயே சுமார் இரண்டு மைல் தூரம் எடுத்து செல்லப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்ததும் இந்த பவளங்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்ட உலோக கட்டமைப்புகள் மூலமும், நீருக்கடியில் பயன்படுத்த பயன்படும் சிமெண்ட் மூலமும் செயற்கையாக நடப்பட்டன. சேதமடைந்த பாறைகளின் மீது புது பவளங்கள் நடப்பட்டும் சிறிய பவளக் கூட்டங்கள் நர்சரிக்களிலும் வளர்க்கப்பட்டன. இந்த மாற்று நடவு வெற்றிகரமாக முடியும் வரை இந்த பகுதிகள் முழுவது கண்காணிக்கப்பட்டு 2018 புது இடங்கள் மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டன. ஆனால் இங்கு வந்த பல ஸ்கூபா வீரர்களுக்கு இங்கு உள்ள பவளப் பாறைகளில் பல செயற்கையாக நடப்பட்டவை என்பது தெரியவில்லை. இந்த நான்கு வருடங்களில் வருடத்திற்கு இரண்டு இன்ச் என்ற வீதத்தில் வளர்ந்துள்ளதால் பவளப்பாறைகள் உயிர் வாழும் விகிதம் 85% ஆக உள்ளது. இது முன்பு இருந்த 60 – 65% ஐ விட அதிகம்.

இந்த வளைகுடாவில் இருக்கும் சுமார் 127 பவள சிற்றினங்கள் ப்ளீச்சிங் விளைவால் பாதிக்கப்படாமல் இருக்கின்றன. அதாவது அதிக வெப்பநிலையையும் தாங்கும் திறனுடன் இருக்கின்றன. பவளப் பாறைகளில் வாழும் அல்கா நுண்ணுயிர்களே (zooxanthellae) பவளப் பாறைகளின் வண்ணமயமான நிறங்களுக்கு காரணம். கடல் நீர் அதிகமாக வெப்பமாக இருக்கும் போது இந்த அல்கா நுண்ணுயிர்களை பவளப் பாறைகள் வெளியேற்றுவதால், பவளப் பாறைகளின் நிறங்கள் நீங்கி வெண்மையாக மாறும். மேலும் அந்தப் பவளப் பாறைகளில் இருந்த பல்வகைப் பட்ட உயிர்ச்சூழல் தொகுதியும் அழிவடையும். இந்த நிகழ்வே பவள வெளுப்பு (Coral Bleeching) எனப்படுகிறது. பொதுவாக இது போன்ற பவள வெளுப்பு நிகழும் போது மீண்டும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பவளப் பாறைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் சில இடங்களில் இன்னும் நிலைமை மோசமாவதும் உண்டு.

coral reef before and after coral bleeching

Credit: Climate Home News

இது போன்ற முயற்சி இதற்கு முன்பு ஹவாய் மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் சுற்றுலா தேவைக்காக இப்படி முதலில் செய்தது ஜோர்டான் நாடு தான். இது போன்று பவளப் பாறைகளை சில மைல் தூரத்திற்கு அப்பால் நடுவதில் முழுவதுமாக வெற்றி காண முடிந்து, மாசுபாடு நிறைந்த சூழலில் கூட  இவற்றால் உயிர் வாழ முடிந்தால் உலகின் பிற பகுதிகளில் உள்ள இறந்து கொண்டிருக்கும் பல பவளப் பாறைகளை மீண்டும் உருவாக்க முடியும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!