பூமியின் மொத்த பரப்பில் சுமார் 71 சதவிகிதம் பெருங்கடல்களால் சூழ்ந்துள்ளது. பூமிக்கு வரும் சூரிய ஒளியில் 90% கடற்பரப்பில் தான் விழுகிறது. அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் கடல்களில் உள்ள உயிரி அமைப்பு சிதைந்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் முதல் படியைத் துவங்கியிருக்கிறது ஐரோப்பிய யூனியன். அட்லாண்டிக் கடலின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

அட்லாண்டிக் கடல்
நம் கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல் அட்லாண்டிக் தான். பூமியின் மொத்த மேற்பரப்பில் 20 சதவிகிதத்தை இந்தப் பெருங்கடல் ஆக்கிரமித்திருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அட்லாடிக் கடலில் கொட்டப்படும் குப்பையின் அளவு 669 மடங்கு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியளித்திருக்கிறது. அதாவது இன்றைய தேதியில் இந்தக் கடலில் ஒரு கிலோமீட்டருக்கு 5,80,000 பிளாஸ்டிக் பொருட்கள் மிதக்கின்றன. இது மாபெரும் சூழியல் அழிவை ஏற்படுத்தும் என இயற்கை சார் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். பெருங்கடல்களில் இப்படி குப்பைகள் கொட்டப்படுவது ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியையும் பாதிக்கும். இதனைத்தடுக்கவே ஐரோப்பிய யூனியன் இந்த பிரம்மாண்ட திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பெருங்கடலின் ஆயுள்
எடின்பர்க் பல்கலைகழகத்தின் தலைமையில் 30 அமைப்புகள் இந்த திட்டத்தில் கைகோர்த்திருக்கின்றன. இந்த ஆய்வுக்குழு ஆர்க்டிக் முதல் தென் அமெரிக்கா முதல் உள்ள கடல்பரப்பை ஆய்வு செய்யும். இதற்காக கடலுக்குள் ஆய்வு செய்யும் ரோபோக்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் உயிரினங்கள் காலநிலை மாற்றத்தால் எத்தகைய ஆபத்தை சந்தித்திருக்கின்றன என்பதை இக்குழு ஆராயும்.
இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் சார்பில் 10 மில்லியன் யூரோக்களும் மற்ற முப்பது நிறுவனங்கள் இணைந்து 30 மில்லியன் யூரோக்களும் செலவிட இருக்கின்றன. இந்த ஆய்வில் பங்கேற்கும் பேராசிரியர் மர்ரி ரோபர்ட்ஸ் அட்லாண்டிக் கடல் ஆக்சிஜன் வாயுவை வேகமாக இழந்துவருகிறது. இதற்கு வெப்பமயமாதலே காரணம்” என்கிறார். இந்தகக்குழு கடல் உயிரியல் அமைப்பின் மிக முக்கிய பங்கைவகிக்கும் பவளப்பாறைகள் மற்றும் அவற்றின் அழிவுக்கான காரணங்களை கண்டறிய உள்ளது.

முக்கிய ஆய்வுகள்
இந்த திட்டத்தின் மூலம் கடல் வெப்பம், உப்புத்தன்மை, பிராண வாயு, கடலின் உயிரி அமைப்பு எப்படி வெப்பத்தினால் பாதிக்கப்படுகிறது மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. கடலின் இயற்கை சூழல் எப்படி மாற்றம் பெறுகிறது என்பது குறித்த புரிதல் நமக்கு கிடைத்தால் தான் அதை எப்படி தடுக்கலாம் என்ற ஆய்வில் நம்மால் வெற்றி பெற முடியும்.