இயற்கையின் பெரும் கரங்களில் தன்னிலை மறத்தல் போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? எங்கு பார்த்தாலும் கடல் அதற்கு நடுவே ஒரு வாழ்க்கை இதனை கற்பனை செய்து பாருங்கள். நீலக்கடலின் நடுவே தங்குவது என்பது பூலோகச் சொர்க்கம் போன்றது. அத்தகைய ஆசைக்கு ஜப்பானின் கடலில் ஒரு தீர்வு உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்று கடலின் நடுவே விடுதி ஒன்றைத் துவங்கியிருக்கிறது. கப்பலில் மிதந்துகொண்டே தங்களது விடுமுறையைக் கழிக்க பல நாட்டவர்களும் இங்கு வருகிறார்கள். Guntu எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விடுதிக்கு ஜப்பானிய மொழியில் கடலில் கிடைக்கும் அதிசய நீல நிற நண்டு என அர்த்தமாம். கப்பலுக்கு ஏன் நண்டு எனப் பெயரிடவேண்டும் என்கிறீர்களா? அதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. இந்தக் கப்பலின் நிறம் காலையில் வெண்மை நிறமாகவும் சாயந்தரம் நீல நிறமாகவும் மாறக்கூடியது.

நீல நண்டு
தெற்கு ஜப்பானில் உள்ள கடற்கரை நகரமான ஒசாகாவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் இந்தக்கப்பல் நிலைபெற்றிருக்கிறது. கப்பலுக்கு உள்ளேயே உணவகம் ஒன்றும் செயல்படுகிறது. வாடிக்கையாளர் விரும்பும் எந்த வகையான உணவும் சுடச்சுட சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஜப்பானில் விருந்தினர்களுக்காகக் கட்டப்படும் மர மரத்தினாலான மாளிகையைப்போல இந்தக்கப்பலை வடிவமைத்திருக்கிறார் Yasushi Horibe.

கப்பலின் உள்ளேயே பொழுதுபோக்கு அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பயணிகள் விருப்பப்பட்டால் அருகே இருக்கும் தீவுகளுக்கு சென்றுவரலாம். அதற்கென சிறிய படகுகள் கப்பலில் இடம்பெற்றுள்ளன. தீவுகளில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்துவிட்டு கப்பலுக்குத் திரும்பலாம். கால அளவு என்று எதுவும் கிடையாது.

நிறம் மாறும் கப்பல்
கப்பலின் வெளிப்புறத்தில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் வண்ணப்பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சூரிய ஒளியின் பிரகாசத்தைப் பொறுத்து நிறம் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் சூரிய ஒளி கப்பலின் மீது விழும்போது வெண்மை நிறமாகவும், மாலை வேளைகளில் கடலின் மீது சூரிய ஒளி எதிரொளிப்பதால் நீல நிறமாகவும் மாறும்.
இந்தக் கப்பலில் மொத்தம் 19 அறைகள் உள்ளன. அனைத்து அறைகளில் இருந்தும் கடலினை தெளிவாக பார்க்க முடியும். மீன்பிடிக்க ஆசைப்படும் பயணிகளுக்கு தூண்டிலும் வழங்கப்படுகிறது.

கப்பலில் யோகா மற்றும் தியானம் செய்ய பக்கவாட்டில் இடம் தரப்பட்டுள்ளது. வீடு மற்றும் அன்றாட அலுவல்களுக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது. அதைத் தருவதற்கான இடமாக இந்தக்கப்பல் இருக்க வேண்டும் என விரும்பியதாக கப்பலை வடிவமைத்த Yasushi Horibe தெரிவித்திருக்கிறார். தற்போது இயந்திரத் தனமான நகர வாழ்க்கையிலிருந்து அமைதியைத் தேடி ஓடும் ஜப்பானிய மக்களின் முதல் தேர்வு இந்த விடுதியாகத்தான் இருக்கிறது.

மாலை வேளைகளில் கடலுக்கு நடுவே, மிதக்கும் விடுதியில் கையில் தூண்டிலுடன் அமர்ந்திருப்பது சொர்க்கம் மாதிரிதானே ? ஆனால் முன்பே சொன்னதுபோல் கப்பலின் பெயர் Guntu.