வட கிழக்கு, தென் மேற்கு எனத் தொலைக்காட்சியில் சொல்வதைக் கேட்டிருப்போம். மழை இந்தியா முழுவதும் வெவ்வேறு மாதங்களில் பொழிகிறது. இவற்றை வட கிழக்குப் பருவ மழை, தென் மேற்குப் பருவ மழை, மற்றும் கோடை மழை என மூன்றாகப் பிரிக்கலாம். இந்த மூன்று வித மழைப்பொழிவுகளைப் பற்றியும் கீழே காணலாம்.

தென்மேற்குப் பருவ மழை
ஜூன் முதல் தேதியிலிருந்து தென்மேற்குப் பருவ மழையானது தொடங்கும். தார் பாலைவனத்தில் உண்டாகும் அதீத வெப்பத்தினால் காற்று சூடாகி மேலேறும். அதனால் காற்றின் அழுத்தம் மத்திய இந்தியா முழுவதும் குறைய ஆரம்பிக்கும். சூடான காற்று இமயமலையினைத் தாண்ட முடியாமல் அங்குள்ள ஈரப்பதத்தை ஈர்த்து மேகங்களை உருவாக்கும். பின்பு அம்மேகங்கள் குளிர்ந்து மழையாகப் பொழியும். அதே போல் காற்றழுத்தத்தைக் குறைக்க அரபிக்கடலில் இருந்து குளிர்ந்த காற்றானது வடஇந்தியா நோக்கிப் பயணிக்கும். அக்குளிர்ந்த காற்று பயணிக்கும் வழியெல்லாம் மழையினைக் கொடுக்கும். தெற்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றினால் உண்டாகும் மழையினால் இதன் பெயர் தென்மேற்குப் பருவமழை என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் இதன் மூலமே மழையைப் பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக 390 அங்குல மழை தென்மேற்குப் பருவ மழையினால் கிடைக்கிறது. கேரளாவில் தொடங்கி வட இந்தியா முழுவதும் மழை பரவுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் இப்பருவ மழை நீடிக்கிறது. கேரளா,கர்நாடகா, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகப் பகுதிகள், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்கள் அதிக மழையினைப் பெறுகின்றன.

வட கிழக்குப் பருவமழை
மத்திய இந்தியாவில் நிலைகொள்ளும் குளிர்ந்த காற்று, வங்கக் கடலிலிருந்து வீசும் காற்றினை சந்திக்கும் போது பெய்யும் மழையே வடகிழக்குப் பருவ மழை ஆகும். தென்னிந்தியா அதிக மழையைப் பெறுவது இந்தப் பருவத்தில்தான். தமிழகத்தின் ஆண்டு மொத்த மழையளவில் 48 முதல் 60% வரை வடகிழக்குப் பருவ மழையினால் கிடைக்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை இப்பருவம் நீடிக்கிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை:
கடலில் ஏற்படும் காற்றின் அழுத்தத்தை கணினி மூலம் பகுப்பாய்வு செய்து அதனை வரைபடத்தில் புள்ளிகளாகக் குறிப்பார்கள்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:
காற்றழுத்தப் புள்ளிகளைக் கொண்டு ஒரு வட்டத்தினை கணினியில் வர முடியுமானால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எனப்படுகிறது.
புயல்:
ஒன்றிற்கும் மேற்பட்ட வட்டத்தினை வரைந்தால் அது புயல் என்று அழைக்கப்படும்.
கோடை மழை

தரைப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பத்தினால் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும். அதனை நோக்கிக் கடல் காற்றின் குளிர்ந்த காற்று வீசும். அப்போது மேகங்கள் உருவாகி மழையினைக் கொடுக்கும். இதனை வெப்பச்சலன மழை எனவும் குறிப்பிடுகிறார்கள். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெப்பச்சலன மழை அடிக்கடி ஏற்படும்.
Also Read: பூமியின் ஆண்டின் பாதியளவு மழை வெறும் 12 நாட்களில் பொழிகிறது !! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு.